நகர வாழ்க்கை வேண்டாம் – தமிழக மேற்கு தொடர்ச்சிமலையில் இயற்கை வாழ்வியலுக்கு திரும்பிய கொல்கத்தா இளைஞர்

தமிழக – கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியான ஆனைகட்டியில் இருந்து சோலையூர் செல்லும் மலைப்பாதையில் சில கிலோமீட்டர் தூரம் பயணித்தால் உள்ளது தெக்கே கடம்பரா எனும் கிராமம்.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள இப்பகுதியில் இருளர் மற்றும் கடம்பர் இன வனப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

ஆங்காங்கே வறண்ட நிலமும், பசுமையும் கலந்து காணப்படும் இந்த கிராமத்தின் நடுவில் ஒரு பகுதி மட்டும் பசுமை செறிந்து காணப்படுகிறது.

சுற்றிலும் மரம் செடிகள் தழைத்திருக்க, நடுவிலுள்ள சிறிய குடில் போன்று காணப்படும் வீட்டில் வசிக்கிறார் ஹர்ஷ் வலச்சா என்ற இளைஞர்.

கொல்கத்தாவை சேர்ந்த ஹர்ஷ் வலச்சா, நிதி ஆலோசகராக இருந்தவர். கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய இந்திய நகரங்களிலும் பின்பு அமெரிக்காவிலும் நிதி ஆலோசகராக பணிபுரிந்த ஹர்ஷ் இப்பொழுது தற்சார்பு வளங்குன்றா வாழ்க்கை (self-sustainable lifestyle ) முறையினை பின்பற்றும் விவசாயியாக வாழ்ந்து வருகிறார்.

பசுமை செநிற்த காடு

மனிதர்கள் தமக்கு தேவையான உணவு, உறைவிடம், தண்ணீர், மின்சாரம் அனைத்தையும் தாமே உற்பத்தி செய்துகொள்வதும், இயற்கையோடு இயைந்த தற்சார்பு வாழ்க்கை முறையும்தான். இயற்கையை சுரண்டாத வளங்குன்றா வாழ்க்கை முறைக்கு அடித்தளம் என்கிறார் ஹர்ஷ்.

ஆறு இலக்கத்தில் கிடைத்த சம்பளத்தையும் , நவீன வாழ்க்கை முறையியையும் விட்டுவிட்டு, காட்டின் நடுவில் வாழ்வதற்கான காரணங்களையும் வறண்டு கிடந்த ஒரு ஏக்கர் நிலத்தை பசுமையாக மாற்றியது எப்படி என்பதையும் அவர் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

வறண்ட நிலம் பசுமையாக மாறியது எப்படி?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலம் இப்படி இல்லை என்றும் கூறும் ஹர்ஷ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அந்த நிலத்தின் புகைப்படத்தினை காட்டினார். நேரில் பார்ப்பதற்கு பசுமை நிறைந்து காணப்படும் அந்த இடமானது புகைப்படத்தில் நேர் மாறாக இருந்தது.

முன்பு இந்த நிலம் மண் இறுகி வறண்டு, கற்களும் சிறு பாறைகளும் இருந்த குன்றாகத்தான் இருந்தது. இந்த இடத்தினை பார்க்கும்போது மூன்று ஆண்டுகளில் இதை பசுமையாக மாற்ற முடியுமென்ற நம்பிக்கை கூட எனக்கு இல்லை. நமக்கு வயது இருக்கிறது, காலம் அதிகமானாலும் பரவாயில்லை. மேலும் அன்பும் அக்கறையுமிருந்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். நிலத்தை மாற்ற முடியாதா என்ற எண்ணத்தில்தான் வேலையைத் தொடங்கினேன். ஆனால், இயற்கை நாம் நினைப்பதுபோல இல்லை. நாம் அன்பு செலுத்த தொடங்கியவுடன் பதிலுக்கு அது பேரன்பை செலுத்துமென்பது எனக்கு பிறகுதான் புரிந்தது. இரண்டு வருடங்களில் இந்த இடம் முழுவதுமாக மாற ஆரம்பித்து விட்டது என்று அவர் விவரிக்கிறார்.

ஆங்காங்கு மரங்கள்

அதிக பொருட்செலவு செய்து பெரும் இயந்திரங்களை கொண்டு வந்து இந்த நிலத்தினை சீர் செய்யவில்லை. நானும் நண்பர்கள் சிலரும் இணைந்து நிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உருவாக்கினோம். நிறைய குழிகள், அகழிகள், வரப்புகளை வெட்டினோம். மழைநீர் வழிந்தோடி விடாமல் இந்த நிலத்தில் தங்குவதற்கான அனைத்து வழிகளையும் செய்தோம். நிலத்தில் தண்ணீரை சேகரிக்கத் தொடங்கியவுடன் பசுமை துளிர்க்க ஆரம்பித்தது. புற்களும், புதர்ச் செடிகளும் வளரத்தொடங்கின.

மழை நீர் சேகரிப்பு முறைகளை தொடங்கியவுடன் சிறிது சிறிதாக நிலத்தடிநீர் மட்டம் உயரத் தொடங்கியது. இந்த இடத்திற்கு வந்தபோது தண்ணீருக்கு குழாய் கிணறு போட முடியுமா என்று பார்த்தபோது 800 அடிக்கும் கீழே துளையிட வேண்டியது இருக்கும் என்றனர். இப்பொழுது 150 அடியில் தண்ணீர் இருக்கின்றது. இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று பலரும் விவாதிக்கலாம். ஆனால் நான் தண்ணீருக்காக இந்த பூமியை அதிக தூரம் வெட்டி காயப்படுத்த வேண்டியதில்லை என்பது எனக்கு மன நிறைவாய் இருக்கிறது என்கிறார்.

எனினும் இவர் தற்போது 200 அடிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்துதான் நீரெடுக்கிறார்.

மண்வளமானதாக உருவானது எப்படி?

முன்பு மண் மிகவும் இறுகி இருந்தது. மண்ணை இளக செய்து வளமான மண்ணாக மாற்ற பல வேலைகளை செய்தோம்.

சுமார் 400 சிறிய குழிகளைத் தோண்டி அதில் முதலில் மழைநீரை சேமித்தோம். பின்பு அதில் அவரை போன்ற பருப்புவகை தாவரங்களைப் பயிரிட்டோம் .

பசுமை

அவை மண்ணில் நைட்ரஜனை நிலை நிறுத்தக் கூடியவை. பின்பு அந்தக் குழிகளில் உதிர்ந்த இலை தழைகளை நிரப்பி பின்பு கரையான்களை விட்டோம்.

சில வாரங்களில் அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகத் தொடங்கின. ஈரப்பதம் இல்லாமல் இறுக்கிக் கிடந்த மண் இப்பொழுது எப்படி இருக்கிறது பாருங்கள் என கை நிறைய மண்ணை அள்ளி காட்டினார் ஹர்ஷ்.

உணவுக் காடு

“நீர் கிடைத்த பிறகு, மண் பண்பட்ட பிறகு உணவு உற்பத்தி தொடங்கினேன். 500 வகையான மரங்களையும், காய்கறி பழத் தோட்டங்களையும் உருவாக்கினேன்.

மழைநீர் சேகரிப்பு
Image captionமழைநீர் சேகரிப்பு அமைப்பு

அதுவும் இந்த மண்ணுக்கு உரிய மரங்களை தேடித் தேடி நட்டு வருகிறேன்” என்கிறார்.

இந்த நிலத்திற்கு உரிய மரங்கள்தான் இங்கு வாழும் உயிரினங்களுக்கும் நல்லது, நிலத்திற்கும் நல்லது என்று கூறிய அவர், தனக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின் தகடுகளை பொருத்தி எடுத்துக்கொள்வதாகவும், அந்த மின்சாரமே அனைத்துத் தேவைகளுக்கும் போதுமானதாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

சிறுகக் கட்டி…

ஹர்ஷ் தனக்கான வீட்டை மிகச் சிறிதாக நிலத்திலேயே கட்டியுள்ளார். மேலும், இந்த வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களும் மறுசுழற்சி பொருட்களும்தான் என்கிறார் அவர்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி
Image captionபிளாஸ்டிக் மறுசுழற்சி

தனக்கான வீட்டை அருகிலுள்ள பழங்குடியினர் உதவியுடன் தானே கட்டிக்கொண்ட ஹர்ஷ், வீடு கட்ட 50 ஆயிரம் ரூபாய் தான் செலவானது என்கிறார்.

மழைக்காலங்களில் எரிவாயு பயன்படுத்தி சமைத்துக் கொள்கிறார். பிற நேரங்களில் பயன்படுத்த விறகு அடுப்பை பயன்படுத்தி வருகிறார்.

உணவுக் கழிவுகளை மட்கச் செய்து உரமாக பயன்படுத்துகிறார். எந்த வித வேதிப்பொருட்களும் பயன்படுத்தாதால் வீட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் அனைத்தும் செடிகளுக்கு சென்று சேர்ந்து விடுகிறது.

கை கழுவும் தண்ணீர் விழுகின்ற இடத்தில் சிறு செடிகளை நாட்டு வைத்துள்ளார். குளிப்பதற்கான தண்ணீரையும் அளந்துதான் பயன்படுத்துகிறார் ஹர்ஷ்.

சூரிய மின் தகடுகள் கொண்டு மின்சாரம் உற்பத்தி
Image captionசூரிய மின் தகடுகள் கொண்டு மின்சாரம் உற்பத்தி

ஹர்ஷ் வீட்டில் பிளாஸ்டிக் கவர்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

“பிளாஸ்டிக் முழுவதும் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இப்பொழுது தூக்கி எறிகின்ற நெகிழி பொருட்களை கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்திப்பதும் அவசியம் தான்.

பிளாஸ்டிக் செங்கற்களை பயன்படுத்தி சின்ன சின்ன அறைகளை கட்டிக் கொள்ளலாம் குறைந்த பட்சம் அவற்றை தேவையில்லை என மண்ணில் எறிவதற்கான காலத்தினை அதிகப்படுத்தலாம் என்பதற்காக இதை முயற்சி செய்கிறேன்” என்றார்.

தற்சார்பு வாழ்க்கைக்கு தடையாகும் சாதிய அமைப்பு

நம் சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, தற்சார்பு வாழ்க்கைக்கு பெருந்தடையாக உள்ளது என்கிறார் இவர். நம் சமூகத்தில் யார் யார் எந்த வேலை செய்ய வேண்டும் என்று முன் முடிவுகள் உள்ளன. அந்த படிநிலைகளை உடைத்தால்தான் முழுமையான வளங்குன்றா வாழ்க்கை முறைக்கு நாம் செல்ல முடியும் என்கிறார் அவர்.

தண்ணீர் சேமிப்பு

பழங்குடியினரே ஆசிரியர்கள்

இந்த நிலத்திற்கு உரிய வாழ்வியல் முறைகளையும், விவசாயம் குறித்த நிறைய தகவல்களையும் அருகிலுள்ள பழங்குடி இன மக்களிடம்தான் கற்றுக்கொண்டேன் என்கிறார் ஹர்ஷ்.

பசுமை செறிந்த காடு

“நிதி ஆலோசகராக இருந்தபோது பணம் சம்பாதிப்பதற்காக ஓடிக் கொண்டிருந்தேன். பணம் எதற்காக, உணவு, உடை, மின்சாரம், வீடு என வாழ்வாதரத்தினை பெறுவதற்காகத்தானே. அவற்றையெல்லாம் இப்போது நானே தயாரித்துக் கொள்கிறேன். இப்போதும் பணம் தேவைப்படுகிறது. ஆனால், அதிகம் தேவைப்படுவதில்லை. பணத் தேவைக்கு பெர்மாகல்ச்சர் (நிரந்தர வேளாண்மை) ஆலோசகராக செல்கிறேன். முன்பு ஒரு மாதத்திற்கு தேவை என்று நினைத்த பணம் இப்போது ஓராண்டுக்கு போதும் என்று தோன்றுகிறது” என்கிறார் இந்த முன்னாள் நிதி ஆலோசகர். -BBC_Tamil

TAGS: