ராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அம்மக்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும் என நம்புகிறேன்”

இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இங்கு மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் என்பதை சுட்டிக்காட்டிய ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி வாழ்ந்த இந்தியாவை விட தற்போது நாம் வாழும் இந்தியாவுக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தும் காந்தி அப்போது கூறியது சமகால இந்தியாவுக்கும் பொருந்தும் என்றார்.

அரசியல் மாற்றம் வரவேண்டும் என்று மட்டும் அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரவில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகத்தினை உயர்த்த வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது என்றும் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

“அப்படியிருக்கும்போது, சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், அப்பிராந்திய மக்களுக்கு அதிக பலன்களை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இதனால், அங்குள்ள மக்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகள், பலன்கள் மற்றும் அதே வசதிகளை அனுபவிப்பார்கள். அனைவருக்கும் கல்வி, ஆர்டிஐ சட்டம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, முத்தலாக் மசோதா என அனைத்தும் அங்குள்ள மக்களுக்கும் இனி பொருந்தும்” என்றார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் அதிகளவில் திரண்டு வாக்களித்த வாக்காளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

அதிகளவில் இந்தியர்களை கொண்ட நாடான இந்தியாவில், நம் இளைஞர்களின் திறமைகளை விளையாட்டு, அறிவியல், போன்று பல்வேறு துறைகளில் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தியர்கள் சந்திர மண்டலத்திற்கும் செவ்வாய் கிரகத்திற்கும் சென்று ஆராய அச்சமில்லாதவர்கள். பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பு காட்டும் பண்பை கொண்டவர்கள் என்று கூறிய ராம்நாத் கோவிந்த் அதனைத் தொடர்ந்து பாரதிதாசனின் வரிகளை சுட்டிக்காட்டி தமிழில் பேசினார்.

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்

வானையளப்போம் கடல்மீனையளப்போம்

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்

சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்

அதாவது “அறிவியலையும் கற்போம், இலக்கியத்தையும் கற்போம். வானையும் கடல்களையும் பற்றி அறிவோம், சந்திர மண்டலத்தின் மர்மங்களை அவிழ்ப்போம். அதுமட்டுமல்லாது நம் தெருக்களையும் நாம் சுத்தம் செய்வோம்” என்ற அர்த்தத்தில் உள்ள பாரதிதாசனின் வரிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

-BBC_Tamil

TAGS: