ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு சவால்தான். பெரும்பாலும் அதற்கு பரந்த, நீடித்த தீர்வுகள் கிடைக்கும்.
வட இந்தியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற மலைவாழிடமான – சிம்லா கடந்த 2018 ஜூன் மாதம் மிக மோசமான குடிநீர் பஞ்சத்தை எதிர்கொண்டது. இந்த ஆண்டு தென்னிந்தியாவில் சென்னை மாநகரில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தீர்வுகள் கிடைக்காமல் நகரம் திண்டாடி வருகிறது.
சென்னைக்கும், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பாடம் கற்பித்திருக்கிறது சிம்லா. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோடைக்கால தலைநகராக இருந்த சிம்லா நகரில் இந்தக் கோடைப் பருவத்தில் குழாய்களில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது, குடிநீர் தொட்டிகள் நிறைந்திருந்தன, ஏறத்தாழ நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. நியூயார்க் டைம்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகளிலும், பிபிசியிலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த குடிநீர் நெருக்கடி ஏற்பட்டு ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குள் இந்த நிலையை சிம்லா நகரம் எட்டியுள்ளது.
சிம்லாவின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட நடவடிக்கைகள், சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கலாம். ஆனால் அதற்கான செயல்திட்டம் இப்போதே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டன. அரசின் டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடிக்க மக்கள் மணிக்கணக்கில் வரிசைகளில் காத்துக் கிடக்கின்றனர்.
பிரச்சினை வரும் வரையில், தண்ணீர் மேலாண்மையை நாம் என் முக்கியமாகக் கருதவில்லை? பருவநிலை மாற்றங்கள் மற்றும் பல தசாப்தங்களாக நாம் அதிகம் பயன்படுத்தியதால் வற்றாத நீராதாரங்களில் தண்ணீர் வற்றியது போன்ற சூழ்நிலைகளில், திட்டமிடும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் கேட்க வேண்டிய அடிப்படைக் கேள்வி இதுதான்.
இது அரிதான இயற்கை வளம் அல்ல, எளிதில் பிரச்சினையை சமாளித்துவிடலாம் என்ற சிந்தனை தான் இதற்குக் காரணம் என்பதே பதிலாகக் கிடைக்கிறது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதலாவது முதல்வர் ஜெய்ராம் தாக்குரை இதுபற்றிக் கேளுங்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிம்லாவில் மோசமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது, அவர் பதவிக்கு வந்து சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த்து. தண்ணீர் கிடைக்காத மக்கள் நள்ளிரவில் அவருடைய வீட்டுக்கு வெளியே போராட்டங்கள் நடத்தினர், சாலை மறியல்கள் செய்தனர், பேரணிகள் நடத்தினர், பெண்கள் மற்றும் சிம்லாவை சேர்ந்த மக்கள் நல ஆர்வலர்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆங்கிலேயர்களால் 1921-22 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்த நீர்நிலை நீண்டகால வறட்சி காரணமாகவும், குளிர்காலங்களில் குறைவான பனிப்பொழிவு காரணமாகவும் ஏறத்தாழ வறண்டு போய்விட்டது. தினசரி 18 – 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்த நிலையில், தினமும் 9.40 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்க முடிந்தது.
சிம்லாவுக்கான அனைத்து ஆற்று குடிநீர் ஆதாரங்களில் இருந்தும் தினமும் 35 – 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைத்த நிலை மாறி, தினமும் 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைத்தது. சிம்லாவில் எட்டு நாள்கள் தண்ணீர் வரவில்லை.
2.30 லட்சம் பேர் வாழும் அந்த நகரில் கோடையின் உச்சபட்ச நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் தினமும் 20,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அனைவருக்குமே ஏழு நாள்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து, அவசர அடிப்படையில் தற்காலிகத் தீர்வு காண வேண்டும் என்றும், தண்ணீரை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட பிறகு தான் இயல்பு நிலைமை திரும்பியது.
“2018ல் எங்களுடைய ஆட்சியில் தான் சிம்லாவில் முதன்முறையாக தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. பிரச்சினை படிப்படியாக தீவிரமடைந்து கொண்டு வந்தபோது, பருவநிலை மாற்றங்கள், மழை பொய்த்தது, பனிப்பொழிவு குறைந்தது போன்ற எச்சரிக்கைகள் வந்தபோதும் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. நகரில் திட்டமிடல் ஏதுமின்றி கட்டடங்கள் கட்டியதைத் தடுக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைசியாக எங்களுடைய காலத்தில் பிரச்சினை வெடித்துவிட்டது” என்று பிபிசி இந்தி செய்தியை முதல்வர் நினைவுபடுத்திக் கூறுகிறார்.
இப்போது ஜூன் மாதம் முடிந்துவிட்டது. தண்ணீர் பிரச்சினையை வெற்றிகரமாகக் கையாண்டு மாதிரி நகரமாக உருவாகிவிட்டோம் என்று சிம்லா பெருமையுடன் கூறிக் கொள்கிறது.
33,000 நுகர்வோருக்கு (அனுமதிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை) தினமும் 44 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. குடிநீர் விநியோகத்தைக் கையாள்வதற்காக அரசால் உருவாக்கப்பட்ட சிம்லா ஜல் பிரபந்தன் நிகாம் லிமிடெட் (SJPNL) என்ற நிறுவனத்திடம் இப்போது ஒரு நாளுக்கு 50 முதல் 51 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது.
- ‘ஷவருக்குப் பதிலாக பக்கெட்டில் குளியுங்கள்’: மக்களிடம் குடிநீர் வாரியம் வேண்டுகோள்
- சென்னையில் தண்ணீர் இல்லாமல் போவது ஏன்? ஓர் ஆழமான அலசல்
“இப்போது சில வார்டுகளில் வாரத்தில் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கச் செய்யும் முன்னோடித் திட்டத்தை அறிமுகம் செய்யும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். இவ்வளவு ஆண்டு கால நெருக்கடிக்குப் பிறகு, தண்ணீரை பிரித்துக் கொடுப்பது அல்லது புதிய இணைப்புகள் தருவதற்குத் தடை விதிப்பது போன்ற கட்டாயம் எதுவும் எங்களுக்கு இல்லை. உண்மையில், கடந்த சில மாதங்களில் 1400 புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. கட்டுமான விநியோகத்துக்கும் தடை ஏதும் கிடையாது. நெருக்கடியில் இருந்து மீண்டதற்கான வெற்றிகரமான நடவடிக்கைகளாக இது அமைந்திருக்கிறது. இதை உலக வங்கியும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது” என்று சிம்லா ஜல் பிரபந்தன் நிகாம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறியாளர் தர்மிந்தர் கில் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, சிம்லாவில் அந்தந்தப் பகுதிகளில், நகர எல்லையில் உள்ள பகுதிகளிலும் பரவலாகப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீர் பிடிப்பதற்காக காலி பக்கெட்களுடன் அதிகாலையிலும், மாலையில் பொழுது சாய்ந்த பிறகும் மணிக்கணக்கில் வரிசைகளில் காத்துக் கிடப்பது வழக்கமான காட்சிகளாக இருந்தன.
கேப்டவுன் நிலைமையும், சிம்லா நிலைமையும் ஒரே மாதிரியாக உள்ளன என்று பிரபல இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நாராயண் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் தேவைக்கு ஏற்ப திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தினசரி தேவை 44 மில்லியன் லிட்டர்கள் என்ற நிலையில் 18 மில்லியன் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது என்பது உண்மையில் அதிர்ச்சி தரும் செய்தி தான். சென்னையும் இந்தியாவில் வேறு பல நகரங்களும் இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கின்றன.
கடந்த ஆண்டு அனுபவம் பயங்கரமானதாக இருந்தது. எனது இரண்டு மகள்களை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலைகளை கவனிப்பது, வயதான மாமியாரை கவனித்துக் கொள்வது, சமையலறை தேவைகளை கவனிப்பது ஆகியவை மிகுந்த சிரமமானதாக இருந்தது. ஏழு நாட்களுக்கு குழாய்களில் தண்ணீர் வரவில்லை. ஷோகி என்ற இடத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை எனது கணவர் சில கேன்களில் எடுத்து வருவார். 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்தில் இருந்து காரில் தண்ணீர் எடுத்து வருவார்'' என்று வேலைக்குச் செல்லும் டிரிப்டா சவுகான் என்ற பெண்மணி தெரிவித்தார்.
கிடைத்தற்கரிய பொருள் தண்ணீர் என்பதை மக்கள் உணர வேண்டும். தண்ணீரை நாம் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து சிம்லா கற்றுக் கொண்ட கடுமையான பாடம் இதுதான். தண்ணீர் பிரச்சினை கிடையாது. குடிப்பதற்கு, சேமித்து வைக்க, பயன்படுத்த எங்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீர் சிக்கனத்தின் அவசியம் குறித்த தகவல்களைப் பரப்புவதில் நான் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்” என்று சொல்கிறார் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசியான கிரண் சர்மா.
<figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/134FB/production/_107799097_cdaafd2c-a90a-4515-9245-a622bbc76fd9.jpg" alt="சென்னை தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் சிம்லா" width="976" height="549" data-highest-encountered-width="624" /><span class="off-screen">படத்தின் காப்புரிமை</span><span class="story-image-copyright">PRADEEP KUMAR</span></span></figure>
- காஞ்சிபுரம், திருவள்ளூரில் தண்ணீர் திருடப்படுவதாக மக்கள் போராட்டம்
- சீர் வரிசையாக தண்ணீர் வண்டி தரும் ராமநாதபுரம் கிராமங்கள்
வீடுகளில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தண்ணீர் வீணாவது, கசிவது மற்றும் தவறாகப் பயன்படுத்துவது பற்றி புகார் தெரிவிக்கவும் எஸ்.ஜே.பி.என்.எல். நிறுவனம் “ஜல – சக்தி” என்ற பெயரில் மகளிர் நடவடிக்கை குழுக்களை அமைத்தது.
ஆனால் பலருக்கும் உந்துதல் தரக் கூடிய இந்தத் தலைகீழ் மாற்றம் எப்படி ஏற்பட்டது?
இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், 30,000 மக்கள் தொகையுடன் சிம்லா நகரம் உருவாக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை நாம் பார்க்க வேண்டும். மக்கள் தொகை வரைமுறையின்றி பெருகியபோது, மலைச் சரிவுப் பகுதிகளை மாற்றும் வகையில் அளவிலும், வடிவத்திலும் நகரம் வளர்ந்தது. அப்போது தண்ணீர் பிரச்சினைகளும் தலையெடுத்தன. தாறுமாறாக, கட்டுப்பாடின்றி கட்டடங்கள் உருவாயின, பசுமை வெளிகள் அழிப்பு, மோசமான சேவை வசதிகள் ஆகியவற்றால் பிரச்சினையின் தீவிரம் அதிகமானது.
நகரின் மிகப் பழமையான தண்ணீர் ஆதாரமான – கும்மா, அங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2200 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக அது உள்ளது. வற்றாத ஜீவநதியான நாட்டிக்ஹட் நதி சற்று கீழே 1400 மீட்டர் உயரத்தில் உள்ளது. 700 மீட்டர் அளவுக்கு பம்ப் செய்து தண்ணீரை மேலே கொண்டு சென்று, குழாய்கள் இணைப்புகள் மூலம் தண்ணீர் வழங்கப் படுகிறது. இப்போது அவை பழையனவாகி, தண்ணீர் கசிகிறது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட, குறைந்தது ஐந்து சிறிய குடிநீர் திட்டங்களிலும், இதேபோல தண்ணீர் கசிவது உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.
குடிநீர் விநியோகம் மற்றும் தேவை குறித்து ஆய்வு செய்வதற்காக 2017-18ல் அரசால் அமைக்கப்பட்ட வாப்கோஸ் லிமிடெட் நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில், விநியோகத்துக்காக பம்ப் செய்யப்படும் நீரில் 47 சதவீதம், பழைய குழாய்களில் ஏற்படும் கசிவு காரணமாக வீணாகிறது என்று கண்டறியப்பட்டது. விநியோகத்தின் போது ஏற்படும் இழப்பால் மேலும் 25 சதவீதம் வீணானது. அதாவது 70 சதவீத நீர் வீணாகிப் போனது. ஹோட்டல்கள் மற்றும் சட்டவிரோதக் குடியிருப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதன் மூலம் தவறான நிர்வாகமும் இதற்குக் காரணமாக இருந்தது.
“மதிப்புமிக்க தண்ணீர் வீணாவதைத் தடுப்பது முதலாவது விஷயமாக இருந்தது. நூற்றாண்டு பழமையான குழாய்களை மாற்றுமாறு நான் உத்தரவிட்டேன். அதன் மூலம் நீர் கசிவது மற்றும் வீணாவது கணக்கில் கொள்ள முடியாத அளவுக்குக் குறைந்துவிட்டது. 1921-22ல் போடப்பட்ட அனைத்துக் குழாய்களும் ரூ.8 கோடி செலவில் மாற்றப்பட்டன. இதன் மூலமாக, கிடைக்கிற தண்ணீரின் அளவு அதிகரித்தது. கும்மாவில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவிய மோட்டார் பம்ப்களை நாங்கள் மாற்றினோம். அந்தத் திட்டத்தின் மூலம் அதிகம் தண்ணீர் பெறுவதற்காக அதைச் செய்தோம். இந்த இரண்டு நடவடிக்கைகள் மூலமாக மட்டும் எங்களுக்கு கிடைக்கிற தண்ணீரின் அளவு ஒரு நாளுக்கு 26 மில்லியன் லிட்டர் அளவுக்கு உயர்ந்தது” என்று முதல்வரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகாந்த் பால்டி தெரிவித்தார்.
கிரி ஆற்றில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது அடுத்த முக்கிய பணியாக இருந்தது. அந்த ஆறு சிம்லாவில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2007 ஆம் ஆண்டில் ரூ.64 கோடி செலவில் தொடங்கப்பட்ட, தினசரி 21 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் வகையிலான திட்டத்தில் தவறான வடிவமைப்பு மற்றும் கசிவு காரணமாக, தினமும் 12 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைத்து வந்தது. இப்போது அந்தத் திட்டத்தில் குழாய்கள் மாற்றி பதிக்கப்பட்டுள்ளது. இப்போது முழு திறனுக்கும் அங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது.
இதுதவிர சிம்லாவில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் சாப்பா என்ற இடத்தில் சட்லெஜ் நதியில் இருந்து கூடுதலாக தினமும் 10 மில்லியன் லிட்டர் நீரை பம்ப் செய்து, கும்மா திட்டத்தின் திறனை எஸ்.ஜே.பி.என்.எல். அதிகரித்துள்ளது.
இது தடம்பதிக்கும் பணியாக இருந்தது. ரூ.92 கோடி செலவிலான இந்தப் பணிகளை 10 மாத காலத்தில் நாங்கள் முடித்தோம். இப்போது எங்களுக்கு தினமும் கிடைக்கும் தண்ணீரின் அளவு 51 மில்லியன் லிட்டர்களாக அதிகரித்துள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.
“இரட்டை அணுகுமுறையில் நாங்கள் பணியாற்றினோம். இப்போதுள்ள திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துவது முதலாவது பணி. தண்ணீர் கிடைக்கும் வசதி மற்றும் விநியோக வசதிகளை சீரமைக்கும் பணிகள் இதில் மேற்கொள்ளப்பட்டன. குழாய்களில் கசிவுகளைக் கண்டுபிடித்து சரி செய்ததால், கூடுதல் தண்ணீர் கிடைத்தது. இதுமட்டுமின்றி சட்லெஜ் ஆற்றில் இருந்து தண்ணீரை பம்ப் செய்யும் திட்டத்தின் மூலம் தினமும் 67 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கச் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகவங்கி நிதியில் அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், 2050 ஆம் ஆண்டுக்குள் சிம்லாவுக்கு தினமும் கிடைக்கும் நீரின் அளவு 107 மில்லியன் லிட்டர்களாக அதிகரித்துவிடும்” என்று தாக்குர் விளக்கினார்.
“பருவநிலை மாறுதல்கள், மழை பொய்த்துப் போவது, மோசமான வானிலைகள் ஆகிவை சிம்லாவுக்கும், மற்ற மலைப் பகுதிகளுக்கும் தண்ணீர் பிரச்சினையில் பெரிய சவாலாக இருக்கும்” என்று சிம்லா நகரின் முன்னாள் மேயரும் மார்க்சிஸ்ட் தலைவருமான சஞ்சய் சவுகான் ஒப்புக்கொள்கிறார். நிச்சயமாக இந்த ஆண்டு சிம்லாவில் குடிநீர் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.பெரும்பாலான திட்டங்கள், தண்ணீர் தேவை கருதி, தன்னுடைய பதவிக் காலத்தில் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டில் மஞ்சள் காமாலை பிரச்சினை தீவிரமாக இருந்தது. அதனால் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த அஸ்வனி காட் குடிநீர் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியதாயிற்று. அந்தத் திட்டத்தின் மூலம் தினம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது” என்று அவர் கூறினார்.
சிம்லாவில் காலம் காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த 85 நீரூற்றுகளைப் புதுப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அம்ருத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டிருக்கும் கழிவுநீர் முன்னோடித் திட்டங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
ஏற்கெனவே இருந்தவற்றில் ஒன்பது நீருற்றுகள் புதுப்பிக்கப் பட்டுள்ளன என்றும், இரண்டு கழிவுநீர் திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, சுத்தம் செய்த நீர் பொதுக் கழிப்பிடங்களில் பயன்படுத்தப் படுவதாகவும் கில் தெரிவித்தார்.
நகரில் 20 குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 9 ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட உள்ளன. சிம்லா குடிநீர் வழங்கலை மேம்படுத்த கடந்த ஓராண்டில் அரசு கூடுதலாக ரூ.125 கோடி முதலீடு செய்துள்ளது. சிம்லா மாடலை மற்ற நகரங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று இப்போது உலகவங்கி கூறியுள்ளது.
மகசசே விருது பெற்றவரும், பிரபல சுற்றுச்சூழல் பாதுகாவலருமான ராஜேந்திர சிங்குடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. மோசமான வானிலை காலங்களிலும் நகருக்கான முதன்மையான குடிநீர் ஆதாரங்கள் வற்றிவிடாமல் தடுக்கும் வகையில், அஸ்வனி காட் மற்றும் நவ்ட்டி காட் என்ற இரண்டு பிரதான நீர்பிடிப்புப் பகுதிகளில் சிறிய தடுப்பணைகள் கட்டுவதற்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
“அதிகரிக்கும் மக்கள் தொகை, குறைந்து வரும் இயற்கை குடிநீர் ஆதாரங்கள், வற்றாத சிற்றோடைகளும் வறண்டு போவது, பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை, திட்டமிடப்படாத, கட்டுப்படுத்தப்படாத கட்டுமானப் பணிகள் ஆகியவை, எந்த நல்ல முயற்சியையும் தோற்கடித்துவிடும். எல்லா பகுதிகளிலும், மலைப்பகுதி நகரங்களிலும் தண்ணீர் பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டதைப் போலத் தெரிகிறது. நாம் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் சிம்லா வரலாற்றாளரும், இன்டாக் போராளியுமான ராஜா பாசின். -BBC_Tamil