சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்குத் தொடர்பு: பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சிலை தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். தன்னைத் துன்புறுத்துவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, தீனதயாளன் என்பவருடன் தன்னையும் இணைத்து கைதுசெய்து பொன். மாணிக்கவேல் துன்புறுத்துவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் காதர் பாஷா என்பவர் தமிழக உள்துறை செயலரிடமும் தலைமைச் செயலரிடமும் மனு அளித்திருந்தார்.

அந்த மனுக்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், இந்த விவகாரத்தில் பொன். மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த ஏப்ரல் மாதம் காதர் பாஷா வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டுமென பொன். மாணிக்க வேலும் யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞரும் மனுக்களைத் தாக்கல்செய்தனர்.

அந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, யானை ராஜேந்திரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பொன். மாணிக்கவேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் யாரையும் துன்புறுத்தும் நோக்கில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லையென்றும் இரண்டு அமைச்சர்களுக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருப்பதாகவும் அது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.

இதனை ஆதாரங்களுடன் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல்செய்யும்படி கூறிய நீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியான காதர் பாஷா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது, தீனதயாளன் என்ற சிலைகடத்தல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட நபருடன் இணைந்து செயல்பட்டதாக கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தபோதும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க, அவரை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்துள்ளது. -BBC_Tamil

TAGS: