சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2019ல் காணாமல் போனதாக கூறப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் ஆந்திரா காவல்துறையின் பிடியில் இருப்பது போன்ற ஒரு காணொளி வெளியாகி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக புலனாய்வு செய்து ஒரு காணொளியை தயாரித்து யூடியூபில் வெளியிட்ட பிறகு அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.
மதுரையைச் சேர்ந்த மனிதஉரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முகிலனை தமிழக காவல்துறை கண்டறியவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
சிபிசிஐடி அதிகாரிகள் முகிலன் காணாமல் போனது பற்றிய விவரம் தெரியவந்துள்ளது என்று கூறியநிலையில், தற்போது அவர் ஆந்திர காவல்துறையினரால் திருப்பதி ரயில்நிலையத்தில் இருந்து கொண்டுசெல்லப்படுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை காவல்துறையினர் கொண்டுசெல்லும் காட்சியை அவரது நண்பர் ஒருவர் பதிவு செய்ததாக ஹென்றி தெரிவித்துள்ளார். அந்த காணொளியை அவரது மனைவி மற்றும் தமிழக டிஜிபி திரிபாதியிடம் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளியான காணொளியில் முகிலன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்புவது தெரிகிறது.
முகிலன் தடியோடு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதனுடைய உண்மை தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
-BBC_Tamil