நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: ‘5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு’ – எப்படி சாத்தியம்?

இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பறக்கவிட்ட பிரதமர் நரேந்திர மோதி, தன்னுடைய சுதந்திர தின உரையில் தம்முடைய அரசு எடுத்த முக்கிய முடிவுகள், தேசம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளுக்கு தாம் முன்வைக்கும் தீர்வுகள் ஆகியவை குறித்து விளக்கியிருக்கிறார். அவர் முன்வைக்கும் திட்டங்கள், தீர்வுகள் எத்தகையவை?

பிரதமர் நரேந்திர மோதியின் இன்றைய உரையில் விஷயங்களில் நான்கைந்து, மிக முக்கியமான விஷயங்களாகப் பார்க்கப்பட்டன.

முதலாவதாக, பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ஒரு பதவியை தமது அரசு உருவாக்கும் என்று தமது சுதந்திர தின உரையில் தெரிவித்தார் பிரதமர் மோதி.

அடுத்ததாக, ஒரு நாடு, ஒரு வரி என்ற கனவுக்கு ஜி.எஸ்.டி. உயிர் கொடுத்தது என்று கூறிய மோதி, நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பற்றி இந்தியா தற்போது பேசிவருகிறது என்று தெரிவித்தார்.

அடுத்ததாக, மக்கள்தொகைப் பெருக்கம் பற்றி பெரிய அளவில் விவாதமும், விழிப்புணர்வும் தேவை என்று குறிப்பிட்டார் பிரதமர். “மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், செல்வங்களை உருவாக்குவது தேசிய சேவை. அதைச் செய்வோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது என்றும் வரும் ஐந்தாண்டுகளில் வளர்ச்சிக்காக 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

“முப்படைகளின் தலைவர்”: ராணுவத்தின் நீண்ட காலக் கோரிக்கை

இந்தியாவின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைவர் இருக்கும் வகையில், Chief of Defence staff என்ற பதவி உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்தி மோதி இப்போது அறிவித்திருந்தாலும், கார்கில் யுத்தம் முடிவடைந்த பிறகிலிருந்தே விவாதிக்கப்பட்டுவரும் திட்டம் இது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, தலைவர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். சீனாவிலும் இதேபோல முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

பழைய டெல்லியில் இருக்கும் செங்கோட்டைபடத்தின் காப்புரிமைSOPA IMAGES
Image captionபழைய டெல்லியில் இருக்கும் செங்கோட்டை

கார்கில் யுத்தம் முடிவடைந்த பிறகு ஓய்வு பெற்ற ஜெனரல் ஷெகட்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் அதே நேரம், செலவுகளைத் திறம்படச் செய்வதை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பது இந்தக் குழுவின் வேலை. இந்த ஷெகட்கர் கமிட்டி அளித்த முக்கியமான பரிந்துரைதான் இது.

“நீண்ட காலமாக தரைப்படை இந்தப் பதவியை உருவாக்க வேண்டுமெனக் கோரிவருகிறது. இப்போது ராணுவத்திற்கான பொறுப்பு தரைப்படைத் தளபதியிடம் இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் பாதுகாப்புத் துறைச் செயலரிடம் உள்ளது. ராணுவத்திற்கென தலைமைத் தளபதியை நியமித்தால், அவர்கள் நேரடியாக குடியரசுத் தலைவருக்குக் கீழ் வருவார்கள். முப்படைகளின் திறனை ஒருங்கிணைக்க இந்தப் பதவி வெகுவாக உதவும்,” என்கிறார் ஓய்வுபெற்ற கர்னல் ஹரிகரன்.

தரைப்படையில் அதிக வீரர்கள் இருக்கிறார்கள். அதிகப் பணியாளர்களும் உண்டு. அண்டை நாடுகளுடனான மோதலின்போது முதலில் களத்தில் இறங்குவது இவர்களாகவே இருக்கிறது. இதற்குப் பிறகு விமானப்படை, கடற்படை ஆகியவை களத்தில் இறங்குகின்றன. இருந்தாலும் ராணுவத்திற்கான பட்ஜெட்டின்போது, அதிக செலவு என்பது விமானப்படை, கடற்படைக்குக் ஆகிறது என்ற தோற்றமே இருக்கிறது.

மேலும், யுத்த காலங்களில் எந்தப் படை எதைச் செய்ய வேண்டும், அச்சுறுத்தல் எப்படிப்பட்டது என்பதை மூன்று படையினரும் சேர்ந்து புரிந்துகொண்டு செயல்படுவதில் சிக்கல் இருக்கிறது. தற்போது இந்தப் பணியை பாதுகாப்புத் துறைச் செயலரே செய்கிறார்.

தரைப்படைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ராணுவத் தளவாடங்களுக்கான செலவு வெகுவாக அதிகரித்திருக்கிறது. ஆகவே, குறைந்த நேரத்தில் தீவிரத் தாக்குதல் என்பதுதான் இனிவரும் காலங்களில் போர் யுத்தியாக இருக்கும். அதற்கு சிறந்த ஒருங்கிணைப்புத் தேவைப்படும். இம்மாதிரி ஒரு பதவி உருவாக்கப்பட்டால், தங்களுடைய அதிகாரம் பறிபோகும் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் பலர் கருதினார்கள். ஆனால், இது காலத்தின் கட்டாயம் என்கிறார் ஹரிகரன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, மத்திய அரசு இந்தப் பதவியை உருவாக்க விரும்பினாலும் அரசியல் ரீதியாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த காத்திருந்தது. இந்நிலையில்தான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார் பிரமதர் மோதி.

மக்கள் தொகைப் பெருக்கம்: யார் இலக்கு?

“இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மக்கள் தொகைப் பிரச்சனை பற்றி நான் பேச விரும்புகிறேன்” என்று பேசிய மோதி, “மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி பெரிய அளவில் விவாதமும், விழிப்புணர்வும் தேவை. முறையாக குடும்பக் கட்டுப்பாடு செய்தால், சிறிய குடும்பங்களால் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, மன நிறைவோடு இருக்க முடியும்” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது ஒரு நீண்ட காலப் பிரச்சனை. இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 132 கோடியைத் தாண்டியிருக்கிறது. 2025வாக்கில் உலகின் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இந்தியா உருவெடுக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தக் கருத்தை பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நீண்ட காலமாகவே முயற்சிகளை மேற்கொண்டுவந்திருக்கிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சியின் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க, நெருக்கடி நிலை காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாயின.

இந்தியாவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) விவாதங்களில் எப்போதுமே உண்டு. 2015ஆம் ஆண்டில் தசரா கொண்டாட்டங்களையொட்டி ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் பேசிய அதன் சர்சங்க சாலக் மோகன் பகவத், எல்லோருக்கும் பொருந்துவதான ஒரு மக்கள் தொகைத் திட்டக் கொள்கையை வடிவமைக்க வேண்டுமென்றார். வாக்குவங்கி அரசியலைத் தாண்டி இதனைச் சிந்திக்க வேண்டுமென்றார்.

மக்கள் தொகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

குறிப்பாக இந்துக்களின் மக்கள் தொகை அதிகரிப்பதைவிட இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் சதவீதம் கூடுதலாக இருப்பதாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது.

இன்றைய பேச்சில் பிரதமர் மோதி எந்த மதத்தையும் குறிப்பிட்டு மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கருத்தை முன்வைக்கவில்லை.

“இந்த மக்கள் தொகை பெருக்க விவகாரத்தில் பல விஷயங்களைப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்தியாவில் உள்ள வளர்ந்த மாநிலங்களில் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது, இப்போது இருக்கும் மக்கள் தொகையை தக்கவைக்கும் விகிதத்தைவிட கீழே வந்துவிட்டது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் நிலைமை அப்படியே மாறாக இருக்கிறது. இந்த மாநிலங்கள்தான் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து அங்கேதான் பேச வேண்டும்,” என்கிறார் புள்ளியியல் வல்லுனரான ஆர்.எஸ். நீலகண்டன்.

மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் விகிதம் 8-9 சதவீதம்தான். ஆனால், அங்கே மக்கள் தொகைப் பெருக்கம் 3.6 சதவீதமாக இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கேரளா, மேற்குவங்கத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் 1.6 சதவீதமாக இருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றிப் பேசும்போது இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

செல்வத்தை உருவாக்குவோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது: அப்படிப் பார்ப்பது யார்?

பொருளாதாரம் குறித்தும் முதலீடுகள் குறித்தும் தொழில்துறை குறித்தும் தன்னுடைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார் நரேந்திர மோதி. குறிப்பாக, செல்வத்தை உருவாக்குவது தேச சேவை. அதைச் செய்வோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது எனக் கூறினார் மோதி.

மேலும், வளர்ச்சியை ஏற்படுத்த வரும் ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

“செல்வத்தை உருவாக்குவோரை அரசுதான் சந்தேகத்துடன் பார்க்கிறது. அதனால்தான் மிகவும் செல்வமுடையோருக்கு சிறப்பு வரி விதிக்கப்படுகிறது. மேலும் தற்போது சிஎஸ்ஆர் எனப்படுவது தன்னார்வ முறையில் செய்யப்படுகிறது. ஆனால், இதனைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருகிறது மத்திய அரசு. இவற்றை தொழில்துறையினர் எதிர்த்திருக்கிறார்கள். ஆகவே, பொதுமக்கள் யாரும் செல்வந்தர்களை சந்தேகத்தோடு பார்க்கவில்லை” என்கிறார் சென்னை பொருளியல் துறையின் தலைவரான ஜோதி சிவஞானம்.

அடுத்த ஐந்தாண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பதும் சாத்தியமில்லை என்கிறார் அவர். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 150 லட்சம் கோடி. இதில் அரசின் செலவு என்பது 12 சதவீதம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 14 சதவீதமாக இருந்தது இப்போது 12 சதவீதமாக குறைந்திருக்கிறது. தனியார் முதலீடுகள் இல்லை. 3 முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை. வங்கிகளில் சேமிப்பு குறைந்திருக்கிறது. இந்த நிலையில், வருடத்திற்கு 20 லட்சம் கோடி முதலீடு எங்கிருந்து வரும். அரசு தன்னுடைய தினச் செலவுக்கே கடன் வாங்குகிறது. அப்படியிருக்கும்போது எப்படி முதலீட்டிற்கு பணம் வரும் என கேள்வியெழுப்புகிறார் சிவஞானம்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, 4.4 பில்லியன் டாலர் பணம் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியிருக்கிறது. இதனால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், தங்கத்தைக் கூடுதலாக இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. ரூபாயின் மதிப்பு இந்தத் தருணத்தில் குறைவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். இம்மாதிரி சூழலில் 20 லட்சம் கோடி முதலீடு என்பது எப்படி சாத்தியமெனத் தெரியவில்லை என்கிறார் சிவஞானம்.

ஒரு நாடு ஒரு தேர்தல்: பதில் இல்லாத கேள்விகள்

இந்தியா முழுவதும் பொதுத் தேர்தல்களையும் சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த விவாதத்தை கடந்த ஆட்சிக் காலத்திலேயே பா.ஜ.க. துவங்கிவிட்டது. ஆனால், அந்த முறையில் இருக்கும் குழப்பங்கள் குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தேர்தல்படத்தின் காப்புரிமைPIB INDIA

இந்த முறை தேசியக் கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும், தற்போது ஆட்சியில் உள்ள மாநில அரசுகளை முன்கூட்டியே கலைக்க வேண்டும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது எப்படி, கூடுதலாகத் தேவைப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு என்ன செய்வது, உறுப்பினர்கள் இறப்பதால் பெரும்பான்மை இழக்கும் அரசுகளின் நிலை என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை.

இந்த நிலையில்தான் இந்தக் கருத்தை மீண்டும் முன்வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.

இறுதியாக வரவேற்கத்தக்க சில அம்சங்களையும் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோதி சுட்டிக்காட்டினார். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும்படியும் உழவர்கள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும்படியும் கோரியிருக்கிறார் மோதி.

கடந்த 2018ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், எரிவாயு, வீட்டு வசதித் திட்டம், ஆயுஷ்மான் திட்டம் போன்றவற்றைப் பேசிய பிரதமர், இந்த ஆண்டு சுதந்திர தின உரையில், அடுத்த ஐந்தாண்டுகளில் தங்களுடைய ஆட்சி செல்லவிருக்கும் திசையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், பொருளாதார ரீதியாக பிரதமர் முன்வைக்கும் பார்வை எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. _BBC_Tamil

TAGS: