புதுடில்லி ; இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. எனவே, நீர் மேலாண்மை குறித்து சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய ‘ஜல் சக்தி’ துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.
இன்று (ஜூலை 1)புதுடில்லியில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அதில் அவர் கூறுகையில், ” இந்திய அரசு, நீர் மேலாண்மை குறித்த நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளது. அதன்படி நீர் மேலாண்மை திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.
நிலத்தடி நீர்மட்டம் குறைவு :
இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனவே, நாம் மழை நீரை சேமிக்க வேண்டும். ஆறுகளை இணைப்பதன் மூலம் வீணாகும் நீரை சேமிக்க வேண்டும். தண்ணீரும் மின்சாரமும் இலவசம் என்ற நிலையை குறைப்பதன் மூலம், நீரும் மின்சாரமும் வீணடிப்பதை தடுக்க முடியும்.
ஒரு சொட்டு நீரையும்…
தண்ணீரை சேமிக்க சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் சேமித்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பாரம்பரியமான வழிமுறைகள் குறித்து ஆராயவேண்டும்.
உச்சபட்ச முக்கியத்துவம் :
இதற்கு விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அரசு சாரா நிறுவனங்களை இணைத்து மிகப்பெரும் அமைப்பாக செயலாற்ற வேண்டி உள்ளது. நீர் சேமிப்பிற்கு உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதும், ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சங்களும் நமக்கு அபாயமணியை ஒலித்துள்ளன,” என்றார்.
மன்கி பாத்தில் பிரதமர் :
கடந்த 2 நாட்கள் முன்னதாக, ‘மன்கிபாத்’ மூலம் உரையாற்றிய மோடி, ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க வேண்டும். நீராதாரங்களை சேமித்து பாதுகாக்கும் உங்களது ஆலோசனைகளை ஜல் சக்தி அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதற்காகவே அந்த துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
இந்தப் பின்னணியில் தான் ஜல் சக்தி துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து, தனது அமைச்சகத்தின் நோக்கங்கள், செயல்படுத்த உள்ள திட்டங்கள், வழிமுறைகள் குறித்து விளக்கியுள்ளார்.
-dinamalar.com