உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தின், கோலகாட், நாகோன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரவியுள்ளது.
உலகில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் வாழ்கின்றன.
கடந்த வருடம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 2413 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு இருப்பதாக கூறப்பட்டது.
புலிகளின் வாழ்விடமாகவும் இருப்பதால் 2006ம் வருடம் புலிகள் காப்பகாமாகவும் அறிவிக்கப்பட்டது காசிரங்கா தேசிய பூங்கா.
மேலும், யானை, நீர் எருமை , பன்றி மான், சதுப்பு மான் எனப்படும் மான்வகைகள், பல வகையான பறவைகள் என எண்ணற்ற வன உயிரினங்கள் வாழ்கின்ற பகுதி இது.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவின் பெரும்பரப்பு வெள்ளம் சூழ்ந்து காணப்படுறது.
இப்பூங்காவின் 95 சதவீத நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கி விட்ட நிலையில் அங்கு வாழும் வன உயிர்கள் உயிருக்கு போராடும் மோசமான நிலை உருவாகியுள்ளது.
அசாம் மாநில வனத்துறையினரும், இந்திய கானுயிர் அறக்கட்டளை,விலங்குகள் நல பன்னாட்டு நிதியம் அமைப்புகளை சார்ந்தோரும் உள்ளூர் மக்களின் உதவியோடு இணைந்து வெள்ளத்தில் தத்தளிக்கும் உயிரினங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள னர்.
காசிரங்காவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கானுயிர் அறக்கட்டளை நிறுவனத்தினரிடம் காசிரங்கா தேசிய பூங்காவில் வாழும் காட்டுயிர்கள் நிலை குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் பேசியது பிபிசி தமிழ். அவர்கள் அளித்த விவரங்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
மரணித்த காட்டுயிர்கள்…
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற போதும் , கானுயிர்கள் உயிரிழக்கும் துயரமும் நிகழ்கின்றது. அசாம் மாநில வனத்துறையின் அதிகார பூர்வ அறிக்கை படி, காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 92 காட்டுயிர்கள் இறந்துவிட்டன.
இதுவரை 8 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இறந்துள்ளன, அதில் 7 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளன. 41 ஹாக் மான்கள், 6 கரடி, 2 முள்ளம்பன்றி, 4 கடமான், 1 நீர் எருமை , ஒரு சதுப்பு மான் என மொத்தம் 63 காட்டுயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.
பிரம்மபுத்திராவின் தெற்கு நதிக்கரையில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் நிலப்பரப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி விட்டதால், மறுபக்கத்தில் இருக்கும் உயரமான பகுதியான கர்பி மலைப்பகுதியை நோக்கி செல்கின்றன அந்தப் பகுதியில் வாழும் காட்டுயிர்கள்.
ஆனால் அப்பகுதியை அடைய காசிரங்கா தேசிய பூங்காவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.
அப்படி சாலையைக் கிடைக்கும் பொழுது வாகனங்களில் அடிபட்டு விடும் அபாயத்தையும் சந்திக்கின்றன காட்டுயிர்கள்.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மேட்டுப்பகுதிக்கு செல்ல முயலுகையில் வாகனங்களில் அடிபட்டு 14 மான்கள் இறந்துள்ளன.
யானைகள் பொதுவாக நன்கு நீச்சல் தெரிவதால் தப்பித்துவிடும், அப்படி இருந்தும் ஒரு யானை வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளது. மேலும் 10 மான்கள் மற்றும் 1 காண்டாமிருகத்தின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்கின்றனர்.
மீட்பு பணிகள்….
இந்திய கானுயிர் அறக்கட்டளை, விலங்குகள் நல பன்னாட்டு நிதியம் அமைப்பு வனத்துறையுடன் இணைந்து காசிரங்காவில் அமைத்து இருக்கும் மீட்பு முகாம்களில் கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் ஆய்வாளர் என பலரும் இணைந்து தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோர், இதுவரை 61 வன உயிரினங்களை மீட்டு உள்ளனர். அதில் 46 உயிரினங்கள் உரிய மருத்துவ சிகிசிச்சை அளிக்கப்பட்டு யரமான வெள்ளம் பாதிக்காத வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 9 மான்களும், 2 ஒற்றை கொம்பு காண்டாமிருக குட்டிகளும் மீட்பு முகாமில் பராமரிப்பில் உள்ளன.
வெள்ளப்பெருக்கில் தத்தளிக்கும் அஸ்ஸாம், பிகார்: பல்லாயிரக்கணக்கானோர் நிலை என்ன?
தாயை தொலைத்த காண்டாமிருகக் குட்டிகள்….
வெள்ளப்பெருக்கில் சிக்கி தாயை இழந்து தவித்துக் கொண்டிருந்த ஒற்றை காண்டாமிருகக் குட்டிகளை மீட்கப்பட்டுள்ளது .
பொதுவாக இந்த காண்டாமிருககுட்டிகள் நான்கு வருடங்கள் வரை தங்களது தாயோடு இணைந்து இருக்கும் இயல்புடையவை.
ஆனால் இரண்டு வயது கூட நிரம்பாத இந்த குட்டிகள் வெள்ளத்தில் தங்கள் தாயைத் தொலைத்து விட்டன.
தாயின் துணையினையும் இழந்து, வெள்ளத்தில் நீந்த முடியாமல் சோர்வடைந்து கிடந்த இந்தக் குட்டிகள் மீட்டகப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர் இந்திய கானுயிர் அறக்கட்டளையினர்.
வெள்ளத்தில் இருந்து தப்பித்து வீட்டினுள் நுழைந்த புலிக்குட்டி
காசிரங்கா தேசிய பூங்காவின் வெள்ளம் சூழ்ந்த பரப்பில் இருந்து தப்பித்து , மறுபுறம் உள்ள உயரமான வனப்பகுதியை அடைவதற்காக நடுவில் உள்ள தேசிய நெடுஞசாலையினை கடக்க முயற்சித்த புலிக்குட்டி ஒன்று சாலையின் அருகே உள்ள வீட்டினில் நுழைந்து விட்ட்து .
வீட்டில் இருட்டாக இருந்த அறையினுள் நுழைந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலிக்குட்டியினை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் செல்ல வழி செய்துள்ளது மீட்பு குழு. -BBC_Tamil