சமீபத்தில் சில வாரங்கள் பெய்த கனமழையால், இந்தியாவின் வணிக தலைநகரான மும்பை தத்தளித்து கொண்டிருந்த அதேவேளையில், நாட்டின் பல இடங்களில் கடும் வறட்சி நிலவியது.
இதனை பார்க்கிறபோது, ஓரிடத்தில் அதிக மழை, இன்னொரு இடத்தில் கடும் வறட்சி காணப்படுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறதோ? என்ற கேள்வி எழுகிறது.
பல ஆண்டுகளாக பெய்துவரும் மழையின் அளவு மற்றும் இந்தியாவில் நிலவி வரும் வறட்சி தரவுகளை வைத்து இதற்கான உண்மையை கண்டறிய பிபிசியின் குழு முயற்சிகள் மேற்கொண்டது.
மழை அளவு
தண்ணீரின் தேவைக்கு, ஆண்டுதோறும் பெய்கின்ற பருவ மழையை இந்தியா நம்பியுள்ளது.
இந்தியாவின் வேறுபட்ட இடங்களில் வேறுபட்ட நேரங்களில் இந்த பருவகால மழை பெய்கிறது.
இந்த பருவ மழை முன்னரோ அல்லது பின்னரோ பெய்தால், பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படுவது விவசாயிகளுக்குதான். அதுவே கனமழை பெய்துவிட்டால், கட்டடப்பகுதிகளிலும் பேரழிவு ஏற்படும்.
கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமீபத்திய பகுதி மும்பையாகும். வெள்ளப்பெருக்கால் குறைந்தது 30 பேர் இறந்தனர்.
ஒழுங்கற்ற மழைப்பொழிவு முறைகளை சமாளிக்கும் அளவுக்கு மும்பை நகரத்தில் உள்கட்டுமான வசதிகள் இல்லை என்று மும்பை மாநகர உயரிய பொது அதிகாரி கூறுகிறார்.
நீண்டகால முறை ஏதாவது உள்ளதா?
இந்தியா முழுவதும் பெய்த பருவகால மழை அளவையும், 38 வானிலை நிலையங்களின் ஆண்டு தரவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால், மழை பொழிவுக்கு எந்தவொரு தெளிவான முறையும் இருப்பதாக தெரியவில்லை.
மழை அளவுகள் எதிர்பாராதவை, ஒழுங்கற்றவை. 2002ம் ஆண்டு முதல் இருக்கும் புள்ளிவிவரங்கள் பருவகால மழை அளவில் அதிக மழை, கடும் வறட்சி என்கிற வானிலை மாற்றங்களில் அதிகரிப்பு காணப்படவில்லை.
2006 முதல் 2015ம் ஆண்டு வரையான பத்தாண்டு காலத்தில் இந்தியாவில் 90 வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டதில் ஏறக்குறைய 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா அறிக்கை மதிப்பிடுகிறது.
இதற்கு முந்தைய பத்தாண்டு காலத்தில் (1996 – 2005) ஏற்பட்ட 67 வெள்ளப்பெருக்குகளில் சுமார் 13 ஆயிரத்து 600 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டாலும், இந்த இரண்டு பத்தாண்டு காலங்களிலும் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதில் பெரிய மாற்றத்தை கண்டறிய முடியவில்லை.
வறட்சி நிலை எப்படி?
மும்பை மாநகரம் கனமழையையும், வெள்ளப்பெருக்கையும் அனுபவித்தபோது, இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வறட்சியான காலநிலையே நிலவியது.
பருவ மழை தாமதமாகியதால் இந்தியாவின் தென் பகுதியில் இருக்கும் சென்னை மாநகரம் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அல்லல்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 45 டிகிரி செல்சியஸூக்கு மேலான தட்பவெப்பம் ஜூன் மாதம் பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.
44 சதவீதத்திற்கு மேலான இடங்களில் வறட்சி நிலவியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமான இடங்களாகும்.
எனவே, இந்தியாவில் நிலவிய தட்பவெப்ப தரவுகளை வைத்து பார்த்தால் இதில் ஏதாவது முறைகள் உள்ளதா?
ஒரு பகுதியில் நிலவுகின்ற இயல்பான தட்பவெப்பநிலையில், 4.5 செல்சியஸ் டிகிரி வெப்பம் அதிகமாக இரண்டு நாட்கள் நிலவினால் அந்த இடத்தில் தட்பவெப்ப அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படும்.
1980 முதல் 1999ம் ஆண்டு வரை 213 முறை இவ்வாறு தட்பவெப்ப அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.
2000 முதல் 2018ம் ஆண்டு வரை அதே இடைவெளியில் 1,400 முறை தட்பவெப்ப அதிகரிப்பு நிலவியுள்ளது.
2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் அதிக மழை மற்றும் கடும் வறட்சி என இரு தட்பவெப்பநிலை மாற்றங்களும் நிகழ்ந்துள்ளதை காண முடிவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வானிலை இவ்வாறு அதிக மழையாகவும், கடும் வறட்சியாகவும் இருப்பதை நீண்ட கால அளவில் கண்காணிப்பது நல்ல செய்தியாக இல்லை.
2100ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 70 சதவீத மக்கள்தொகை உலக அளவில் வெப்பம் அதிகரிப்பதால் உருவாகும் அதிக தட்பவெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் என்று தோன்றுவதாக சர்வதேச ஆய்வாளர் அணியால் நடத்தப்பட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறந்த திட்டமிடுதல் வெள்ளப்பெருக்கை அகற்றிவிட முடியுமா?
ஆண்டுதோறும் பெய்கின்ற பருவமழையை கையாள்வதில், நகரங்களை திட்டமிடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு மும்பை மாநகரம் சிறந்த எடுத்துக்காட்டு.
2005ம் ஆண்டு மும்பையில் குறைந்தது 900 பேர் வெள்ளப்பெருக்கால் இறந்தபோது, எட்டு தண்ணீர் வெளியேற்று நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இன்னும் இரண்டு தண்ணீர் வெளியேற்று நிலையங்கள் கட்டப்பட வேண்டியுள்ளது.
மும்பையின் மிக பெரிய பகுதி கடலில் இருந்து எடுக்கப்பட்ட நிலமாகும். ஆண்டுதோறும் பெய்கின்ற பருவமழையால் ஏற்படும் பேரழிவுக்கு மிக மோசமான திட்டமிடலும், மிக விரைவான கட்டுமானங்களும் காரணமென பலரும் கூறுகின்றனர்.
மும்பையில் பெய்கின்ற நூற்றாண்டு கால மழை வெள்ளம் எல்லாம், கடலிலும், நகரில் ஓடும் மிதி ஆற்றிலும் கலந்துவிடுகிறது. ஆனால், மிக உயரமான அலைகள் எழுகின்ற நேரத்தில், கனமழை பெய்கின்றபோது, தண்ணீர் வெளியேறும் இடங்கள் அடைபட்டு விடுகின்றன.
இவ்வாறு தண்ணீர் வெளியேறும் இடங்களில் திடக்கழிவுகள் சேர்வதாலும், கொட்டப்படுவதாலும் தண்ணீர் வெளியேறும் பகுதிகளிலுள்ள கொள்ளளவு திறனும் பாதிக்கப்படுகிறது,
நகரங்களில் வடிகால் அமைப்பை சீராக்கும் திட்டம், 1993ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டாலும், போதிய சீரமைப்பு செய்யப்படவில்லை என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். -BBC_Tamil