இந்தியா மற்றும் பாகிஸ்தான் விரும்பினால் இருநாடுகளிடையேயான காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தயார் என்று தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்துக்கு மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கிழக்காசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோவை சந்தித்தபோது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், “இன்று காலை மைக் பாம்பேயோவுடன் நடந்த சந்திப்பில், காஷ்மீர் தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தையும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருதரப்புக்கு இடையே மட்டும் நடக்கும் என்று தெளிவுற விளக்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
- காஷ்மீர் பற்றி ஜெய்சங்கர்: “இருதரப்பு பேச்சுவார்த்தை போதும், அமெரிக்கா வேண்டாம்”
- காஷ்மீர் கதை: இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை – என்னவெல்லாம் நடந்தது?
முன்னதாக, இன்று காலை வாஷிங்டனில் பேசிய டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும், காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டு தீர்வு காண்பதற்கு விரும்பினால் செயலாற்றத் தயார் என்று தெரிவித்திருந்த நிலையில், ஜெய்சங்கர்-பாம்பேயோ இடையிலான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சென்ற மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், டொனால்டு டிரம்பை சந்தித்தார். அதையடுத்து நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் தான் தலையிட்டு தீர்வு காண்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.
டிரம்பின் இந்த கருத்து முற்றிலும் தவறானது என்றும், அதுபோன்ற எவ்வித கோரிக்கையும் இந்திய பிரதமரால் முன்வைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தது.
அப்போது, நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோதி கோரவில்லை. இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் பேசுவதற்கு அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும். இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அடிப்படையை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் வழங்குகிறது” என்று விளக்கம் அளித்திருந்தார். -BBC_Tamil