கும்பகோணம்: காஞ்சிபுரம் சோமஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கத்தை மோசடி செய்த பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், கனடா தப்பிச்சென்றார். இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து இருந்ததால், மும்பை விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய போது அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் கைது செய்யப்பட்டார். அவரை கும்பகோணம் அழைத்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை இருந்தது. இந்த சிலை சேதடைந்தவிட்டதால் புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2015ம் ஆண்டு புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதற்காக பக்தர்களிடம் 100 கிலோ தங்கம் தானாமாக பெறப்பட்டு புதிய சிலை செய்யப்பட்டது.
இந்நிலையில் சோமஸ்கந்தர் சிலையை செய்ததில் சுமார் 9 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
100 கிலோ தங்கம் மோசடி
இதனை உரிய முறையில் விசாரிக்குமாறு சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவீன முறையில் சோமஸ்கந்தர் சிலையில் உள்ள தங்கம் குறித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த சிலையை செய்ய கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
தலைமை ஸ்தபதி முத்தையா
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 100 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்ததாக இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இந்த விவாகரத்தில் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உள்பட 10 பேரை கைது செய்தனர்.
தேடப்படும் குற்றவாளி
இதில் முக்கிய குற்றவாளியாக மோமஸ்கந்தர் சிலையை செய்வதில் பங்காற்றிய ராஜப்பா குருக்கள் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ராஜப்பா குருக்கள் வெளிநாடு தப்பி ஓடியதாக ஒரு தகவலை அடுத்து அனைத்து விமான நிலையங்களில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அவர் கனடா நாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தையடுத்து அவரை இந்தியாவிற்கு வந்தால் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.
கனடா தப்பியவர்
இந்நிலையில் அவர் கனடா நாட்டில் இருந்து நேற்று காலை மும்பை விமான நிலையத்துக்கு வந்த போது பாதுகாப்பில் இருந்த விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட ராஜப்பா குருக்களை (87) நேற்று இரவு கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாதவ ராமானுஜர் முன்பு அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, வரும் ஜூலை 5ம் தேததி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.