இந்தியாவுடனான பிரச்சனையின் காரணமாக ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த விமானத்திற்கான வான்வெளியை பாகிஸ்தான் இன்று திறந்தது.
வான்வெளி மூடப்பட்டதால் இந்திய விமானங்கள் வேறு பாதையில் செல்ல நேரிட்டதால் பல மில்லியன் டாலர்கள் கூடுதலாக விமான நிறுவனங்களுக்கு செலவானது.
இதன் காரணமாக ஏர் இந்தியா மோசமான நஷ்டத்தை சந்தித்தது.
பயங்கரவாத பயிற்சி முகாமை எதிர்த்து நடத்தப்பட்டதாக கூறப்படும் பாலகோட் வான்வெளி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பிப்ரவரி மாதம் இந்த வான்வெளியை மூடியது.
இந்தத் தாக்குதல் இந்திய கட்டுபாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பதிலடியாக நடந்தது. இந்த தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலி ஆயினர்.
பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தான் வான்வெளியை மூடியவுடன் பாகிஸ்தான் வழியாக செல்லவிருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் மாற்றிவிடப்பட்டன.
அனைத்து விதமான விமானத்திற்காகவும் வான்வெளி திறக்கப்பட்டுவிட்டது என அதிகாரப்பூர்வ விமான வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் வான்வெளியை மூடியதால் இந்திய நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோஏர் போன்ற நிறுவனங்கள் 80 மில்லியன் டாலர் வரை நஷ்டம் அடைந்தன என இந்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நாடாளுமன்றத்தின் கூட்டத்தின்போது கூறியிருந்தார். -BBC_Tamil