தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தான் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கப்போவதாகவும், தான் செய்தது தேசத் துரோகமல்ல என்றும், இது தேசத் துரோகமென்றால் அதை தான் தொடர்து செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார்.
“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக இந்திய அரசு ஆயுத உதவியும் பண உதவியும் செய்ததால், உலக நாடுகளிடம் ஆயுதம் வாங்கி, சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரடியாகச் சென்று மனுவாக அளித்தோம். 17 முறை அவரை இதற்காகச் சந்தித்திருக்கிறேன்.
- தேச துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை
- மாநிலங்களவை தேர்தல்: ம.தி.மு.க. சார்பில் வைகோ போட்டி
இந்தக் கடிதங்களைத் தொகுத்து, I Accuse என்ற தலைப்பில் அண்ணாமலை மன்றத்தில் நூல் வெளியிடப்பட்டது. அதன்படி என் மீது தேசத் துரோக வழக்குத் தொடரப்பட்டது. ‘ஆமாம் நான் அப்படித்தான் பேசினேன். இலங்கைத் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டால் நாதி இல்லையென்று போய்விடாது. இங்கிருந்து ஆயுதம் ஏந்திச் சென்று போராட தயாராகவும் இருப்பார்கள். நான் அதற்கு தலைமை ஏற்றுச் செல்வேன்’ என்று பேசினேன்.
அந்த வழக்கில் நீதிமன்றம் விசாரித்தது. இப்படிப் பேசினீர்களா என்றால், ஆமாம் அப்படித்தான் பேசினேன் என்று சொன்னேன். ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணமென்று பேசினேன். அவர்கள் நாதியற்றுப் போகமாட்டார்கள் என்று பேசினேன்.
இங்குள்ள இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு போவீர்களா என்று கேட்டபோது, ஆமாம் என்றேன். ஆயுதம் ஏந்திப் போராடச் செல்வீர்களா என்று கேட்டபோது ஆமாம் என்றேன். அந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்டேன்.
இதற்குப் பிறகு அதே புத்தகத்தை ‘குற்றம்சாட்டுகிறேன்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து ராணி சீதை மன்றத்தில், நெடுமாறன் வெளியிட, கவிஞர் இன்குலாப் பெற்றுக்கொண்டார்.
நான் முதல் முறை பேசியதை, பிரதமரிடம் நேரடியாக கொடுத்த கடிதங்கள், மனுக்கள் ஆகியவற்றை இந்தக் கூட்டத்திலும் பேசினேன். இது தொடர்பாக வழக்கு நடைபெற்றது. இப்படிப் பேசினீர்களா என்று கேட்டார்கள். ஆமாம், நான் பேசினேன் என்று பதிலளித்தேன். இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை சிதைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பேசினேன். ஒருமைப்பாடு நீடிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தேன். எதையும் நான் மறுக்கவில்லை. இது ஒன்றும் தேசத் துரோகம் கிடையாது.
ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டதற்கு, அவர்களுக்காக போராடிய புலிகளைப் பற்றி நாடாளுமன்றத்திலேயே பேசினேன். இதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன். தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியது குற்றமா என வேலூர் சிறையில் இருந்தபடி ரிட் மனு தாக்கல் செய்தேன். ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு நாள். ‘நீங்கள் குற்றவாளி என்று நான் தீர்ப்பளிக்கிறேன்’ என நீதிபதி அவர்கள் கூறி, ‘தண்டனை குறித்து ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டார். ‘தண்டனையை சீக்கிரம் அறிவித்துவிட்டால் நல்லது’ என்று சொன்னேன். ஒரு வருட சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக சொன்னார்.
தீர்ப்பை வாங்கி வாசித்துப் பார்த்தோம். ‘Accused sought for leneant punishment’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது குற்றம்சாட்டப்பட்ட நான் குறைந்தபட்ச தண்டனை கொடுக்க வேண்டுமெனக் கேட்டதாக கூறப்பட்டிருந்தது. என் தலையில் இடி விழுந்ததைப் போல இருந்தது. நான் நீதிபதியைப் பார்த்துக் கேட்டேன், ‘நான் தண்டனையைக் குறைக்கச் சொல்லி ஒருபோதும் கேட்கவில்லை. அதிகபட்ச தண்டனை எவ்வளவு, ஆயுள் தண்டனையா, கொடுங்கள் ஏற்றுக்கொள்வேன்’ என்றேன்.
நான் சொல்லாத வார்த்தையை எழுத வேண்டுமென்றால் நீதிபதியின் உள்ளத்தில் விஷமிருக்கிறது என்று இரண்டு முறை சொன்னேன். அதிகபட்ச தண்டனை கொடுங்கள். ஆயுள் தண்டனையாக ஏற்றுக்கொள்கிறேன்.
தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பேன். இளைஞர்களின் உள்ளத்தில் இதை விதைப்பதால் எனக்கு தண்டனை என எழுதியிருக்கிறார்கள். விதைப்பேன். விதைத்துக்கொண்டே இருப்பேன். ஆயுள் தண்டனை என்றாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.
நான் தந்தை பெரியாரின் வழியில் வந்தவன். 1938ல் இதே சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக நீதிமன்றத்தில் தந்தை பெரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அதிகபட்ச தண்டனை எவ்வளவோ அதைக் கொடுங்கள் என்று சொன்னவர், ‘மூன்று வருடம், மூன்று வருடம்’ என்று சொல்லி சால்வையை தூக்கி தோளில் போட்டபடி சென்றார். நான் அந்த வழியிலே வந்தவன். அன்றைக்குப் பெரியார் சொன்னார்.
இன்றைக்கு நீதிமன்றத்தில் பெரியாரின் பேரன் வைகோ அதே கருத்தை நீதிமன்றத்தில் பதிவுசெய்திருக்கிறேன். நான் செய்தது தேசத்துரோகமல்ல. இது தேசத் துரோகமென்றால் இதை நான் தொடர்ந்து செய்வேன்” என வைகோ பேசினார்.
வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க வைகோ மறுத்துவிட்டார். -BBC_Tamil