டிரம்ப் – நரேந்திர மோதி தொலைபேசி உரையாடல்: பிராந்திய விவகாரம் பற்றி பேசியதாகத் தகவல்

பிராந்திய விவகாரம் பற்றியும், இரு தரப்பு விவகாரம் பற்றியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

டிவிட்டரில் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் இதுபற்றிப் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, உரையாடல் இதமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பிராந்திய விவகாரம் பற்றிப் பேசும்போது, அதீத உணர்வெழுச்சியான பேச்சு, இந்திய எதிர்ப்பு வன்முறைகளைத் தூண்டுதல் ஆகியவற்றில் இந்தப் பிராந்தியத்தில் சில தலைவர்கள் ஈடுபடுவது அமைதிக்கு உகந்தது அல்ல என்று பிரதமர் தெரிவித்ததாக பிரதமரின் மற்றொரு டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.

பிராந்திய விவகாரம் குறித்து என்று அவர் கூறியிருப்பது, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமை நீக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள உறவுச் சிக்கலை குறிப்பது என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. -BBC_Tamil

TAGS: