காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் – ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370ஐப் பொறுத்தவரை, அது மொத்தமும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதே எங்கள் நிலையாக இருந்தது, இப்போதும் அதே நிலையே நீடிக்கிறது என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் ஐ.நாவுக்கான நிரந்தர இ,ந்திய பிரதிநிதி சையது அக்பருதீன் அங்குள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்திய அரசு மற்றும் இந்தியாவின் சட்டமியற்றும் அமைப்புகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக நல்ல ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தவும், சமூக பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கவுமே என்று சையது அக்பருதீன் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாகக் குறைப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும், அங்கு அமைதி ஏற்படுவதை இந்தியா உத்தரவாதப்படுத்தும் என்றும் சையது அக்பருதீன் கூறியுள்ளார்.

ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதர் சையத் அக்பருதீன்படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES/GETTY IMAGES
Image captionஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன்

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவவும், இது தொடர்பாக கையெழுத்திட்டுள்ள எல்லா ஒப்பந்தங்களுக்கும் இசைவாகவும் நடப்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பாகிஸ்தான் வன்முறை மற்றும் ஜிகாத் பற்றியே பேசி வருகிறது. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை உதவாது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுகு்கும் இடையே உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இரு நாட்டுக்கும் இடை்யிலான இயல்பான உறவோடு இது நடைபெறும். தீவிரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழ்நிலையில் அமைதியான தீர்வுகளை உருவாக்க நாங்கள் தயாராகவுள்ளோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று சொன்னாலும், ஏதாவது ஒரு காரணததை சாக்ககுப்போக்காக வைத்து கொண்டு பாகிஸ்தானிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாமலேயே உள்ளது. எப்போது பாகிஸ்தானோடு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “நானே பல முறை பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் சென்றுள்ளேன். அங்கு உயர் ஆணையராக இருந்துள்ளேன். நாடுகளுக்கு இடையே இயல்பான ராஜீய உறவை பேணும் முறைகள் உள்ளன. தீவிரவாதம், வன்முறை கொண்டு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்ல. பேச்சுவார்த்தையை தொடங்க, தீவிரவாதத்தை நிறுத்துங்கள் என்று அக்பருதீன் பதிலளித்தார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீர் பிரச்சனை இனிமேலும் உள்நாட்டு விவகாரம் அல்ல, சர்வதேச விவகாரம் ஆகியுள்ளதல்லவா என்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில், அதன் உறுப்பு நாடுகள் சர்ச்சைகளை எழுப்ப முடியும். இந்த கூட்டத்தின் முடிவுகளை நீங்களே அறிவீர்கள். இந்த பிரச்சனையை இயல்பான உறவு கொண்ட நாடுகள் அணுகுகின்ற முறையில் அணுக இந்தியா தயாராகவுள்ளது. நாங்கள் சிம்லா உடன்படிக்கையை கடைபிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம். பேச்சுவார்த்தையை தொடங்க, தீவிரவாதத்தை நிறுத்துவது பாகிஸ்தானிடம்தான் உள்ளது என்று அவர் பதிலிளித்தார்.

உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி பிபிசியிடம் பேசுகையில், இது பற்றி ஐநாவிலுள்ள சீன பிரதிநிதி தெரிவித்த கருத்துக்களை கூறினார்.

சர்ச்சைக்குரிய பிராந்தியமான காஷ்மீர் குறித்து தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான சீன தூதர் ட்சாங் ஜுன் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் பாகிஸ்தான் பிரதிநிதி மல்லிகா லோதி, “காஷ்மீர் பிரச்சனை தற்போது சர்வதேச பிரச்சனையாகியுள்ளது. பல தசாப்தங்களுக்கு பிறகு இந்தப் பிரச்சனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் எழுப்பப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சனை உள்நாட்டு விவகாரம் அல்ல, சர்வதேச விவகாரம் என்பதை இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமையை நீக்க இந்தியா முடிவெடுத்த நிலையில், அதை எதிர்த்து பாகிஸ்தான் எழுதிய புகார் பற்றி மூடிய கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இணைய தளத்தில் உள்ள கூட்ட நிகழ்ச்சி நிரலில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் குறித்து மூடிய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூடிய கூட்டம் என்பதன் பொருள், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவரங்கள் வெளியில் தெரிவிக்கப்படாது என்பதாகும்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் குறித்து ஐ.நா. வில் இந்தியா அளித்த வாக்குறுதியும், ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் கவனம் பெறுகின்றன.

75 லட்சத்துக்கு விற்கப்பட்ட காஷ்மீர்

பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியத் துணைக் கண்டம் 1947-ல் இந்தியா – பாகிஸ்தான் என்ற இரு டொமினியன்களாகவும், 565 தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களாகவும் சுதந்திரம் பெற்றன.

தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களுக்கு மூன்றுவிதமான தேர்வுகள் இருந்தன. ஒன்று அவை இந்தியாவோடு செல்வது என்று முடிவெடுக்கலாம். அல்லது பாகிஸ்தானோடு செல்வதாக முடிவெடுக்கலாம். அல்லது தனித்திருக்கவும் முடிவெடுக்கலாம்.

அத்தகைய தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களில் ஒன்றுதான் காஷ்மீர்.

1846-ல் அமிர்தசரஸ் உடன்படிக்கை மூலம் பிரிட்டாஷரிடம் இருந்து 75 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீரை விலை கொடுத்து வாங்கிய டோக்ரா வம்சத்தினர் அதனை பிரிட்டீஷ் இந்தியாவுக்கு உட்பட்ட ராஜ்ஜியமாக ஆட்சி செய்து வந்தனர்.

இந்தியா விடுதலை பெற்றபோது டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிசிங் காஷ்மீரை ஆண்டு வந்தார்.

ஹரி சிங்குக்கு எதிரான போராட்டம்

ஆனால், அவரது ராஜ்ஜியத்தின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்தனர். டோக்ரா வம்ச ஆட்சியில் இந்த பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு பங்கோ, மதிப்போ இருக்கவில்லை; மாறாக அவர்கள் துன்பங்களுக்கு ஆளாயினர் என்ற அதிருப்தி இருந்தது. எனவே டோக்ரா வம்ச ஆட்சிக்கு எதிராக ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி போராடி வந்தது. அப்போது காஷ்மீரை டோக்ரா வம்சத்துக்கு விற்ற அமிர்தசரஸ் உடன்படிக்கை கையெழுத்தாகி 100 ஆண்டுகள் ஆகியிருந்தன. காஷ்மீரை டோக்ரா வம்சத்தினருக்கு பிரிட்டாஷார் விற்ற அந்த உடன்படிக்கை செல்லாது என்று கூறி தேசிய மாநாட்டுக் கட்சி போராடிவந்தது.

அத்துடன் பிரதிநிதித்துவ ஆட்சி ஒன்று அமைந்து அந்த ஆட்சிதான் காஷ்மீரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவேண்டும் என்று ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி வலியுறுத்தி வந்தது.

இந்தப் பின்னணியிலும், மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் சேருவதா அல்லது பாகிஸ்தானுடன் சேருவதா அல்லது, தனித்திருப்பதா என்பது பற்றி தடுமாற்றத்திலேயே இருந்தார் என்று பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்.

சூஃபி ஞான மரபின் செல்வாக்கு மிகுந்திருந்த காஷ்மீர் முஸ்லிம்கள் தங்கள் ராஜ்ஜியம் பாகிஸ்தானுடன் செல்வதை விரும்பவில்லை, ஷேக் அப்துல்லாவுக்கும் அப்படி ஒரு விருப்பம் இருக்கவில்லை. இந்து ராஜ்ஜியமான காஷ்மீர், மதச்சார்பற்ற இந்தியாவில் சேர்வதை ஜம்முவில் இருந்த இந்துக்களே விரும்பவில்லை என்பதோடு, அப்படி சேரவேண்டும் என்று கோரியவர்களை இந்து விரோதிகள் என்றும் அவர்கள் வருணித்தனர் என பிரபல காஷ்மீர் விவகார வல்லுநரும், ‘காஷ்மீர் டுவார்ட்ஸ் இன்சர்ஜன்சி’ என்ற நூலின் ஆசிரியருமான பால்ராஜ் புரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பழங்குடிகளின் ஊடுருவல்

இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை (North West Frontier Province) சேர்ந்த பழங்குடிகள் 1947 அக்டோபரில் நவீன ஆயுதங்களோடு காஷ்மீருக்குள் புகுந்தனர். பூஞ்சில் இருந்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவது அவர்களது நோக்கம்.

அவர்களை எதிர்கொள்ள மன்னர் ஹரிசிங் படைகளால் முடியவில்லை. இந்நிலையில், தமது அரசாட்சியைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியாவுடன் இணைந்துகொள்ள சம்மதிக்கும் ஆவணத்தில் அவர், பல நிபந்தனைகளோடு 1947 அக்டோபர் 26-ம் தேதி கையெழுத்திட்டார். பாதுகாப்பு, வெளிவிவகாரம், தொலைத் தொடர்பு ஆகியவை மட்டுமே இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இந்த ராஜ்ஜியத்தின் மீதான தமது இறையான்மையை இந்த உடன்படிக்கையின் எந்த ஷரத்தும் பாதிக்காது என்றும் அவர் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்தியப் படைகள் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பழங்குடி ஊடுருவல்காரர்களை விரட்டிக்கொண்டு பாகிஸ்தான் எல்லைவரை சென்றன. அது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முதல் போருக்கு வழி வகுத்தது.

பாதுகாப்புபடத்தின் காப்புரிமைSOPA IMAGES/GETTY IMAGES

இந்நிலையில், 1947 நவம்பர் 2-ம் தேதி ஆல் இந்தியா ரேடியோவில் பேசிய ஜவஹர்லால் நேரு, அமைதி திரும்பியவுடன் ஜம்மு காஷ்மீர் மக்கள் கருத்தை அறிய சர்வதேச மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அந்த மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களின் எதிர்காலம் முடிவு செய்யப்படும் என்றார்.

ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதி

இதையடுத்து, 1947 டிசம்பர் 31-ம் தேதி பாகிஸ்தானைப் பற்றி ஐ.நா.வுக்கு ஒரு புகார் அனுப்பியது இந்தியா. அந்தப் புகாரில், ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது இந்தியா.

அந்த வாக்குறுதி வாசகம்:

“ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்திய அரசு ஆதாயம் அடைய முயல்கிறது என்ற தவறான எண்ணத்தை நீக்கும் வகையில், ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்டு, சகஜ நிலை திரும்பியவுடன், இந்த மாநிலத்தின் மக்கள் தங்கள் தலை விதியை சுதந்திரமாக முடிவு செய்வார்கள் என்பதை இந்திய அரசு தெளிவாக்க விரும்புகிறது. உலக அளவில் ஏற்கப்பட்ட முறையில் கருத்தறியும் வாக்கெடுப்பு ( ‘ரெஃபரண்டம்’ அல்லது ‘பிளபிசைட்’ ) நடத்தப்பட்டு அதன் மூலம் அந்த முடிவு எட்டப்படும். சுதந்திரமான, நியாயமான கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐ.நா.வின் மேற்பார்வை அவசியம்”.

விஷயம் ஐ.நா.வுக்கு சென்றவுடன் அது இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்துவதற்கே முதலில் முயன்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடிவின்படி இந்தியா -பாகிஸ்தான் பற்றிய ஐ.நா. ஆணையம் அமைக்கப்பட்டது.

ஐ.நா. தீர்மானம்

1948 ஏப்ரல் 21-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானம் கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்தும் பேசியது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டுமா, பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா என்பதை அந்த மாநில மக்கள் ஜனநாயக முறையில் சுதந்திரமாக, நியாயமாக நடத்தப்படும் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யவேண்டும் என்பதை இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே விரும்புவதாக அந்த தீர்மானம் குறிப்பிடுகிறது. அத்துடன் அந்த மாநிலத்தில் இருந்து பழங்குடி ஊடுருவல்காரர்களும், அந்தப் பகுதியின் குடிமக்கள் அல்லாத பாகிஸ்தானியர்களும் அங்கிருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் உறுதி செய்யவேண்டும், அங்குள்ள வெகுஜன அரசு, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்குத் தேவையான அளவு குறைவான படைகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற படைகளை இந்தியா விலக்கிக்கொள்ளவேண்டும் என்பவற்றை முன் நிபந்தனைகளாக ஐ.நா. தீர்மானம் குறிப்பிட்டது.

ஐநா பாதுகாப்பு அவை (கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைANADOLU AGENCY/GETTY IMAGES
Image captionஐநா பாதுகாப்பு அவை (கோப்புப்படம்)

மாநிலத்தின் குடிமக்கள் யாருடன் இணைவது என்பது பற்றி முடிவெடுக்க முழு வாய்ப்பையும், சுதந்திரத்தையும் இரண்டு நாடுகளும் அளிக்கவேண்டும். ஐ.நா. நியமிக்கும் கருத்து வாக்கெடுக்கும் நிர்வாகிக்கு சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்துவதற்கான எல்லா அதிகாரங்களையும் இந்தியா அளிக்கவேண்டும். அதுவரை முக்கிய அரசியல் குழுக்களின் பிரதிநிதிகள் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்றும் அந்த நிபந்தனை குறிப்பிட்டது.

ஆனால், பாகிஸ்தான் முழுவதும் வெளியேறவேண்டும். இந்தியாவுக்கு முழு உரிமை இருப்பதால், இந்தியப் படைகளையும் வெளியேறச் சொல்வது ஆக்கிரமிப்பாளரையும், ஆக்கிரமிக்கப்பட்டவர்களையும் சமமமாக நடத்துவது போலாகும் என்று இந்தியா கருதியது. பாகிஸ்தானும் இந்த நிபந்தனையை எதிர்த்தது. அதன் பிறகும் ஐ.நா.வில் பல முறை இதே போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், 1957க்குப் பிறகு இந்தியாவுக்குப் பாதகமான எந்த தீர்மானமும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிறைவேறாதபடி அப்போதைய சோவியத் ஒன்றியம் பார்த்துக்கொண்டது.

பிறகு, தாங்கள் நாடு ஜம்மு காஷ்மீரில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த சூழ்நிலையிலும் ஒப்புக்கொள்ளாது என்று 1964ல் ஐ.நா.விடம் தெரிவித்தது இந்தியா.

அதன் பிறகும் காஷ்மீர் விவகாரம் ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டதுண்டு. ஆனால், குறைந்தது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், தற்போது காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை இன்று நடக்கும் ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டம் விவாதிக்கிறது.

-BBC_Tamil

TAGS: