ராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க குலுக்கல் சீட்டு முறையில் தீர்வு காணும் மக்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், காவிரி குடிநீரை பிடிக்க கிராமம் ஒன்றில் மக்கள் குலுக்கல் சீட்டு முறையில் தீர்வு கண்டு வருகின்றனர்.

பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம் மாவட்டத்தில், தண்ணீர் பற்றாக்குறையை பற்றி சொல்லவா வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்தால் மட்டுமே விவசாயத்துக்கும், மக்களின் குடிநீர் பயன்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். கடந்த 4 ஆண்டுகளாக அம்மாவட்டத்தில் சரியாக மழை பெய்யாததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கமுதி, கடலாடி, திருப்புல்லாணி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க இரவு பகலாக காத்திருக்க வேண்டியுள்ளது. மாவட்டம் முழுவதுமே தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. குடிநீருக்காக பெண்கள் காலி குடங்களுடன் கொளுத்தும் வெயிலில் அலைந்து திரிகின்றனர்.

இந்நிலையில் தான் கருங்குளம் கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரும் காவிரி குடிநீரை, குலுக்கல் சீட்டு முறையில் தேர்வு செய்து மக்கள் பிடித்து வருகின்றனர். தண்ணீர் திறந்து விடுவதற்கு முதல் நாள் அன்று குலுக்கல் முறையில் தண்ணீர் பிடிக்க தேர்வு செய்யும் புதிய நடைமுறையை கிராம மக்களே சுமூகமாக நடத்தி வருகின்றனர்.

இதன்படி குடங்களை வரிசைப்படுத்தி வீட்டுக்கு 2 குடம் என தண்ணீர் பிடித்து வருகின்றனர். இது பற்றி பேசிய கிராம பெண்கள் வீட்டுக்கு ஒரு சீட்டு எழுதி அனைவரும் ஒரே இடத்தில் கூடி, சீட்டை குலுக்கி போட்டு பெயரை தேர்வு செய்வதாக கூறினர்.

தண்ணீர் பிடிப்பதில் போட்டி ஏற்பட்டு பிரச்சனையாவதை தடுக்கவே, சீட்டு குலுக்கி போட்டு தண்ணீர் பிடிக்கும் முறையை தற்போது கடைபிடித்து வருவதாக கூறினர். தண்ணீர் கொஞ்சமாக வந்தாலும் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு, தாங்களும் குடிப்பதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறியுள்ளனர்.

மேலும் பேசிய பெண்கள் சீட்டு குலுக்கி போடுவதில் 4 பேர் வந்தால் கூட, அதில் இருவர் மட்டுமே பைப்பில் தண்ணீர் பிடிக்க முடிவதாகவும், அடுத்த இருவர் பிடிப்பதற்குள் தண்ணீர் திடீரென்று நின்று விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டால், மோட்டார் ரிப்பேராகி விட்டது. அடுத்த தவணை தண்ணீர் வருவதற்குள் மோட்டாரை சரி செய்து தருகிறோம் என அலட்சியமாக கூறுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: