சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் திவாரே அணை கடந்த செவ்வாயன்று உடைந்தது. கொங்கன் பகுதியில் சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்துள்ளது. ஆனால் செவ்வாயன்று பெய்த கனமழை காரணமாக நீரோட்டம் அதிகமாகி அணையில் விரிசல் விழுந்தது.
அடுத்து சில தருணங்களில் அங்கிருந்த அனைத்தும் அழிந்துவிட்டது. அங்கு வாழ்ந்த 14 குடும்பங்களும் வெள்ள பெருக்கால் அழிந்தன.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காணாமல் போயினர்.
திவாரே அணை மிகவும் அழகான இயற்கை அமைப்பை பெற்றது. சுற்றிலும் எங்கும் பசுமையை கொண்டிருக்கும். அந்த அணைக்கு அடியில் வஷிஷ்டி என்னும் ஆறு இருக்கும். நீரோட்டத்தின் அழகான ஒளியை கேட்கும் இடத்தில் தற்போது மக்களின் அழுகுரல் கேட்கிறது.
திவாரே பென்வாடி ஆற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். செவ்வாயன்று ஏற்பட்ட வெள்ளபெருக்கால் அந்த கிராமத்தில் இருந்த 14 குடும்பங்களும் பாதிக்கபட்டுள்ளன. மாலை நேரத்தில் அனைவரும் வீட்டில் இரவு உணவு தயார்செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மிகப்பெரிய நீர் அலை 14 வீடுகளையும் அழித்து சென்றது.
ரத்னகிரி மாவட்டம் சிப்லன் என்னும் கிராமத்திலும் கனமழை பெய்தது. செவ்வாயன்று இரவு 8.30 மணிக்கு திவாரே அணை நிரம்பி வழிந்தது. இதை பார்த்த சில கிராம மக்கள், கிராம அதிகாரியிடம் தெரிவித்தார்கள். இது நடந்து ஒரு மணி நேரத்திற்குள் அணை உடைந்து கிராமம் முழுவதும் வெள்ளமயமாக காணப்பட்டது.
தற்போது வீடுகள் இருந்த தடம் தெரியாமல் காலி நிலமாக காணப்படுகிறது. நீர் அலைகள் சில சிறிய மரங்களை வேரோடு சாய்த்தது. சில பெரிய மரங்கள் இந்த வெள்ளத்தை சமாளித்து நின்று கொண்டிருக்கிறது. அவ்வாறு நின்ற பெரிய மரங்களின் அடியில் சிறு சிறு விநாயகர் கோவில் இருந்த தடமே இல்லாமல் போனது.
இந்த வெள்ளப்பெருக்கிற்கு பிறகு நிர்வாகம் முழு கவனத்துடன் இருந்து வருகிறது. திவாரே அணைக்கு அருகில் யாரும் அனுமதிக்கபடவில்லை. வாகனங்கள் 15 கிலோமீட்டருக்கு முன்னரே நிறுத்தபடுகிறது. அணைக்கு அருகில் நடந்து தான் செல்ல முடிகிறது.
அணைக்கு அருகில் உள்ள இடம் முழுவதுமாக காலி செய்யப்பட்டது. எந்த வீடும் அங்கே காணவில்லை. இருக்கும் சில வீடுகளும் உடைந்து சிதைந்த நிலையில் இருப்பதால் அங்கே இருந்த மக்கள் அனைவரையும் திவாரே கிராமத்திலிருக்கும் பள்ளிக்கு இடம் மாற்றியுள்ளனர்.
மனிதர்களுக்கு இந்த நிலைமை என்றால் மிருகங்கள் இதை விட மோசமான சூழலில் உள்ளது. சிலவை அடித்து செல்லப்பட்டன. சிலவை உயிருடன் உள்ளன. மனிதர்கள் இடம் பெயர்ந்தனர். ஆனால் மிருகங்கள் அங்கேயே உள்ளன. சிலவைகளால் காயமடைந்ததால் நகர முடியவில்லை.
மகாராஷ்டிர மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் அந்த இடத்தை புதன் மாலை 7.15 நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அவருடன் அமைச்சர் ரவீந்திர வாய்கரும் பாதிக்கப்பட்ட இட்த்தை நேரில் சென்று பார்த்தார்.
அங்கு செல்வதற்கு முன்பாக அவர்கள் இருவரும் பாதிக்கப்பட்ட மக்களை காம்தே மருத்துவமனையில் சென்று பார்த்தார்கள். பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிரிஷ் மஹாஜன் “தற்காலிகமாக மக்களை பள்ளியில் தங்க வைத்துள்ளோம். இன்னும் 4 மாதங்களில் நல்ல உறுதியான வீடு கட்டி தர மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்” என கூறினார்.
முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் இந்த சம்பவத்திற்கு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார். “மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும். இதை விசாரித்து இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். -BBC_Tamil