வங்கி ஏடிஎம்மில் வரிசையாக வந்த கள்ளநோட்டுக்கள்!

நாமக்கலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்மில் இருந்து வரிசையாக இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், சேந்தமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் 5 ஒட்டப்பட்ட கள்ள நோட்டுக்களாக வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் புகார் அளிக்க சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் மூர்த்தியிடம் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துவிட்டு மறுநாள் வருமாறு கூறிவிட்டு வங்கியின் நுழைவாயிலைப் பூட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ஒட்டப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்களை நுழைவாயிலின் முன்பு வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மூர்த்தியை சமாதானப்படுத்தி வங்கிக்குள் அழைத்து சென்றனர்.

மூர்த்தியிடம் புகார் மனு பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், ஒட்டப்பட்ட நோட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் எடுத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி தருவதாகவும் கூறினர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மூர்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

-https://athirvu.in

TAGS: