கூடங்குளம் சுற்று பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலேயே அணுக்கதிர் வீச்சு உள்ளது.. மத்திய அரசு

டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலைய வளாககத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு அணுக்கழிவுகளை சேமிப்பதால், எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு மேற்கண்ட பதிலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ளார். கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை அமைப்பு கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு சேமித்து வைக்க அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்படும், மக்களின் கருத்தை கேட்டு பின் அவர்களது அச்சத்தை போக்கி அடுத்த சில ஆண்டுகளில் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10-ம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துது சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது, அதனால் கருத்து கேட்புக் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அச்சம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள் அணுக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. அணு உலையை அமைப்பதிலிருந்து அணு கழிவை அப்புறப்படுத்தும் வரையிலும் தொடர்ச்சியாக மாசு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே தமிழக எம்பிக்கள் கூடங்குளம் விவகாரத்தை கையில் எடுத்து சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக நேற்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க முடியுமா என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், அணுக்கழிவு விவகாரத்தில் உலகம் முழுவதிலும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது. கூடங்குளம் மட்டுமல்ல நாட்டின் மற்ற அணு உலைகளிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது.

இது பாதுகாப்பானது முறை தான் என்றார். இந்நிலையில் மாநிலங்களவையில் கூடங்குளம் விவகாரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் குறித்து, சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை.

இந்த அணுக்கழிவுகள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்பான முறையில் தான் சேமிக்கப்பட்டு வருகிறது. ஆகவே கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது என கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: