ஆறு மாடி கட்டடத்தின் மேலே பால்கனியில் அமர்ந்து கொண்டிருக்கும், 52 வயது ஆண் ஒருவர், தனது வளாகத்தில் கட்டி முடிக்கப்படாத கட்டடத்தைப் பார்த்துக் கொண்டே காலை நேர டீ பருகிக் கொண்டிருக்கிறார்.
டெல்லியின் புறநகரில், வளர்ந்து வரும் நொய்டாவில் அம்ரபாலி வீட்டுவசதி நிறுவனத்தில் அடுக்குமாடி வீடு ஒன்று வாங்குவதற்கு 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்ததில் இருந்து ராஜேந்தர் சிங் பூராவுக்கு இது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
“எங்கள் பிள்ளைகளுக்கு என்னால் நல்ல கல்வி அளிக்க முடியவில்லை. நடுத்தரக் குடும்பத்தின் வருமானத்தை நீங்கள் அறிவீர்கள். இன்னும் ஒப்படைக்கப்படாத அடுக்குமாடி வீடு ஒன்றில், சேமிப்பு அனைத்தையும் முதலீடு செய்த பிறகு என் குடும்பத்தை நடத்துவதே எனக்கு சிரமமாக உள்ளது. என் செலவுகளைச் சமாளிக்க ஒவ்வொரு மாதமும் நண்பர்களிடம் நான் கடன் வாங்க வேண்டியுள்ளது” என்று அவர் கூறுகிறார்.
தன்னுடைய முடிவு, மோசமான தவறாகிவிட்ட நிலையில், பாதி முடிக்கப்பட்ட அந்த வளாகத்தில் அடுக்குமாடி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்வதைத் தவிர போராவுக்கு வேறு வழியில்லை. தனது விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
துரதிர்ஷ்டவசமாக, அம்ரபாலியின் திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, பல ஆண்டுகளாக துன்பப்படும் மக்களில் போரா மட்டும் தனிப்பட்ட நபர் கிடையாது. நிறைய பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில மைல்களுக்கு அப்பால், வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், “தன் வாழ்நாள் சேமிப்புகளை இதுபோன்ற திட்டத்தில் முதலீடு செய்ய முடிவு எடுத்த நாளை” நினைத்துப் பார்க்கிறார்.
ஓய்வுபெற்ற கர்னல் ஜே.பி. ஷர்மாவுக்கு இப்போது அறுபது வயதாகிறது. “திட்டமிடப்பட்ட ஓய்வுக்கால வாழ்க்கையை வாழ முடிவு செய்து அம்ரபாலி வீட்டுவசதித் திட்டத்தில் 2012ல் நாங்கள் முதலீடு செய்தோம். சோகம் என்னவென்றால், அந்த அடுக்குமாடி வீடு இன்னும் எங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை. மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்துவதில் இருந்து அந்த நிறுவன அலுவலகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து போராடுவது வரை, நாங்கள் அனைத்து முயற்சிகளும் எடுத்துவிட்டோம்” என்று அவர் கூறுகிறார்.
தீவிர மன உளைச்சல், மன அழுத்தம், ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற குற்ற உணர்வு இந்தியாவில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மோசடி மற்றும் பணத்தை சுருட்டியதால் பல ஆண்டுகளாக இந்த நிறுவனத்தால் வீடுகள் ஒப்படைக்கப்படாத ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கை கொடுத்தது.
வீடு வாங்குவதற்கு மக்கள் செலுத்திய பணத்தையும், வங்கிக் கடன் தொகை என 500 மில்லியன் டாலர்களை சொந்த சொத்து வளர்ச்சிக்கு பயன்படுத்தியதாக அம்ரபாலி நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு பல வங்கிகளும் பொறுப்பாளிகள் என உச்ச நீதிமன்றம் கூறியது – இந்த நிறுவனத்துக்கு அளித்த கடன்களை கண்காணிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அத்துடன் அரசின் மேம்பாட்டு அதிகாரிகள் சிலரையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
“அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டம் (பெமா) மற்றும் அன்னிய நேரடி முதலீட்டு (எப்.டி.ஐ.) விதிமுறைகளை மீறி, வீடு வாங்குவதற்கு பதிவு செய்தவர்களின் பணம் வேறு வகையில் செலவிடப் பட்டுள்ளது” என்று நீதிமன்றம் கூறியது.
அரசால் நடத்தப்படும் என்.பி.சி.சி. (தேசிய கட்டட கட்டுமான கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனம் அம்ரபாலி திட்டங்களை முடித்துக் கொடுப்பதற்கு நீதிமன்றம் அங்கீகாரம் அளித்தது.
கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கு அம்ரபாலி நிறுவனத்துக்கு முன்பணம் செலுத்திய ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது நிவாரணம் தந்தது. அத்துடன் இந்தியாவின் வீட்டுவசதித் துறையில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
“இரண்டு வழிகளில் இது தனித்துவமானது. முதலீட்டாளர்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றுவதற்கு முதன்முறையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இது அரசின் முயற்சியாக இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, நாடு முழுக்க இன்னும் கட்டி முடிக்கப்படாத மற்ற அனைத்து திட்டங்களுக்கும் இது பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.”
இந்தியா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் அடுக்குமாடி வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.
இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1,50,000 வீடுகளைக் கட்டும் பணிகள் நின்று போய், வீடு வாங்குவோர் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருப்பதுதான்.
- தாய்ப்பால் ஊட்டுதல் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய தகவல்கள்
- மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் கருவி: ஆய்வுக்கு ஃபேஸ்புக் நிதியுதவி
கட்டி முடிக்கப்படாத இந்த ஐந்து லட்சம் வீடுகளில் 2,50,000 க்கும் மேற்பட்டவை மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் உள்ளவை. இதில் புனே நகரும் அடங்கும்.
டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் சுமார் 1,75,000 வீடுகளின் பணிகள் தாமதமாகியுள்ளன. தென் மாநிலங்களில் அதிகபட்சமாக பெங்களூரில் 25,000 வீடுகள் கட்டி முடிக்கப் படாமல் உள்ளன. அதையடுத்து சென்னை, ஹைதராபாத் நகரங்கள் உள்ளன.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை 2014 வரையில் வளர்ச்சி அடைந்ததாகக் கருதப்பட்டது.
முன்னணி வீட்டு வசதி நிறுவனங்கள் சரிவை சந்தித்ததை அடுத்து, வீட்டு வசதித் துறையும் சரிவைச் சந்தித்தது.
இந்தத் துறையில் கறுப்புப் பணப்புழக்கத்தை ஒழிப்பதில் அரசு கடைசியாக தீவிரம் காட்டிய நிலையில், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சரிவைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த திடீர் மற்றும் பெரிய சரிவுக்குப் பல காரணங்கள் உள்ளன.
எளிதில் கிடைக்கும் கடன் வசதி, குறைந்து வந்த வட்டி விகிதம் ஆகியவை இந்தத் துறையின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களாக இருந்தன.
ஆனால் பாதியில் தடைபட்ட மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய ஆயிரக்கணக்கான திட்டங்களின் தோல்விக்கும் இதுவே காரணமாகிவிட்டது.
அத்துடன், விவசாய நிலங்களை விற்பனை செய்து, வளர்ச்சி என்ற பெயரில் குறுகிய காலத்தில் வருவாய் ஈட்டுவதற்கு மாநில அரசுகள் ஆர்வம் காட்டியதால், தேவைக்கும் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கும் இடையில் சமன் இல்லாத நிலை உருவாகிவிட்டது என்று நம்பப்படுகிறது.
வீட்டுவசதித் துறையில் விலைகள் சரிந்தபோது, முடங்கிப்போன திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
வளர்ச்சி பாதிக்கப்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் தலையீடு இந்தத் துறையை மீட்டெடுக்குமா?
குலாம் ஜியா போன்ற ரியல் எஸ்டேட் நிபுணர்கள், இப்போது நல்லது நடப்பதுபோலத் தெரிகிறது ஆனால், இந்தத் துறையில் பிரச்சினைகள் உள்ளன என்கிறார்கள்.
“பெரிய நிறுவனங்கள் என கருதப்பட்ட பல வீட்டுவசதி நிறுவன உரிமையாளர்கள், சரிவை சந்தித்து இப்போது விழுந்து கிடக்கின்றனர். வீட்டுவசதித் துறை மூழ்கும் நிலையில் உள்ளது. வீடு வாங்க முயற்சித்த ஏழைகள் தான் இந்தக் குழப்பத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் உருவாக்கும் அனைத்து சிக்கல்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் சட்டப்படியான நடைமுறைகளால் தீர்வு கண்டுவிட முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் ஒழுங்குமுறை கட்டமைப்பு ஒன்றும் தேவைப்படுகிறது” என்று குலாம் ஜியா கூறுகிறார்.
- “பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்”: சேரனுக்காக உருகும் வசந்த பாலன்
- பாலிவுட் நடிகை சன்னி லியோனால் தொல்லையில் சிக்கிக் கொண்ட இளைஞர்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிட்டாலும், அம்ரபாலி அல்லது வேறு திட்டங்கள் முடங்கியதால் பாதிக்கப்பட்டவர்களைப் பொருத்த வரை, இது எவ்வளவு காலத்தில் முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரசின் கட்டுமான நிறுவனமான என்.பி.சி.சி. இவற்றைக் கட்டி முடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதிலும், இதற்கான நிதித் தேவை அடுத்த பிரச்சினையாக இருக்கும்.
என்.பி.சி.சி.யிடம் சொந்தமான நிதி ஆதாரம் இல்லை. அம்ரபாலியின் நிலங்களை ஏலம் விடுவது, விற்கப்படாத வீடுகளை விற்பது, வீடு வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகளை வசூலிப்பது ஆகியவற்றைத்தான் என்.பி.சி.சி. நம்பியிருக்க வேண்டும்.
“கைவிடப்பட்ட அடுக்குமாடிகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. லிப்ட்களின் பகுதிகள் பாதுகாப்பற்றவையாக இருப்பதால், இவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இப்போது என்னுடைய 10 சதவீத நிலுவைத் தொகையை, திட்டத்தை முடித்துக் கொடுக்கும் என்.பி.சி.சி. நிறுவனத்துக்கு நான் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கு என்னிடம் பணம் இல்லை. என்னுடைய அடுக்குமாடி வீட்டை கட்டி முடிப்பதற்குத்தான் அந்தப் பணம் செலவிடப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது” என்று கிரேட்டர் நொய்டா பகுதியில் வசிக்கும் பல்வந்த் சிங் கேள்வி எழுப்புகிறார்.
வீட்டுக் கடன் தவணைகளைச் செலுத்திக் கொண்டிருப்பதால், வீட்டு வாடகை தரும் அனைத்து சக்திகளையும் இழந்துவிட்டதால், பாதி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த தனது அடுக்குமாடி வீட்டில் 2018ல் குடியேறுவதைத் தவிர வேறு வழி அவருக்குத் தெரியவில்லை.
“சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில்” நிறைய தடங்கல்கள் இருப்பதாக குலாம் ஜியா போன்ற ரியல் எஸ்டேட் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
“வீடு வாங்கிய அனைவரும் மீதம் உள்ள பாக்கி தொகையை இருதரப்பாரின் ஒப்புதலுடன் பணத்தை செலவிட வகை செய்யும் எஸ்க்ரோ கணக்கில், குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாமல் போனால் இந்தத் திட்டங்களை நிறைவு செய்யும் பணி பாதிக்கப்படும். வீடு வாங்கியவர்களில் பலர் தங்கள் சேமிப்புகளை இழந்துவிட்டனர் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார் அவர்.
அம்ரபாலி விஷயத்தில் என்.பி.சி.சி.க்கான வாய்ப்புகள் சாத்தியமானவையாக அமைந்தாலும், வேறு சில திட்டங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
“இதுபோன்ற மற்ற திட்டங்களை என்.பி.சி.சி. எடுத்துக் கொள்வதையும் பரிசீலிக்க வேண்டும். எனவே, நின்றுபோயுள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் இது தான் தீர்வு என்று தரப்படுத்திவிட முடியாது” என்று குலாம் ஜியா கூறியுள்ளார்.
வாடகை வீட்டில் வசிப்பதைவிட, ஒரு வீடு வாங்குவது நல்லது என்று பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் நம்புகிறார்கள்.
இந்தச் சரிவுக்குப் பிறகும், ரியல் எஸ்டேட் துறை இன்னும் கவர்ச்சியான துறையாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தத் துறையின் வளர்ச்சி ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஆனால் போரா அல்லது கர்னல் கன்னா போன்ற, நிறைவேறாத கனவுகளுடன் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் இனியொரு முறை வீடு வாங்கும் திட்டத்தில் ஒருபோதும் முதலீடு செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். -BBC_Tamil