திருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை – ஏன்?

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதன்கிழமையன்று அறிவித்துள்ளது.

திருமலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பா ரெட்டி இதனைத் தெரிவித்தார். அவருடன் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி ஆகியோர் உடனிருந்தார்.

பிபிசியிடம் பேசிய சுப்பா ரெட்டி, “மக்கள் நீதிமன்றத்தை அணுகும் நிலை வந்துவிட்டது. பக்தர்களுக்கு வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்யவே நாங்கள் இங்கு உள்ளோம். எனவே அவர்களின் கோரிக்கைப்படி, நிர்வாக அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளுக்கு விஐபி தரிசனத்தில் உள்ள எல்-1, எல்-2 எல்-3 முறையை ஒழிக்குமாறு ஆணையிட்டுள்ளோம். இது ஓரிரு நாட்களில் அமல்படுத்தப்படும். மேலும் மாற்று வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

திருமலை திருப்பதியில் உள்ள விஐபி தரிசனம் குறித்து ஏற்கனவே வழக்கறிஞர் உமேஷ் சந்திரா பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதற்கான விசாரணை ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் விஐபி தரிசனம் இனி இல்லை - ஏன்?படத்தின் காப்புரிமைPRESIDENT OF INDIA / FACEBOOK

இந்த ஆண்டு மார்ச் மாதம், ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் விஐபி-க்களுக்கு முன்னுரிமை தரிசனம் என்பது மனித உரிமைகள் மீறல் என்று கூறி அதனை ரத்து செய்யக் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உயர்நீதிமன்றம் வியாழனன்று, விஐபி தரிசனத்துக்கு மாற்று என்ன என விளக்கம் கேட்டிருந்தது.

அரசு வழக்குரைஞர், “திருமலை திருப்பதி தேவாஸ்தானத்தின் தலைவர், ஏற்கனவே விஐபி முறையை ஒழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்” என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதுகுறித்த அரசானையை தருமாறு நீதிமன்றம் கோரியது.

பிபிசியிடம் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர்,

“திருமலை திருப்பதி தேவாஸ்தானம் போர்டு இன்னும் கூட்டப்படவில்லை. எனவே தலைவரின் அறிக்கை மட்டுமே போதாது. விஐபி தரிசன முறையில் உள்ள எல்-1, எல்-2, எல்-3 முறைகளை ஒழித்து புதிய முறைகளை கொண்டு வருவது, பழைய முறைகளுக்கு புதிய செயல்பாடுகளை கொடுப்பது போன்றதாகும் என நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவித்துள்ளோம்” என்றார் அவர்.

திருப்பதியில் விஐபி தரிசனம் இனி இல்லை - ஏன்?படத்தின் காப்புரிமைKCR / FACEBOOK

“விஐபி முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என நாங்கள் கோரினோம். ஏதோ கண் துடைப்பு அறிவிப்புக்காக அதை கோரவில்லை.”

மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் கடவுளை வழிபடுவதில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று தெளிவான ஆணைகளை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் இம்மாதிரியாக சிறப்பு அந்தஸ்து வழங்குவது அரசமைப்பு சட்டத்தின் 14, 25, மற்றும் 26-வது உறுப்புரைகளின்படி விதியை மீறுவதாகும். மேலும் இது பக்தர்களை வகைப்படுத்துவது போன்றும் உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிறந்த இடம், மதம், சாதி, பாலினம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசமைப்பு சட்டத்தின் உறுப்புரை 14.

அதேபோல் உறுப்புரை 25-ன்படி எந்த பாகுபாடும் இன்றி ஒருவர் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றலாம் .

உறுப்புரை 26 பி-யின் படி எந்த ஒரு மத நிறுவனத்துக்கும் அதன் விவகாரங்களை அந்த நிறுவனமே கையாள்வதற்கான உரிமை உண்டு.

பக்தர்களை எல்-1, எல்-2, எல்-3, என்று வகைப்படுத்துவதன் மூலம், பக்தர்கள் வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கும் சம உரிமையை இழக்கிறார்கள் என மனுதாரர் கூறியிருந்தார்.

திருப்பதியில் விஐபி தரிசனம் இனி இல்லை - ஏன்?படத்தின் காப்புரிமைTTD

பிரிவு எல்-1 படி, விஐபிக்கள், உயர் அரசியல் தலைவர்கள், புகழ்பெற்றவர்கள் வெங்கடேச பெருமாளை தரிசிக்க முடியும். அதேபோல் அவர்களுக்கு சிறப்பு வழிபாடும் ஆரத்தியும் காண்பிக்கப்படும்.

எல் 2-ன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் பிற அதிகாரிகள் தரிசனம் செய்யலாம். அவர்கள் அருகாமையில் இருந்து கடவுளை தரிசிக்கலாம். ஆனால் அவர்களுக்கு சிறப்பு பூஜையோ அல்லது ஆரத்தியோ காட்டப்படாது.

எல்-3 படி அமைச்சர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள், எம்எல்ஏ-க்கள், உயர் அதிகாரிகள் தூரத்தில் இருந்து கடவுளை தரிசிக்கலாம். தனிச்சிறப்புகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமேஷ் சந்திரா, பக்தர்களை வகைப்படுத்துவது தரிசன முறைகளில் ஏற்படும் ஊழல்களை அதிகரிக்கும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதியில் விஐபி தரிசனம் இனி இல்லை - ஏன்?படத்தின் காப்புரிமைTTD

மகண்டி கோபால் ரெட்டி, இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். திருமலை தேவஸ்தான போர்டின் தலைவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த அவர், இது சரியான முடிவு என்றும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய கோபால் ரெட்டி, “கடவுளின் முன் அனைவரும் சமம். ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறைதான் திருமலைக்கு வர வேண்டும் என்று முன்பு தேவஸ்தானத் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த விதிமுறையும் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தங்களுக்கு கிடைத்த முன்னுரிமை தரிசன வாய்ப்பை சிலர் விற்கவும் செய்கின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுகுறித்து சரியான முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.

இந்த கோரிக்கைக்கு பக்தர்களும் ஆதரவு அளிக்கின்றனர்.

“கடவுளை தரிசிப்பதில் அனைவரும் சமம். யார் வேண்டுமானாலும் கடவுளை தரிசிக்கலாம். அங்கு காத்து நிற்கும் பக்தர்களின் கூட்டம் சீக்கிரமாக நகரச் செய்யும் நடவடிக்கையைதான் எடுக்க வேண்டும்.” என்கிறார் பிபிசியிடம் பேசிய சரன் என்ற பக்தர் ஒருவர்.

ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி கோயில் தென்னிந்தியாவில் இருக்கும் அதிக வருவாய்வரும் கோயிலாகும். 2019 -20 நிதியாண்டு கணக்கின்படி இதன் ஆண்டு பட்ஜெட் 3116.25 கோடி என இந்தக் கோயில் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. -BBC_Tamil

TAGS: