கேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள்

“வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை விட்டு சென்றேன். கிட்டத்தட்ட அரைமணிநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது. எனது மனைவியையும், மகனையும் அங்கு காணவில்லை” என்று கூறுகிறார் லாரன்ஸ். தற்போது தனது பன்னிரண்டு வயது மகனை மட்டும் கண்டறிந்த அவர், வயநாட்டிலுள்ள பள்ளி ஒன்றில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாமில் வசித்து வருகிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கடும் மழைப் பொழிந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி, வயநாட்டிலுள்ள பச்சக்காடுமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வீடுகளோடு அதில் வாழ்ந்து வந்த மக்களும் அடியோடு புதைந்துவிட்டனர். இதுவரை பத்து பேரின் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

லாரன்ஸ்

இன்னமும் காணக்கிடைக்காத சுமார் எட்டுப் பேர் இதே இடத்தில் நிலச்சரிவில் சிக்கி புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் லாரன்ஸின் மனைவி ஷைலாவும் ஒருவர். தனது மனைவி திரும்ப வருவாரா என்று லாரன்ஸ் காத்திருக்கும் முகாமில், ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

வேறு வழியின்றி நிவாரண முகாமான அப்பள்ளியிலுள்ள மேசைகளை கட்டிலாக நினைத்துக்கொண்டு மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கு முயற்சித்து வருவதை பார்க்க முடிகிறது. பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் வீரியம் குறித்து ஒருவருக்கொருவர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கேள்விக்குறியாகியுள்ள எதிர்காலத்தை நினைத்து அங்கிருப்பவர்கள் ஆழ்ந்த வேதனையில் இருக்கின்றனர். தனது வாழ்க்கை என்று நினைக்கும் அனைத்தையுமே இந்த வெள்ளம் அடித்து சென்றுவிட்டதாக அங்கிருக்கும் அஜித்தா எனும் மூதாட்டி கூறுகிறார். இந்த முகாமில் இருக்கும் பெரும்பாலான மக்கள், அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிகின்றனர்.

திங்கட்கிழமை மதிய நிலவரப்படி, கேரளா முழுவதும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12க்கும் அதிகமானோர் வயநாட்டை சேர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி, இந்த பகுதியில் மட்டும் சுமார் 58 பேரை காணவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கேரளா வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை அரசாங்கத்துடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விநியோகித்து வருகின்றனர். சானிட்டரி நேப்கின்கள், அவசரகால மருந்துகள், தண்ணீர், உணவு உள்ளிட்டவை எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தலா ஒரு சேலை மற்றும் வேட்டி, படுக்கை விரிப்பு மற்றும் துண்டு ஆகியவை அடங்கிய தொகுப்பு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், மக்களின் தேவையை போக்குவதற்கு மேலதிக நிவாரண பொருட்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்களின் உடல்நிலையை கருதி வயநாடு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

முகாம்கள்

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மருத்துவ தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வயநாடு மாவட்டத்தின் துணை மருத்துவ அதிகாரி பிரியா பிபிசியிடம் கூறினார். “நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் உடல்நிலையை கவனித்து கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதுமட்டுமின்றி, தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு தனியே மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம். குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சிறப்பு செயல்பாடுகளை ஏற்படுத்தியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.

வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டார். “நிவாரண முகாம்களை நான் பார்வையிட்டேன். இங்கு ஏற்பட்டுள்ள சேதத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தேவையான உதவியை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டுமென்று மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். அடுத்த சில நாட்களுக்கு நான் இங்கே இருப்பதற்கு திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரகாலமாக பொழிந்து வந்த மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் வீரியம் தற்போது சற்றே குறைந்துள்ளது என்று கூறலாம். கேரளாவின் எந்த பகுதிக்கும் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்படவில்லை.

வயநாட்டை போன்றே மழையின் காரணமாக பேரழிவை சந்தித்துள்ள கேரளாவின் மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று கருதப்படுவதால், அவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படை, கடலோரப்படை, பொறியியல் பணிக்குழு மற்றும் ராணுவ வீரர்கள் மீட்புதவி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். -BBC_Tamil

TAGS: