தண்ணீர் பிரச்சனை: ‘பெண்களை மாதவிடாய் நாட்களில் குறைவாக தண்ணீர் பயன்படுத்த எப்படி சொல்வது?’

பருவ மழை பொய்த்துப் போனதால் சென்னையின் நீராதாரங்களான ஏரிகள் வறண்டு போனதாலும், கழிவுகள் மேலாண்மையில் தவறியதால் நிலத்தடி நீர் தரமிழந்து உள்ளதாலும், கடும் தண்ணீர் நெருக்கடியினை சந்தித்து வருகின்றது சென்னை.

தண்ணீர் சிக்கலால், பெரும்பான்மையான சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரினை அதிக அளவு விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் சென்னை மக்கள்.

உணவகங்கள், தங்கும் விடுதிகள், நிறுவனங்கள் பலவும் தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிப்படைந்துள்ளன. முன்னரே , சென்னையின் ஒரு நாளைய தண்ணீர் தேவை 1200 மில்லியன் லிட்டர் என்ற போதும் 985 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது,

மேலும் 2031ல் சென்னையின் ஒரு நாளைய தண்ணீர் தேவை 2100 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் , நீராதாரங்கள் அனைத்தும் பாதிப்படைந்து வருவது எதிர்கால நிலையினை கேள்விக்குள்ளாவதாக இருக்கின்றது.

சென்னையின் நீராதாரங்களான ஏரிகளின் நிலை:

சென்னையின் நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு போய் உள்ளது. சுமார் 3645 மில்லியன் கன அடி அளவிற்கு நீரை தேக்கி வைக்கக் கூடிய இந்த ஏரி இப்பொழுது நீரின்றி வறண்டு காணப்படுகின்றது. 3800 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரியில் ஒரு இரண்டு மூன்று இடங்களில் மட்டும் சிறு குட்டையினை போல் நீர் தேங்கியுள்ளது.

தண்ணீர் பிரச்சனை

தண்ணீர் உள்ள மிகக் சிறிய பரப்பும் சேறு மண்டிக் கிடக்கின்றது. இந்த நிலையில் சரியாக தூர்வாரும் பணிகளைக் மேற்கொண்டால் தான் ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீரின் கொள்ளளவினை அளவினை அதிகரிக்க இயலும். மேலும், சென்னையின் நீராதாரங்களான புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஆகிய மூன்று ஏரிகளும் வறண்டு போய் உள்ளன. மேலும் சென்னையின், சின்ன சின்ன நீர் பிடிப்பு பகுதிகளும் வறண்டு போய் உள்ளது.

நிலத்தடி நீர்:

சென்னையின் மற்றுமொரு பெரிய நீராதாரம் நிலத்தடி நீர். நிலத்தடி நீர் , மழையினால் தான் மீள் நிரப்பு செய்யப்படுகின்றது. அறுவடைசெய்யப்படும் நிலத்தடி நீரின் அளவு, மீள் நிரப்பு செய்யப்படும் நிலத்தடி நீரின் அளவினை விட மிக அதிகமாக உள்ளது. 2017ம் ஆண்டின் புள்ளி விபரப்படி , சென்னையில் மீள் நிரப்பு செய்யப்பட நிலத்தடி நீரின் அளவு 170 கன அடி ஆனால், அறுவடை செய்யப்பட்ட நீரின் அளவு 339 கன அடி ஆக உள்ளது.

மேலும், முறையற்ற திடக்கழிவு மேலாண்மை, ரசாயனக் கழிவுகள் நிலத்திற்கு அடியில் செலுத்தப்படுதல் ஆகிய காரணங்களால் , நிலத்தடி நீரின் தரமும் மிகுந்த பாதிப்பினை அடைந்துள்ளது. சென்னையில் மிகப்பெரிய சதுப்பு நிலப்பரப்பான பள்ளிக்கரணை பல நாட்களாகவே ஆக்கிரமிப்பாலும், கழிவுகளை குவிப்பதாலும் பாதிப்படைந்த நிலையில்தான் உள்ளது.

சென்னை மக்களின் அவதி

வடசென்னை காசி மேடு பகுதியில் உள்ள சில குடும்பங்களை சந்தித்து பேசியது பிபிசி தமிழ்.

”தண்ணீர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருகின்றது. ஒரு குடும்பத்திற்கு மூன்று குடம் தண்ணீர் கிடைக்கின்றது. இரண்டு நாட்களுக்கு அந்த மூன்று குடம் நீர்தான். எங்கள் குடும்பத்தில் 5 நபர்கள் உள்ளோம், எப்படி இந்த மூன்று குடத்தினை வைத்து சமாளிக்க முடியும்?”

”அதற்கு மேல் தண்ணீர் வேண்டும் என்றால் ஒரு குடம் 18 ரூபாய். வாரத்திற்கு 1000 ரூபாய் செலவு செய்து தண்ணீர் வாங்கும் நிலையில் நாங்கள் இல்லை . கடலுக்கு அருகில் உள்ள பகுதிகள் என்பதால் நிலத்தடி நீரும் உப்பு கரிப்பதால் அதனையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்” என்கிறார் அப்பகுதியை சேர்ந்த இச்சம்மாள்.

தண்ணீர் பிரச்சனை

இந்த பிரச்சனை குறித்து பேசிய வட சென்னையை சேர்ந்த செல்வி, ”நான் வசிக்கின்ற தெருவில் தண்ணீர் வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. தண்ணீருக்காக பணம் செலவிடும் அளவிற்கு வசதியும் இல்லை. எனக்கு மூன்று பெண் குழந்தைகள், மாதவிடாய் நாட்களில் அவர்களை தண்ணீர் குறைவாக பயன்படுத்துங்கள் என்று சொல்வதற்கே சங்கடமாக உள்ளது” என்கிறார்.

தண்ணீருக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நாகராஜ் கூறுகையில், ”நான் ஒரு கடையில் வேலை செய்கின்றேன் , இப்பொழுது அரைநாள் விடுமுறை சொல்லிவிட்டு தண்ணீர் பிடிப்பதற்காக வந்து இருக்கிறேன், கூலி வேலைக்கு செல்லும் நாங்கள், தண்ணீருக்காக வேலைக்குகூட செல்ல இயலவில்லை” என்கிறார்.

மாலை நேரங்களில் பள்ளி விட்டு வந்ததும் குழந்தைகள், அம்மா, அப்பா என குடும்பத்தில் உள்ள அனைவரும் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று எடுத்து வருகின்றனர்.

தண்ணீருக்காய் காத்திருந்து கழியும் இரவு

பல்லாவரம் பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுநர், விக்னேஷ், ”எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் தான் தண்ணீர் வரும். இரவு 12 மணியில் இருந்து அதிகாலை நான்கு மணி வரை தண்ணீர் வரும், நாங்கள் அதிகாலை வரை விழித்திருந்து தண்ணீர் பிடித்து விட்டு மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், இப்பகுதியில் உள்ள மக்கள் அருகில் உள்ள திரிசூலமலையில் உள்ள பகுதில் உள்ள குட்டைக்கு சென்று துணி துவைப்பது, குளிப்பது போன்ற தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். ஆனால், அவ்வளவு தூரம் சென்றாலும் 200 நபர்களாவது அங்கு இருப்பர், காத்திருந்துதான் தண்ணீரை பயன்படுத்திட இயலும் என்கிறார்.

அதிகரிக்கும் தண்ணீரின் விலை:

தண்ணீர் பிரச்சனை

மேலும் இது குறித்து பேசும் விக்னேஷ் , ”எங்கள் குடியிருப்பில் நான்கு வீடுகள் உள்ளன. மிகவும் நெருக்கடியாக இருப்பதால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துக்கிறோம், 1200 லிட்டர் 5500 ரூபாய் கொடுத்து வாங்கி நான்கு வீடுகளும் பங்கிட்டுக் கொள்வோம். இரண்டு நாட்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதாக இருக்கின்றது. கிட்டத்தட்ட வாரத்திற்கு 10000 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது” என்கிறார்.

தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஐ டி ஊழியர் ஜனனி, ”எங்களது குடியிருப்பில் முன்பு 24 மணி நேரமும் தண்ணீர் வரும், தண்ணீர் பிரச்சனை ஆரம்பித்த நாட்களில், காலை நான்கு மணிநேரம், மாலை நான்கு மணி நேரம் என இரண்டு வேலைகள் கிடைத்தது. இப்பொழுது காலையில் மட்டும் ஒரு மணி நேரம் தண்ணீர் வருகின்றது. அணைத்து தேவைகளுக்கும் அந்தத் தண்ணீர்தான்” என்கிறார்.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நிமிடங்கள் சென்னையில் பரவலாக மழை பெய்தது, இப்போதைக்கு இதுதான் சென்னை மக்களின் நம்பிக்கையாக உள்ளது. -BBC_Tamil

TAGS: