இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ல் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியுமா? என்று சட்ட வல்லுநர்களிடம் கேள்வி எழுப்பினோம். அவர்கள் இதில் இரு வேறு கருத்துகளை தெரிவித்தனர்.
முன்னாள் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “உச்சநீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது” என்றார்.
“சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ- வில் மாற்றம் கொண்டு வரும் அரசின் முடிவானது நிர்வாகத் துறையின் வரையரையின்கீழ் வருகிறது. இதனை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியுமென நான் நினைக்கவில்லை. நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க முடியாது” என்றார்.
தற்காலிக ஏற்பாட்டில்தான் அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது என விளக்கிய அவர், “ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் அனைத்து அடிப்படை உரிமைகளுக்கான பலன்களும் கிடைக்கும்,” என்கிறார்.
“அதுமட்டுமல்ல இனி அனைவருக்கும் சமமான வசதிகள் கிடைக்கும்,” என்று சிங் பிபிசியின் நீதிமன்ற செய்தியாளர் சுசித்ராவிடம் தெரிவித்தார்.
- காஷ்மீர் விவகாரத்தில் இன்று என்னவெல்லாம் நடந்தது? – 10 முக்கிய தகவல்கள்
- காஷ்மீரில் இனி வரக்கூடிய நாட்களில் வன்முறை வெடிக்கலாம் – களத்திலிருந்து பிபிசி செய்தியாளர்
இந்த கருத்தில் முரண்படும் முன்னாள் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.சி. கெளசிக், “நிச்சயம் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்,” என்கிறார்.
“பாதிப்புக்கு உள்ளானதாக கருதும் தரப்பு இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும். ஆனால், யார் அல்லது எந்த அமைப்பு இந்தச் சூழலில் வழக்கு தொடுப்பார்கள் என என்னால் கூறமுடியாது. ஆனால், பின்னர் வழக்கு தொடுக்கலாம்” என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் கெளசிக்.
எந்த உத்தரவினாலாவது யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அரசமைப்புச் சட்டம் இதுகுறித்து தெளிவாக கூறுகிறது என்கிறார்.
பா.ஜ.கவின் முடிவை வரவேற்கிறார் கெளசிக். ஆனால், இதனை எப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் அவரிடம் பணியாற்றிய சர்வதேச வழக்கறிஞர் சூரத் சிங், “இது வரலாற்று சிறப்புமிக்க நாள். 1950ஆம் ஆண்டிலிருந்து நிகழ்த்த முடியாத ஒரு விஷயம், இப்போது நிகழ்ந்திருக்கிறது,” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியுமா என்பது குறித்து பேச மறுத்த அவர், இதன் நேர்மறையான விஷயங்களை பேசலாம் என்றார். -BBC_Tamil