இந்தியா இன்னும் சாதி கடந்த சமூகம் ஆகவில்லை. இதன் பொருள், சாதியம் இங்கு உயிரோடு இருந்து இந்தியர்களின் தினசரி வாழ்வில் இன்றும் தாக்கம் செலுத்துகிறது என்பதுதான். எனவே சாதியற்ற மானுடம் காணவேண்டும் என்று நினைத்தால், அதற்கு சாதியம் குறித்து, வாய்ப்புள்ள எல்லாக் கோணங்களிலும் விமர்சனபூர்வமாக ஆய்வு செய்வது மிகவும் அவசியமாகும்.
காலனியவாதிகள் ஏறத்தாழ 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, பிராமணியத்தின் மூலமாக சாதி அமைப்பை துணைக்கண்டம் தழுவியதாக மாற்றத் தொடங்கினார்கள் என்று சில வரலாற்றாளர்களும், மானுடவியலாளர்களும் கூறியுள்ளனர். இந்துயிசம் என்ற பகுப்பே தோன்றியிராத காலம் அது. ஆனால், காலனியத்துக்கு முந்தைய சாதியம், பிராமணியம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுக்கதையை இந்தக் கோட்பாடு விளக்கவில்லை.
காலனியத்துக்குப் பிந்திய மரியாதைக்குரிய அறிஞர்கள் சிலரிடமும், செல்வாக்கு மிக்க சாதிக்குழுக்களிடமும் இந்த அரைகுறை விளக்கம் பிரபலமாக இருந்தது நகைமுரண். அது ஆச்சரியம் அல்ல என்றபோதும்.
- திருப்பதி கோயிலில் மூன்றடுக்கு விஐபி தரிசன முறை ரத்து
- சென்னை ஜார்ஜ் கோட்டையை காப்பாற்ற போரிட்ட தலித்துகள்
சாதியை உண்டாக்கியது யார்? அதை இந்தியாவில் சட்டமுறையாக மாற்றியது எப்படி? ஏன்? என்பது போன்ற காலனியத்துக்கு முந்திய இந்தியாவைப் பற்றிய முக்கியக் கேள்விகள் இன்னும் அறிவார்ந்த மற்றும் வெகுஜன உரையாடலின் விவாதப் பொருளாகத்தான் உள்ளன. சாதியைப் பற்றிய இத்தகைய விமர்சனப் பார்வை மானுட வல்லமையின் இன்றியமையாத இயம்பல். நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மக்களின் இந்த விவாதப் பார்வையை செழுமைப்படுத்தவேண்டும். வாயை மூடச் செய்யக்கூடாது.
காலனியத்துக்கு முந்திய இந்தியாவில் பிராமணிய ஆணாதிக்கத்தால் சாதிப் பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டதாக சொல்கிற வேறுசில வரலாற்றாளர்கள், சில சம்ஸ்கிருதவாதிகள் நல்லகாலமாக இருக்கிறார்கள். காலனியத்துக்குப் பிந்திய கல்விசார், சட்டம் சார் விளக்கங்களால் இந்தப் பார்வையை நெறிவிளக்கம் செய்யும் முயற்சிகளும் நடந்துள்ளன. அறிவுசார் விளக்கங்கள் முக்கியமானவை என்றாலும், இவை தன்னிச்சையான சாதியத்துக்கு எதிரான சாதிகுறித்த விமர்சனப் பார்வையை இது வெட்டத்தேவையில்லை. ஏனெனில் சாதியால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் சாதி அதிகாரத்துக்கு எதிராகவும், தன் விடுதலைக்காகவும், கூட்டு நிலைமாற்றத்துக்காகவும் பேசவே செய்வார்கள்.
சாதிக்கும், சாதியத்துக்கும் உயிர் கொடுத்த தனி மனிதர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைப் பற்றிய புனைவுகளும், உண்மைகளும், தங்கள் பண்பாடு, மதம், வரலாறு ஆகியவற்றை சாதியற்றதாகப் பார்ப்பவர்களால் எப்போதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவே செய்யும்.
மதங்களின் கற்பனை நாயகர்கள், அரசர்கள் ஆகியவர்களின் இடம் சார்ந்த பிரிவினைகள், பொருளாதார மறுப்பு ஆகியவற்றின் அடிப்படையாக உள்ள சாதியக் கருத்துகளும், நடைமுறைகளும் எவ்வளவு மனிதத் தன்மையற்றவையாக உள்ளன என்பதை அவர்கள் அறம் சார்ந்தும், அறிவு சார்ந்தும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்
எனவே, சாதி ஆதிக்கத்தை விமர்சிப்பது என்பது மனித வல்லமையின் தவிர்க்க முடியாத கூறு. சாதியம் எவ்வளவுதான் ஆன்மிக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும், அதை எதிர்த்து நிற்பது அறிவாளர்களின் கடமையும், பொதுமக்களின் கடமையும் ஆகும்.
எடுத்துக்காட்டாக, கி.பி. 850 முதல் 1300 வரை தமிழ்பேசும் நிலப்பரப்பில் நிலவிய சோழ அரசினை எப்படிப் புரிந்துகொள்கிறோம். துணைக் கண்ட அளவிலும், கண்டங்களுக்கு இடையிலான அளவிலும் பெரிய சோழப் பேரரசை நிறுவியவன்; அவனது மகன் ராஜேந்திர சோழனும், பேரன் குலோத்துங்க சோழனும் அதே மேலும் கட்டிக்காத்த பேரரசு அது.
ராஜராஜ சோழன் வியக்க வைக்கும் கட்டடக் கலை மூலமாக கோயில் பண்பாட்டை வளர்த்ததாலும் பிராமணர்கள் மட்டுமே குடியிருந்த, செல்வம் பெருக்கி வாழ்ந்த பிரமதேயங்களை பரவலாக அமைத்ததாலும் தமிழ் பேசும் பகுதிகளில் பிராமணியம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேர்கொண்டது என்பதில் அறிஞர்கள் உடன்படுகிறார்கள்.
- தமது அரசதிகாரத்துக்கு ஏற்புரிமை வழங்க ராஜராஜனுக்கு பிராமணர்கள் தேவைப்பட்டனர்.
பெரிய கோயில்களில் மத அதிகாரம் முழுவதையும் கைப்பற்றுவதற்காகவும், பெருமளவு நிலங்களை உரிமை கொண்டு அதில் உழைக்காமலே தங்கள் உணவைப் பெறுவதற்காகவும், அந்த ஏற்புரிமையை வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
- ராஜராஜ சோழன் விவகாரம்: இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
- ‘சாதி மதம் அற்றவர்’ என சான்றிதழ் பெறுவது எப்படி? – ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர்
சாதி அடிப்படையிலான இந்த ஆணாதிக்க அரசும், மத அதிகாரமும் பாலின பேதத்தை நெறியாகவும், இயல்பாகவும் ஆக்குவதைச் சார்ந்து இருந்தன. தேவரடியார் முறையை சோழர்காலக் கோயில்கள் நிறுவனமயமாக்கியதில் இதற்கான ஒரு ஆதாரமாகக் காணலாம்.
வேளாண் நிலங்களை ஒன்றுகுவிப்பது, தீண்டப்படாதவர்கள், கீழ்சாதியினர் என்று முத்திரை இடப்பட்டவர்களிடம் இருந்து இலவச உழைப்பை உறிஞ்சுவது என்பதே இந்த சாதி அடிப்படையிலான கோயில்-பேரரசின் முறையாக இருந்தது.
ஒன்றன் மீது ஒன்று குறுக்கும் நெடுக்குமாக செல்லும் இந்தக் காரணிகளைப் பற்றி கவனமான புரிதல் வேண்டும். கோயில் கல்வெட்டுகளைத் தாண்டிய அறிவுபூர்வமான ஆய்வுகள் மட்டுமே போதாது. எதிர்மறையாக வகைப்பாடு செய்யப்பட்டவர்கள், அதாவது, சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களும், ஆண்களும், சாதியத்தால், பிராமணீயத்தால் அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட ஆன்மிக கருதுகோள்களை விசாரணைக்கு உட்படுத்தவே செய்வார்கள். சக மனிதர்களை மனித தன்மையற்ற முறையில் நடத்தினார்கள் என்பதால் மட்டுமல்ல, சாதியத்தை எதிர்த்திருக்கக்கூடிய சமூகங்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை சிதைத்து அதன் மூலம் அதிகாரம் செலுத்துவதாலும்.
இத்தகைய மேலாதிக்க வரலாற்றில், சாதிய, இனவாத, பாலினவாத பிரிவினைகள் கடவுளால் ஆக்கப்பட்டதாகவும், பிடுங்கி எறியமுடியாத இயற்கையான மலைகள் போன்றவை என்றும் குறிக்கப்படுகின்றன. இதுபோன்ற அனுமானங்கள் சட்டப்படி ஏற்கப்பட்டிருந்தால், எடுத்துக்காட்டாக, கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, மணம் முடிக்கப்பட்ட பெண்கள் கோயில்களை ஆட்சி செய்த சேர்ந்த சிறப்புரிமை பெற்ற ஆண்களால் பாலியல் ரீதியாக தொடர்ந்து சுரண்டப்பட்டிருப்பார்கள். பெண்கள் (பாலினம் மாறியோரும், பாலுறுப்பு மாற்றம் உள்ளவர்களும்கூட) நிகரான மனிதர்கள் என்பதால் அவர்கள் புனைவுக் கருத்துகளை மறுத்து, இத்தகைய உடல் சார்ந்த, பொருள் சார்ந்த சுரண்டல்களில் இருந்து விடுதலை பெற அவர்கள் போராடுகிறார்கள். காலனியத்துக்குப் பிந்திய இந்தியாவில் பெண்களின் இத்தகைய வெளிப்படையான குரல்களை நீதிமன்றத் தீர்ப்புகளும், நிறுவனங்களும் கடைசியில் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன.
பண்டைய இந்தியாவில் வட்டார மொழி பிராந்தியங்களை சேர்ந்த தாசர்கள், தாஸ்யுக்கள் (கருப்பு நிறமுடையோரைக் குறிக்க வைதீகப் பிரதிகளில் குறிக்கப்படும் சொற்கள்) மற்றும் அவர்களது வழிவந்தோரே சாதியம்/ பிராமணீயத்துக்கான எதிர்ப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்தோராக இருக்கக்கூடும்.
இடைக்கால சோழ ஏகாதிபத்தியம் பிராமணீய பிரசாரத்தால் செழித்து வளர்ந்தது; அதன் பிறகு சிறப்பு உரிமை பெற்ற சாதிகள் தொடர்ந்து சாதியை நெறியாகவும், இயல்பானதாகவும் ஆக்கின எனில், அறிவுபூர்வ ஆய்வுகளும், நீதித்துறையின் தீர்ப்புகளும் சாதிக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
இடைக்கால தென்னிந்தியாவின் பாணர்களும், பறையர்களும், காலனியத்துக்குப் பிந்திய இந்தியாவின் தமிழ்ப் பிரதேசங்களில் அவர்களது வழித்தோன்றல்களுமே சாதிக்கு எதிரான விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பவர்கள். சாதியற்ற மனிதத்தை தூக்கிப் பிடிக்கும் அவர்கள் அதற்கான அங்கீகாரத்தை எதிர்நோக்குகிறார்கள்.
சாதி கடந்த சமூகத்தை இந்தியாவில் அமைப்பதற்கான அவர்களது தொடர்ந்த உறுதிப்பாட்டுக்கு சட்டரீதியான, சமூக ரீதியான அங்கீகாரமும், உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் பாராட்டும் தேவை.
(ராஜராஜ சோழன் குறித்த திரைப்பட இயக்குநர் ரஞ்சித்தின் கருத்துகள் சமீபத்தில் சர்ச்சைகளை உண்டாக்கின. அதையொட்டி எழுதப்பட்ட கட்டுரை இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்)
-BBC_Tamil