தன் வாழ்நாள் சேமிப்பு பணம் ரூ.1.08 கோடியை இந்திய ராணுவத்துக்கு சமர்பித்த இந்திய விமானப்படை வீரர்!

டெல்லி: நம் தமிழக கிராமபுறங்களில் “ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது” என ஒரு பழமொழி சொல்வார்கள் . அதை அப்படியே ராணுவ வீரர்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

வயது காரணமாக அவர்களை ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற வைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் உடல், பொருள், மனது முழுக்க நிறைந்திருக்கும் ராணுவ சிந்தனைகளையும், நாட்டு பாதுகாப்பையும் வெளியில் அனுப்பவே முடியாது.

ராணுவ சேவையில் ஒருவர் நுழைந்துவிட்டால் அவர் சாகும் வரை ராணுவ வீரர் தான். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின், ராணுவ உணர்வு, தேச பக்தி போன்றவைகளை நிரூபிக்கும் விதத்தில் அவ்வப்போது ஒரு சம்பவம் நடக்கும். இப்போது அப்படி ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் CBR Prasad என்கிற ஒய்வுபெற்ற விமானப் படை வீரர்.

ஓய்வு

CBR Prasad இந்திய விமானப் படையில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். அதன் பின் சில காரணங்களால் விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். ஓய்வுக்குப் பின் கோழிப் பண்ணை வைத்து சிறப்பாக நடத்த நல்ல லாபம் பார்த்திருக்கிறார். கடந்த 30 வருடங்களாக இந்த கோழிப் பண்ணையை வைத்தே, குழந்தைகளுக்கான கல்வி, திருமணம், மருத்துவ செலவுகள் என எல்லா குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டார்.

யோசனை

CBR Prasad, தன் குடும்ப கடமைகள் முடிந்துவிட்டது. இதன் பிறகு நான் சொத்து பத்துக்களை வைத்துக் கொள்வதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை என நினைத்திருக்கிறார். எனக்கு கொட்டிக் கொடுத்த பாதுகாப்புத் துறைக்கே மீண்டும் கொடுத்துவிடலாம் எனத் தோன்றியது. என் சொத்து சேமிப்பு முழுவதையும் ராணுவத்துக்கு கொடுத்துவிடலாமா என யோசித்திருக்கிறார்.

தமிழர் காரணம்

CBR Prasad, தன் வாழ்நாள் சேமிப்பை இந்திய ராணுவத்துக்கு கொடுக்கலாமா என யோசிப்பதே பெரிய விஷயம். அப்படி இருக்கும் போது, இந்த யோசனை எப்படி வந்தது எனக் கேட்டால், ஒரு தொகுதியில் கூட பாஜகவால் ஜெயிக்க முடியாத தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கிறார். தமிழகத்தின் ஜிடி நாயுடு இந்திய விமானப் படையில் உரையாற்றப் போயிருக்கிறார். “பெரிய முனிவர்கள், மகான்கள் எல்லாம், இந்த சமூகத்துக்கு நாம் எதையாவது திருப்பிச் செய்ய வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் இந்தியா உயர்ந்த நாடாக இருக்கிறது” எனச் சொல்லி இருக்கிறார் ஜி டி நாயுடு.

செயல்படுத்துதல்

அந்த தமிழரின் வார்த்தைகள் நம் CBR Prasad மனதில் தைத்துவிட்டது. ஜி டி நாயுடு சுமார் 30 வருடங்களுக்கு முன் சொன்னதை செயலில் செய்து காட்டி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் உணர்வை பிரதிபலித்திருக்கிறார். கடந்த ஜூலை 15, 2019 அன்று தான், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தன் வாழ்நாள் சேமிப்பான 1.08 கோடி ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்திருக்கிறார்.

மனைவி & மகள்

இதற்கு வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையா..? எனக் கேட்டால் “இல்லிங்க. என் மொத்த நிலத்தில் 1%-த்தை என் மனைவி பெயரிலும், 2% என் மகள் பெயரிலும் எழுதி வைத்துவிட்டேன். மீத சேமிப்புகளை பாதுகாப்புத் துறைக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டேன். பாக்கி நிலங்களை வைத்து சமூகத்துக்கு என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன்” என அசால்ட் காட்டுகிறார்.

போக்கிடம் இல்லை

ஏதோ ஒரு வேகத்திலும், கோபத்திலும் கையில் வெறும் ஐந்து ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்த அதே CBR Prasad தான் விமானப் படையில் 9 வருடம் பணியாற்றிவிட்டு, கோழிப் பண்ணை தொடங்கி, இன்று 500 ஏக்கர் நிலத்துக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். கேட்டால் எல்லாம் உழைப்பு தம்பி எனப் பூரிக்கிறார். இந்த 500 ஏக்கரில் தான் மேலே சொன்னது போல 1% (5 ஏக்கர்) மனைவிக்கும், 2% (10 ஏக்கர் நிலம்) மகளுக்கும் கொடுத்திருக்கிறார்.

சமூக சேவை

அப்படி என்றால் CBR Prasad தன் வாழ் நாள் சேமிப்பாக வைத்திருந்த பணத்தை ராணுவத்துக்கு கொடுத்தது போக, இந்த சமூகத்துக்கும் ஏதாவது செய்து கொண்டிருக்கிறாரா..? எனக் கேட்டால்… ஆம். நம் CBR Prasad-க்கு இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என மிகப் பெரிய ஆசை இருந்ததாம். ஆனால் முடியவில்லையாம். அதனால் கடந்த 20 ஆண்டுகளாக விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். அதோடு தனக்குச் சொந்தமான பாக்கி 485 ஏக்கர் நிலத்தில் 50 ஏக்கரில் ஒரு விளையாட்டு பல்கலைக்கழகத்தை நிறுவி இருக்கிறாராம்.

மற்றொரு பல்கலைக்கழகம் இந்த விளையாட்டு பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம். CBR Prasad-க்குச் சொந்தமான மற்றொரு 50 ஏக்கர் நிலத்தில், இன்னொரு விளையாட்டு பல்கலைக்கழகத்தை நிறுவ இருக்கிறாராம். ஒரு விளையாட்டு பல்கலைக்கழகம் ஆண்களுக்காகவும், ஒரு விளையாட்டு பல்கலைக்கழகம் பெண்களுக்காகவும் நிறுவ வேண்டும் என்பது தான் இவரின் அடுத்த லட்சியமாம். இப்போதும் மனிதர் இந்தியா ஒலிம்பிக்கில் ஜெயிக்க வேண்டும், இந்தியாவின் ஜன கன மன… தேசிய கீதம் ஒலிம்பிக் அரங்கில் எதிரொலிக்க வேண்டும் என தன் விமானப் படை சீருடையை கழற்றாமல் பேசிக் கொண்டிருக்கிறார். வயது ஆக ஆக நாட்டில் மீதான காதலும் பன் மடங்கு அதிகரித்திருப்பதை அப்பட்டமாக பார்க்க முடிகிறது.

tamil.goodreturns.in

TAGS: