வறட்சியின் பிடியில் சென்னை – என்ன சொல்கிறார் ‘மழை மனிதன்’?

சென்னையில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்த போது, மக்கள் குழந்தைகளைப் போல சிரித்துக் கொண்டு, வீடுகளின் பால்கனியில் இருந்து வெளியே கை நீட்டி மழை நீரைப் பிடித்து, சில துளிகளைப் பருகி மகிழ்ந்தார்கள்.

“ஆமாம், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சுமார் 200 நாட்களுக்குப் பிறகு நான் மழையைப் பார்க்கிறேன். இதற்கு முன்பு 2018 டிசம்பர் 5 ஆம் தேதி தான் இப்படி மழை பெய்தது. டிசம்பர் இறுதி வரையில் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதிக்குப் பிறகு மழை நின்றுவிட்டது. இப்போது மழை பெய்திருப்பது அற்புதமான நிகழ்வு” என்று பி.பி.சி. இந்தி செய்திப் பிரிவுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் சேகர் ராகவன் கூறினார்.

மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்த, சென்னையில் உள்ள மழை மையத்தின் நிறுவனர் தனது மதிப்பீடுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

“லேசான தூறல் பயன் தராது. நிலமட்டத் தொட்டிகளில் தண்ணீர் சேகரிக்கும் சிலருக்கு மட்டும் அது உதவியாக இருக்கலாம். (மழை பெய்யாததால்) நிலம் மிகவும் வறண்டு கிடப்பதால், இந்தத் தூறல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்குப் பயன் தருவதாக இருக்காது” என்று அவர் கூறினார்.

டாக்டர் ராகவன் மழை மனிதர் என்று அழைக்கப்படுகிறார். தென் மாநிலத்தைச் சேர்ந்த இந்த நகரில் உள்ள அசாதாரணமான தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மழை நீர் சேகரிப்பு (RWH) திட்டத்தை முன் வைத்தது இவர் தான்.

மற்ற பெருநகரங்களைப் போல அல்லாமல், சென்னை நகரம் தென் மேற்குப் பருவமழையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அக்டோபர் தொடங்கி டிசம்பவர் வரையில் நீடிக்கும் வடகிழக்குப் பருவமழையைத் தான் இந்த நகரம் முழுமையாக நம்பியிருக்கிறது.

சேகர் ராகவன்
சேகர் ராகவன்

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்த காரணத்தாலும், செங்குன்றம், சோழவரம், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை சரியாகப் பராமரிக்காத காரணத்தாலும், இப்போதைய மோசமான நிலைக்குத் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் மிக மோசமாக வற்றிவிட்டது. டேங்கர் லாரிகளில் கிடைக்கும் தண்ணீருக்கு வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டியுள்ளது. பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் நடைபெறும் நேரம் குறைக்கப்பட்டுவிட்டது. நிறுவனங்களும் கூட, வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளன.

“நிலத்தடி நீர் வற்றிவிட்டதால் ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை என்பது பரிதாபகரமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. ஆனால், திறந்த கிணறுகளில் இதுபோல நீர் வற்றிவிடவில்லை. இவ்வளவு வறட்சியிலும் திறந்த கிணறுகளில் தண்ணீர் கிடைக்கிறது. 18 முதல் 20 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது” என்று டாக்டர் ராகவன் தெரிவித்தார்.

பி.பி.சி.யின் நேர்காணல் நடந்து கொண்டிருந்தபோது, டாக்டர் ராகவனுடன் அவசர ஆலோசனை மேற்கொள்வதற்காக இளம் வயதில் இருந்த இல்லத்தரசி சவுமியா அர்ஜுன் என்பவர் வந்தார்.

69 அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட வளாகத்தில் இருந்து தாம் வருவதாக டாக்டர் ராகவனிடம் சவுமியா தெரிவித்தார். “அந்த 69 பேரில், 40 வீடுகளில் வசிப்பவர்கள் எங்கள் வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தும் முயற்சியில் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மற்ற 29 பேரும் சீக்கிரம் ஒப்புதல் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று ராகவனிடம் அவர் கூறினார்.

வறட்சியின் பிடியில் சென்னை - என்ன சொல்கிறார் 'மழை மனிதன்'?

மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துவதற்கு ரூ.2 லட்சம் செலவாகும் என்று அந்த வளாகத்தில் அடிப்படை வசதிகளைக் கவனிக்கும் மேலாளர் கூறியதால் மழை மையத்துக்கு சவுமியா வந்திருந்தார். 69 வீடுகளுக்கு சுமார் 3,000 வீதம் செலவாகலாம். தினமும் தண்ணீர் டேங்கர் மூலம் 24000 லிட்டர் தண்ணீர் வாங்குவதற்குச் செலவிடும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தான் இது.

அந்த வளாகத்தின் மொத்தத் தேவை 35,000 லிட்டர் என்ற நிலையில், இந்த 24,000 லிட்டர் தண்ணீரும் கூட, தேவையைவிட மிகவும் குறைவுதான்.

“இந்தத் தண்ணீர் பஞ்சம் ஏழை, பணக்காரர்களை ஒரே நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. பணமிருக்கிறது, ஆனால் தண்ணீர் கிடையாது” என்றார் டாக்டர் ராகவன்.

வாரக் கடைசியில், 10 நாட்களுக்குள் சவுமியா வசிக்கும் அடுக்குமாடி வளாகத்தைப் பார்வையிட வருவதாக அவரிடம் டாக்டர் ராகவன் உறுதியளித்தார். ஆலோசனை கூறுவதற்காக, முதல்கட்ட ஆய்வுக்கு மழை மையம் கட்டணம் எதுவும் வசூலிப்பது கிடையாது. மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த, குடியிருப்பு வளாகத்தினர் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

“கடந்த இரண்டு மூன்று வாரங்களில், மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துவதற்கு உதவுமாறு கேட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் குறைந்தது 10 தொலைபேசி அழைப்புகளாவது வருகின்றன” என்று பி.பி.சி. இந்தி செய்திப் பிரிவிடம் டாக்டர் ராகவன் தெரிவித்தார்.

வறட்சியின் பிடியில் சென்னை - என்ன சொல்கிறார் 'மழை மனிதன்'?

கால் நூற்றாண்டுக்கு முன்பு டாக்டர் ராகவன் எதிர்கொண்ட சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு, மழைநீர் சேகரிப்பு பற்றி அலைந்து திரிந்து அவர் பிரச்சாரம் செய்தார். அவருடைய தீர்வின் சாதகங்கள் குறித்து ஊடகங்கள் செய்தியாக்கும் வரையில் அவரை மற்றவர்கள் புறக்கணித்து வந்தார்கள். வெப்ப நிலை உயர்வுக்குப் பெயர் பெற்ற இந்த நகரத்தில் நாட்கள் அல்லது வாரங்களில் அளிக்கும் தீர்வை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்வதை கட்டாயமாக்கி உத்தரவிடும் அளவுக்கு அவருடைய திட்டம் பயன்தரக் கூடியதாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த அரசுகள், அந்த முடிவை அமல் செய்வதில் தீவிரம் காட்டவில்லை.

தண்ணீர் பஞ்சத்தை சமாளிப்பதற்கு நீண்டகால அடிப்படையிலான திட்டத்தை உருவாக்குவதில் “அரசியல் உறுதி” இல்லாத காரணத்தால் தான் சென்னையில் நிரந்தரமாகவே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது என்று டாக்டர் ராகவன் நம்புகிறார்.

“இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் தண்ணீர் பஞ்சம் மனிதர்களால் தான் உருவாக்கப்பட்டது. ஏனெனில் சென்னையில் மழை நீரை சேகரிக்க காலம் காலமாக கட்டமைப்பு வசதிகள் இருந்திருக்கின்றன. பல குளங்கள் மற்றும் ஏரிகளில் குப்பைகளைப் போட்டு நிரப்பிவிட்டார்கள். ஏரிகள் மற்றும் அணைகள் ஆண்டுக்கணக்கில் தூர்வாரப்படாமல் கிடக்கின்றன. தண்ணீர் பெறுவதற்கு சரியான வழி இதுவல்ல” என்கிறார் டாக்டர் ராகவன். -BBC_Tamil

TAGS: