அமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பெண்களுக்கு எதிரானவர்கள்”

காஷ்மீரிருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பெண்களுக்கு, பழங்குடிகளுக்கு மற்றும் கல்விக்கு எதிரானவர்கள் என்றும், இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் வரலாற்று பிழையை திருத்தியுள்ளோம் என்றும் மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்க மசோதா தாக்கல் செய்தார். அங்கு அந்த மசோதா வெற்றி பெற்றதை அடுத்து இன்று மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இச்சூழலில், வாக்கெடுப்பு நடப்பதற்குமுன், மசோதாவுக்கு எதிராக கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா.

சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பழங்குடிகளுக்கு, பெண்களுக்கு மற்றும் கல்விக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்ட அமித் ஷா, இந்த சட்டப்பிரிவால் காஷ்மீரில் வாழ்ந்த பிராமணர்கள் விரட்டப்பட்டார்கள் என்றும், அப்போது சமத்துவம் எங்கே இருந்தது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைஸியின் கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, தாங்கள் வரலாற்று பிழையை செய்யவில்லை என்றும், ஏற்கனவே செய்யப்பட்ட வரலாற்று பிழையை திருத்தியுள்ளதாகவும் அமித் ஷா பேசினார்.

மேலும், “ஐந்தாண்டுகளுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சியில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்படவுள்ள மாற்றங்களை பார்த்து சட்டப்பிரிவு 370இன் பின்விளைவுகளை காஷ்மீர் மக்கள் புரிந்து கொள்வார்கள்,” என்றார்.

ஒரே இரவில் ஜம்மு மற்றும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத்துவிட்டது என்று பேசிய உறுப்பினர் மணீஷ் திவாரிக்கு பதிலளித்த அமித் ஷா, 1975ஆம் ஆண்டில் இந்த ஒட்டுமொத்த நாட்டையும் யூனியன் பிரதேசமாக மாற்றியது என்று பதிலடி கொடுத்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று குறிப்பிட்ட அமித் ஷா, இயல்பு நிலை திரும்பும்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார். -BBC_Tamil

TAGS: