டெல்லி: 70 வருடங்களாக நேரு குடும்பத்தின் தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது முற்றிலும் விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் படுதோல்வியால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி உள்ளார்.
இதனால். தாங்காத சோகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள் இனி யார் அந்த கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்பார்கள் என்பதையும், அதை தொண்டர்கள் ஏற்பார்களா என்பதையும் காலம்தான் பதில் சொல்லும்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் காலம் பேசாது, ஆனால் எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்து இருந்தார். இது இப்போது காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பொருந்தும்.
1947ம் ஆண்டு நம் தேசம் சுதந்திரம் அடைந்த போது அனைத்து மாநிலங்களிலும் வலிமையாக இருந்தது காங்கிரஸ் கட்சி. மொழி வாரியான பிரிவினைகள் காரணமாக மாநிலம் வாரியாக புதிய சக்திகள் உருவானது. இது ஒருபுறம் எனில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
வளர்ந்த பாஜக
மகாத்மா காந்தியால் இந்த தேசத்தின் முதல் பிரதமராக அடையாளம் காட்டப்பட்ட நேரு காலத்தில் காங்கிரஸ் நல்ல நிலையில் இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து சரிவுகள் ஆரம்பம் ஆனது. அது ராஜிவ் காந்தி காலத்தில் அதிகமாக மாறியது. ஒருகட்டத்தில் ராஜிவ் காந்தி அகாலமரணம் அடையவே காங்கிரஸ் கடும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. அதேநேரம் 2 எம்பிக்களுடன் இருந்த பாஜக அசுர வளர்ச்சியை சந்திக்க தொடங்கியது. இதனால் 1998 முதல் 2014 வரை சுமார் 6 ஆறு ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆண்டது. வாஜ்பாய் பிரதமர் ஆனார்.
10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி
இதற்கிடையே மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அந்த கட்சி மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணித்தது. இதன் விளைவாக வலுவாக கூட்டணி அமைத்து 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியிலே ஆட்சி செய்தது.
காங்கிரஸ் படுதோல்வி
ஆனால் அதன்பின்னர் திடீரென விஸ்வரூபம் எடுத்த மோடி அலை காரணமாக 2014ம் ஆண்டு படுதோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்து. அது போன்ற ஒரு தோல்வியை காங்கிரஸ் எந்த நிலையிலும் சந்தித்து இல்லை. இந்த சூழலில் காங்கிரஸ தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றார். ஆனால் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் தேர்தல் வியூகத்தால் காங்கிரஸ் கட்சி மீண்டும் படுதோல்வி அடைந்துள்ளது.
சமாதான முயற்சி
இதன் காரணமாக விரக்தி அடைந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அன்றைய தினமே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சிகளை காங்கிரஸ் தலைமைகுழு நிர்வாகிகள் மேற்கொண்டனர். ஆனால் ராகுல் காந்தி அதனை ஏற்கவில்லை. இதனால் நிர்வாகிகள் கடும் சோகத்தில் இருக்கிறார்கள்.
விரைவில் புதிய தலைவர்
இறுதியில் இன்று வெளிப்டையாக செய்தியாளர்களை அழைத்து ராஜினாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் ராகுல் காந்தி. தன்னால் நீண்டகாலம் தலைவராக செயல்பட முடியாது என்று கூறியுள்ள ராகுல் காந்தி புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என நிர்வாகிகளை வலியுறுத்தி உள்ளார்.
விலகும் நேரு குடும்பம்
இந்த அறிவிப்பை கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் தாங்க முடியாத சோகத்தில் இருக்கிறார்கள். பல தொண்டர்கள் ராகுல் காந்தி தனது முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள். ஆனால் ராகுல் தான் ஏற்பதாக இல்லை. இதனால் 70 ஆண்டுகள் நேரு குடும்பத்தின் தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ் ( அதிகார ரீதியாக), இப்போது முதல்முறையாக வேறு ஒருவரை அதிகார ரீதியாக ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. யார் தலைவர் ஆவார், இதனை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பார்களா என்பதை… ரஜினி ஸ்டைலில் சொல்வதென்றால் காலம் தான் பதில் சொல்லும்.