காஷ்மீரில் ஜூலை 26ம் தேதி முதல் இன்று வரை நடந்த சம்பவங்களை 10 தகவல்களாக தொகுத்துள்ளோம்.
- இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது 10,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்படுவதாக ஜூலை 26 அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சக ஆணையின் நகல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இது அச்சத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கியது. ஆனால், இது வழக்கமான நடைமுறை என்றும் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறியது மத்தியில் ஆளும் பாஜக அரசு.
- ஜம்மு – காஷ்மீரில் ஏற்கனவே 10,000 கூடுதல் காவல் படையினர் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 25,000 படையினரை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, இந்திய அரசால் உத்தரவிடப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து போன்றவற்றில் மிகப்பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலாம் என்ற அச்சம் அங்கு நிலவிய சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 35-ஏ பிரிவு மற்றும் 370 வது பிரிவை ரத்து செய்ய பா.ஜ.க அரசு முயல்வதாக தகவல்கள் பரவின.
- அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை கேட்டுக்கொண்டது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க பா.ஜ.க அரசு முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கை அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்தித்தார்.
- பதற்றம் அதிகரித்த நிலையில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேகரிக்க தொடங்கினர்.
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ எந்த அறிவிப்புகளும் அறிவிக்கப்படப் போவது கிடையாது என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.
- இப்படியான சூழலில், காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் கொத்து எறி குண்டுகளை வீசி, இந்தியா தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உள்பட இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் முயல்வதாவும், தங்கள் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் கூறும் இந்தியா, இந்தச் சூழ்நிலைகளில் பதில் தாக்குதல் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியது.
- இந்தியா உடனான மோதலின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான ‘பார்டர் ஏக்ஷன் டீம்’ படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் என்று இந்திய அரசால் கூறப்படுபவர்களின் உடல்களை எடுத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் தாங்கள் கூறியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
- ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை மீண்டும் தொடங்குகிறது. -BBC_Tamil