சீர் வரிசையாக தண்ணீர் வண்டி தரும் ராமநாதபுரம் கிராமங்கள்

தண்ணீர் வண்டி என்றவுடன் லாரியும், டிராக்டரும்தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும்.

ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு சக்கரத்துடன் ஐந்து தண்ணீர் குடங்களை, எரிபொருள் செலவின்றி எளிதாக சுமந்து வரும் சிறிய வாகனம்தான் இந்த ‘தண்ணீர் வண்டி’

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டர் டேங்கர்கள், காவிரி குடிநீர் குழாய்களில் இருந்து வீட்டிற்கு அருகிலும் சற்று தொலைவிலும் கிடைக்கும் குடிநீரை சேகரிக்கவும், மற்ற பிற பொருட்களை எளிதாக எடுத்து வரவும் பயன்படுவதால், கடலாடி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சிக்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கிராம மக்களின் வாழ்வில் இந்த தண்ணீர் வண்டி ஒன்றிவிட்டது.

குடிநீர் கொண்டுவர மட்டுமின்றி வயலுக்கு உரமூட்டைகளை, கட்டடப்பணிகளுக்கு சிமெண்ட் மூட்டைகளை எடுத்துச்செல்லவும் இந்த தண்ணீர் தள்ளுவண்டி பயன்படுவதால், வீட்டுக்கொரு வண்டி வாங்கி எரிபொருள் செலவின்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கிராம மக்கள் வாழ்வில் ஒன்றிபோன தண்ணீர் வண்டி

இப்பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் பெரும்பாலும் சாலையோரங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டின் சற்று தொலைவிலுள்ள குழாய்களிலிருந்து நீர் எடுத்துவர இந்த தண்ணீர் வண்டிகளை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தள்ளுவண்டிகள் தற்போது 3.500 லிருந்து 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், வெல்டிங் கடைகளில் ஜன்னல், கதவுகள், பிற வெல்டிங் வேலைகளை தவிர்த்து தள்ளுவண்டிகள் தயார் செய்வதும் அதிகரித்துள்ளது.

கிராம மக்கள் வாழ்வில் ஒன்றிபோன தண்ணீர் வண்டி

கடந்த காலங்களில் பெண்கள் தலையிலும் இடுப்பிலும் அதிகபட்சமாக இரண்டு குடங்களை வைத்து நீர் எடுத்து வந்த நிலை மாறி, தற்போது,பெண்கள் மிக எளிதாக ஒரே முறையில்; இந்த வண்டியை பயன்படுத்தி ஐந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வருவது மிகவும் சௌரியமாக இருக்கிறது.

மேலும், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் அனைத்துப் பணிகளுக்கும் இந்த வண்டியை பயன்படுத்தி வருவதால் இதன் தேவை அதிகரித்துள்ளது.

பொங்கல் சீர்வரிசை பட்டியலில் இடம்பிடித்த தண்ணீர் வண்டி

இதனால், மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சியைபோல வீட்டிலுள்ள அத்தியாவசிய பொருட்களில் இந்த வண்டியும் ஒன்றாகிவிட்டது என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

கிராம மக்கள் வாழ்வில் ஒன்றிபோன தண்ணீர் வண்டி

எனவே, புதிதாக திருமணமான பெண்ணுக்கு பெற்றோர் பொங்கலுக்கு சீதனம் கொடுக்கும் போது, கரும்பு, வாழை, பொங்கல் பானை மற்றும் மஞ்சள் ஆகியவற்றோடு தண்ணீர் வண்டி தருவதும் வழக்கமாகி வருகிறது.

மேலும், இப்பகுதிகளில் தங்கள் பெண் பிள்ளைகளை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் மணம் முடித்து கொடுத்தவர்கள் அப்பெண்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது சீர் கொடுக்கும் பொருட்களில் இந்த தண்ணீர் வண்டியையும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

கிராம மக்கள் வாழ்வில் ஒன்றிபோன தண்ணீர் வண்டி

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கவிதா ‘முன்பெல்லாம் கிராமங்களில் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண்கள் தண்ணீர் குடங்களை தலையில் சுமந்து கொண்டு வருவார்கள். ஆனால் காலங்கள் மாறி தற்போது பெண்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலையால், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இந்த தள்ளுவண்டியை பயன்படுத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

தண்ணீர் வண்டி தயாரித்து வரும் கார்த்திக் பிபிசி தமிழிடம் கூறுகையில், “இந்த தள்ளுவண்டிகள் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை மதுரையில் இருந்து வாங்கி வந்து தயாரித்து விற்பனை செய்கிறோம். இதனை கிராம மக்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர்” என்றார்.

குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்கள் தண்ணீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் ‘ஒரே நேரத்தில் ஐந்து முதல் ஆறு தண்ணீர்க் குடங்களை வைத்து கொண்டு செல்ல ஏதுவாக’ இந்த வண்டி தயாரிக்கப்படுகிறது. ரூபாய் 3000 முதல் 3,500 விலையில் விற்கப்படுகிறது” என்றார்.

கிராம மக்கள் வாழ்வில் ஒன்றிபோன தண்ணீர் வண்டி

“ராமநாதபுரம் பகுதியில் ‘இரண்டு சக்கர வாகனம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தண்ணீர் எடுக்கப் பயன்படும் தள்ளுவண்டியும் அவ்வளவு முக்கியம். புதுமண தம்பதிகளுக்கு வழங்கும் பொங்கல் சீர் வரிசையில் இந்த தண்ணீர் வண்டியும் சேர்த்து வழங்கபடுகிறது. மக்களின் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறியுள்ள இந்த வண்டி கிராமபுரங்களில் அனைவரது வீடுகளிலும் உள்ளது” என்கிறார் சாயல்குடி கேசவன். -BBC_Tamil

TAGS: