மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்ட கர்நாடகா.. இன்று அவசரமாக கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசுக்க கர்நாடகா கடிதம் எழுதியுள்ள இந்த பரபரப்பான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைபடம் மற்றும் பட்ஜெட் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கர்நாடகா கடிதம் எழுதியுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்கள் அணை கட்ட தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என கர்நாடகா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்ககூடாது என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஏற்கெனவே உத்தரவிட்டப்படி தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த உள்ளது. மேலும் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை 1.72 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின்போது, பிறப்பித்த உத்தரவையும் கர்நாடகா இதுவரை பின்பற்றவில்லை என்பதால் இந்த கூட்டத்தில் தமிழகம் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தும் என தெரிகிறது. மேலும் டெல்லி செய்திகள்

tamil.oneindia.com

TAGS: