அடி பணிந்தது பாகிஸ்தான்.. நாளை குல்பூஷண் ஜாதவை சந்திக்கிறார்கள் இந்திய அதிகாரிகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய தூதரகத்தின் உதவியை பெறுவதற்கும், தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. நாளை இதற்கான அனுமதியை வழங்க போவதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்து பின் பணி ஓய்வு பெற்றவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் சுற்றுலா சென்று அங்கு இருந்த போது உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். பல நாட்கள் விசாரிக்கப்பட்ட இவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2018 ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது.

இது இந்தியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை விடுதலை செய்யும்படி கடந்த பல மாதங்களாக இந்தியா கோரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. இதையடுத்து தீர்ப்பு வரும்வரை குல்பூஷனை தூக்கிலிட கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை 17ம் தேதி சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசை கடுமையாக கண்டித்தது. இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷண் ஜாதவுக்கு உரிமை உள்ளதாக சர்வதேச நீதிமன்றம் கூறியது.

அதோடு குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் , அதை நிறைவேற்ற கூடாது என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.

இந்த நிலையில் தற்போது இந்திய தூதரகத்தின் உதவியை பெறுவதற்கும், தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கும் குல்பூஷண் ஜாதவுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. நாளை குல்பூஷண் ஜாதவ் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தேவையான உதவிகளை பெறுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அரசின் வெளியுறவு விதிகளுக்கு உட்பட்டே இந்த சந்திப்பு நடைபெறும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இந்தியாவிற்கு அனுப்பி உள்ளதாகவும். அது தொடர்பாக இந்திய தரப்பு இன்னும் பதில் எதுவும் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு வலுவாக கொட்டு வைத்ததில் இருந்து சில நாட்களில் பாகிஸ்தான் இறங்கி வந்து குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி கோர அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவின் கை ஓங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: