மத்தியஸத்திற்கு இடமில்லை: ராஜ்நாத் உறுதி

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் என்ற கேள்விக்கு இடமில்லை என லோக்சபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

‘காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண உதவும்படி, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்’ என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இந்த விவகாரத்துக்குள் டொனால்டு டிரம்ப் மூக்கை நுழைக்க முயற்சிப்பதாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம், நேற்று(ஜூலை 23) பார்லிமென்டிலும் எதிரொலித்தது. ‘மத்தியஸ்தம் செய்யும்படி, டிரம்பிடம், பிரதமர் மோடி கேட்டாரா’ என, எதிர்க்கட்சிகள் இரு சபைகளிலும் கேள்வி எழுப்பின. பல்வேறு கட்சித் தலைவர்களும், இந்த விவகாரம் குறித்து, பிரதமர் பதிலளிக்க வேண்டும் என, வலியுறுத்தினர். பார்லிமென்ட் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இது குறித்து விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காஷ்மீர் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. இதில், மூன்றாவது நாடு தலையிடுவதை விரும்பவில்லை. மத்தியஸ்தம் செய்யும்படி டிரம்பிடம், பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை என விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் இன்றும் பார்லிமென்டில் எதிரொலித்தது. பிரதமர் மோடி பார்லிமென்டில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனை தொடர்ந்து, லோக்சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் 3வது நாடு மத்தியஸ்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. இது சிம்லா ஒப்பந்தத்திற்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: