ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வரும் சூழலில், என்ன நடந்தாலும் ரகசியமாக நடக்காது, என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மலிக் கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், புரளிகளைப் பரப்ப வேண்டிய தேவை எதுவும் இல்லை. சிலர் அரசியல் சட்டப்பிரிவு 35-ஏ, 370 ஆகியவை ரத்து செய்யப்படும் என்கின்றனர், சிலர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்கின்றனர்; திங்கள் அல்லது செவ்வாய் வரை பொறுத்திருங்கள், எதுவாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ பற்றியோ, ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இது பற்றி தம்மிடம் இதுவரை எதையும் விவாதிக்கவில்லை என்றும் சத்யபால் மலிக் தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் காஷ்மீரில் கூடுதலாக 10,000 துணை ராணுவப் படையினர் இறக்கப்பட்டனர். பின்னர் மேலும் 25,000 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநில ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அந்த மாநிலத்தில் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறவேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை வெள்ளியன்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
வெளியேறும் பயணிகள்; பதற்றத்தில் உள்ளூர் மக்கள்
அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு நேற்று வெள்ளிக்கிழமை முதல் விடுதிகளை சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். அத்தியாவசித் தேவைக்கான பொருட்களையும் உள்ளூர் மக்கள் சேகரித்து வருகின்றனர்.
ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்களில் இருந்து இயக்ககப்படும் விமானங்களுக்கான டிக்கெட்டுகளை கட்டணம் எதுவும் இன்றி ரத்து செய்ய பல விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
ஆகஸ்ட் 15 வரை பல விமானங்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி – பாரதிய ஜனதா கூட்டணி அரசில் இருந்து 2018இல் பாஜக விலகியபின் அங்கு ஆளுநர் ஆட்சி அமலானது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் பிடி அங்கு அதிகமாக உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் பரஸ்பர குற்றச்சாட்டு
இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
எனினும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தி வெளியீட்டு அமைப்பான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இன்று, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கட்டுள்ளது.
- மூன்றாக பிரிக்கப்படுகிறதா ஜம்மு & காஷ்மீர் மாநிலம்?
- பயங்கரவாத அச்சுறுத்தல்: அமர்நாத் யாத்ரிகர்கள் உடனே வெளியேற உத்தரவு
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் உள்ள அப்பாவி குடிமக்கள் மீது இந்தியா கொத்து எறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா குரேஷி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
போர் வெறியால் இந்தியா பிராந்திய அமைதியை மட்டும் சீர்குலைக்கவில்லை, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் செய்கிறது என்று அவர் இன்னொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
தற்போது நிலவும் சூழலை உன்னிப்பாக கவனிக்குமாறு சர்வதேச நாடுகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜென்ரல் ஆசிஃப் கஃப்ரூர், “காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை எந்த ஆயுதத்தாலும் ஒடுக்க முடியாது. ஒவ்வொரு பாகிஸ்தானியின் ரத்தத்திலும் காஷ்மீர் உள்ளது; காஷ்மீர் மக்கள் தாங்களாக ஈடுபடும் சுதந்திரப் போராட்டம் வெல்லும்,” என்றும் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக முயல்வதாகவும், அதற்கு ஏதுவாக இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதாகவும் கூறியுள்ள இந்திய ராணுவம், இத்தகைய சூழல்களில் பதில் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் பாகிஸ்தானின் ராணுவ இலக்குகள் மற்றும் ஊடுருவும் தீவிரவாதிகள் மீது மட்டுமே இலக்கு வைத்து நடத்தப்படுகின்றன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. -BBC_Tamil