விபத்தில் சிக்கிய விமானப்படை விமானம்- 17 நாட்களுக்கு பிறகு உடல்கள் மீட்பு!

அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் 17 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம், அசாமில் உள்ள ஜோர்ஹாட்டில் இருந்து அருணாசலப்பிரதேசத்தில் உள்ள ஷியோமி மாவட்டத்துக்குக் கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. பயணத்தை தொடங்கிய அரைமணி நேரத்தில், அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டு வந்தனர். விமானம் மாயமான பகுதி, மலைகள் அதிகமுள்ள அடர்ந்த வனப்பகுதி என்பதால் விமானத்தைத் தேடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அருணாசலப்பிரதேசத்தின் லிபோ என்ற இடத்துக்கு வடக்கில் 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில், மாயமான ஏ.என்.32 விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டன.

விமானத்தில் பயணம் மேற்கொண்ட 13 பேரும் உயிரிழந்து விட்டதாக விமானப்படை அறிவித்தது. விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் இறந்தவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, உடல்களை மீட்கும் பணி நடைபெற்றது. எனினும் மோசமான வானிலை காரணமாக , உடல்களை மீட்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், விபத்து ஏற்பட்டு 17 நாட்களுக்குப் பிறகு, பலியானவர்களில் 6 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. ஏனைய 7 பேரின் உடல்கள் சேதம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: