ஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் உலகின் அரிய கானுயிர் வாழ்விடமான தமிழகத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், இந்தியாவில் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட வரும் புலிகள் காப்பகத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இவ்விருதினை வழங்கியுள்ளது. சர்வதேச புலிகள் தினமாகிய ஜூலை 29 அன்று டெல்லியில் நடந்த புலிகள் தின சிறப்பு நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இவ்விருதினை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நாகநாதனிடம் அளித்தார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1411.6 சதுர கி.மீ பரப்பளவுள்ள, தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இங்கு 60 புலிகள் வாழ்வதோடு, 111 சிறுத்தைகள், 800 யானைகள் வாழ்வதாக அண்மையில் வெளியான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புலிகள் காப்பகங்களின் மேலாண்மை குறித்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
- “இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிப்பு” – தமிழ்நாட்டின் நிலை என்ன?
- ‘இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது – ஆனால் அது மட்டும் போதுமா?’
முதலில் காப்புக்காடுகளாக இருந்த சத்தியமங்கலம் வனப்பகுதி, 2008ம் ஆண்டு வன உயிர்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2013ம் ஆண்டில் தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த மேலாண்மை செய்யப்பட்ட புலிகள் காப்பகத்திற்கான விருதினைப் பெற்ற, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் சிறப்பம்சங்கள், புவியியல் முக்கியத்துவம், உயிர்ச்சூழல் வளமை, வனப்பழங்குடிகள் போன்றவை குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசனிடம் பேசியது பிபிசி தமிழ். அவர் பேசியவை பின்வருமாறு.
சத்தியமங்கலம் வனப்பகுதியின் தனித்துவம்
இது தமிழகத்தின் மிகப் பழமையான வனக்கோட்டங்களில் ஒன்றாகும். பீடபூமி, மலைப்பகுதி, சமவெளி என வேறுபட்ட நில அமைப்புகளைக் கொண்ட தனித்துவமான வனப்பகுதியிது. இங்கு முட்புதர்காடுகள் முதல் வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் வரை 5 வகையான காடுகள் உள்ளன.
புல்வெளிகளும், ஆங்காங்கே மரங்களும் கொண்ட சவானா காடுகளை போன்ற தலைமலை சரிவும், மலைக்கும் இப்பகுதியில் ஓடும் மாயாற்றுக்கும் இடையே அமைந்துள்ள சமவெளியும் இப்புலிகள் காப்பகத்தின் தனித்துவமான பகுதிகளாகும். மாயாற்றை ஒட்டிய நதிக்கரைக்காடும் மிக முக்கிய உயிர்ச்சூழல் வளமை கொண்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் உயிர்ச்சூழல் வளமை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பல அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. தமிழக காடுகளில் உள்ள புலிகளில் நான்கில் ஒன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ளன.
இந்தியாவில் வேகமாக அழிந்து வரும் பறவையினமான எருவைக் கழுகுகள் இங்கு வாழ்கின்றன. சத்தியமங்கலத்தில் இவை பரவலாக காணப்படுவதுடன் அவற்றின் நான்கு வகைகள் இங்கு வாழ்வது சிறப்புக்குரியது.
எண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ள கழுதைப் புலிகளும் இக்காடுகளில் கணிசமாக வாழ்கின்றன. தமிழகத்தில் சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகள் தவிர வேறெங்கும் எருவைக் கழுகுகளும் கழுதைப்புலிகளும் இல்லை. அதுமட்டுமல்ல இந்த இரண்டு உயிர்களும் இவ்வனப்பரப்பிற்கு தெற்கே இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அரிய வகை நான்கு கொம்பு மான்களும் இவ்வனப்பகுதியில் காணப்படுகின்றன. தரைக் கரடி எனப்படும் அரிய உயிரினம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
- தூக்கியெறியும் சிகரெட் துண்டுகள் தாவரத்தின் வளர்ச்சியை தடுக்கும்
- மனித குல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு சுற்றுச்சூழல் அழிவு
தமிழகத்தில் கிண்டி, கோடியக்கரை, வல்லநாடு, ஆகிய இடங்களில் சிறிய வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே வாழும், வெளிமான்கள் எனப்படும் திருகு கொம்பு மான்கள் இங்கு மட்டும் தான் பரந்த வனப்பரப்பில் கணிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. புல்வாய் என்று சங்கத்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவ்விலங்கை பிளாய் என்று இப்பகுதி மக்கள் இன்றும் அழைப்பது கவனிக்கத்தக்கது.
அரிய வகை ஆரஞ்சு வண்ண பொன்மீன்கள் இங்கு ஓடும் மாயாற்றில் இருப்பது இப்பகுதியின் சிறப்புகளில் ஒன்று. மாயாற்றில் கணிசமான எண்ணிக்கையில் முதலைகள் இருப்பதோடு அழிவின் விளிம்பில் உள்ள நீர்நாய்களும் உள்ளன.
பழங்குடிகளும், தொன்ம வரலாற்று பதிவுகளும்
இந்த வனப்பகுதி இருளர், சோளகர், ஊராளி ஆகிய பழங்குடிகளின் வாழ்விடமாகவும் திகழ்கிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள கெஜலெட்டி பாதையில் பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய மண்பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
புதிய கற்கால கலைச்சின்னங்களும் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. திப்பு கெஜலெட்டியிலுள்ள சுல்தானின் படைகள் சென்ற கெஜலெட்டி தலைமலைப் பாதையும் கெஜலெட்டியிலுள்ள திப்புசுல்தான் பாலமும் 18ம் நூற்றாண்டின் வரலாற்றை தாங்கியுள்ள இடங்களாகும்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புவியியல் முக்கியத்துவம்
இந்திய புவியியல் அமைப்பின் மிக முக்கிய இடத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. தக்காணப் பீடபூமியின் தெற்குவிளிம்பில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமாகும்.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி உயிர்க்கோளத்தின் ஒரு பகுதியாகவும் சத்தியமங்கலம் வனப்பகுதி உள்ளது. முதுமலை, பந்திப்பூர், பிலிகிரி ரங்கன் கோவில் ஆகிய புலிகள் காப்பகங்களும், மாதேஸ்வரன் மலை சரணாலயமும், ஈரோடு, நீலகிரி வடக்கு, கோயமுத்தூர் ஆகிய வனக்கோட்டங்களும் சூழ்ந்துள்ள வனப்பரப்பின் மையமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
புலிகள் காப்பகம் எதற்காக?
இத்தகைய சிறப்பு மிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை பாதுகாப்பது என்பது புலிகளை பாதுகாப்பது மட்டுமல்ல, புலிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியின் மூலம் காடும், காட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன. காடு காப்பாற்றப்படுவதன் மூலம் நமக்கும், நம் தலைமுறைக்குமான உயிர்க்காற்றும் தண்ணீரும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் 5 இந்திய – ஆஸ்திரேலிய ஆய்வு நிறுவனங்கள் இணைந்து செய்த ஓர் ஆய்வின் அறிக்கை நம்மை வியக்க வைக்கிறது. புலிகள் காப்பகங்களை பாதுகாப்பதன் மூலம் கிடைக்கும் நேரடி, மறைமுக பயன்களை அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
புலிகள் காப்பகங்கள் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு ,விவசாயம், மீன்வளம், எரிபொருள், கால்நடைத் தீவனம், சிறுவன மகசூல், உயிர்ச் சூழல் வளம், புவியின் வெப்பநிலை உயருவதற்கு காரணமான கரியமில வாயுவை கட்டுப்படுத்துவது, தண்ணீர், மண் காத்தல் உள்ளிட்ட பயன்களை மதிப்பிட்டுள்ளனர்.
அதன்படி இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்கள் மூலம், 5.7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயன்கிடைப்பதாக அறிவித்துள்ளனர். அந்த மதிப்பீட்டின்படி புலிகள் காப்பகங்களில் ஒரு ஹெக்டேர் வனப்பரப்பு ஓராண்டுக்கு தோராயமாக 1,20,000 ரூபாய் அளவு பயன்தருவதாக வைத்துக்கொண்டால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆண்டுக்கு ரூ. 1,680 கோடி மதிப்புள்ள பயனைத்தருகிறது.
எனவே, புலிகள் காப்பகங்கள் நமக்கும், இன்னும் பிறக்காத நம் தலைமுறைக்குமான அரிய உயிர்ப்புதையல் என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறார் காளிதாசன்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சந்திக்கும் சவால்கள்
சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்டுள்ள புலிகள் காப்பகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், இன்னும் இங்கு உள்ள பிரச்சனைகளையும் ,மேம்படுத்த வேண்டிய அம்சங்களையும் பட்டியலிட்டுள்ளது அண்மையில் வெளியான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் முக்கிய காட்டுப்பகுதியின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையால் இங்கு வாழும் உயிரினங்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கின்றன என்று குறிப்பிடுகின்றது அந்த அறிக்கை. மேலும், இவ்வனப்பகுதியில் பரவியுள்ள வேற்று நிலத்தாவரங்கள் பெரும் ஆபத்தாக உள்ளன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஓடும் மாயாரின் ஆற்றங்கரையில் மட்டும் காட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய , லேண்டனா (Lantana camara) தாவரம் 25000 ஹெக்டேர் பரப்பிலும், சீமைக் கருவேலம் 7000 ஹெக்டேர் பரப்பிலும் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தக்காட்டுக்கே உரிய மரபுத் தாவரங்களின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும்.
மனித விலங்கு மோதல்களும் இங்கு அவ்வப்போது நிகழ்கின்றன. இந்த சவால்களை களைவதும், வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வன காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதும் உடனடியாக மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
வறட்சியிலும் வற்றாமல் ஓடும் மாயாறு, சமவெளியில் தொடங்கி மலைப்பகுதிவரை அடுக்கடுக்காய் அமைந்துள்ள காடுகள், நான்கு கொம்பு மான், வெளிமான்,புலி,யானை, கழுதைப்புலி, செந்நாய், சிறுத்தை என பலவகையான உயிரினங்கள் இணைந்து வாழ்கின்ற அரிய வனப்பகுதி, 1000க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்களின் வாழ்விடம் என பல சிறப்பம்சங்களை பெற்று தமிழகத்தின் பெருமையாய் திகழ்கிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். இத்தகைய சிறப்புமிக்க வனத்தை, திட்டமிடாத வளர்ச்சியின் பெயரால் ஒருபோதும் சிதைத்து விடக்கூடாது என்கிறார்கள் சூழலியலார்கள். -BBC_Tamil