மும்பை நிழல் உலக தாதா என கூறப்படும் தாவூத் இப்ராகிம் கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார்.
பல சட்டவிரோத செயல்கள் மூலம் பணத்தை குவித்த தாவூத் இப்ராகிமுக்கு 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவரை சர்வதேச பயங்ரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக அமெரிக்க அரசு லண்டன் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி என கருதப்படும் ஜபீர்மோட்டி கடந்த ஆண்டு லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் தாவூத்துடன் நேரடி தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இவர் மீது ஆள்கடத்தல் பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் உள்ளன.
எனவே, இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி அங்கு வைத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஜபீர்மோட்டியை நாடு கடத்தக்கோரும் வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது அமெரிக்க அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜான் ஹாக்டி தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளி பாகிஸ்தானின் கராச்சியை மையமாக கொண்டு இயங்குவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதலே அமெரிக்காவின் எப்.பி.ஐ. அதிகாரிகள் தாவூத் இப்ராகிமின் டி.கம்பெனி என்ற குற்ற கூட்டமைப்புகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தான் அவர்களை பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
ஜபீர்மோட்டி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 25 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே நேற்று ஜபீர் மோட்டி கோர்ட்டில் ஆஜரானார். அவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக்கூடாது என்று அவரது வக்கீல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அடுத்த விசாரணைக்கான ஜபீர்மோட்டி ஆகஸ்டு 28-ந் திகதி வீடியோ மூலம் ஆஜராக உள்ளார்.
-eelamnews.co.uk