ப. சிதம்பரம் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டார்; வாயில் கதவை ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்

இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க இன்று மறுத்திருந்த நிலையில், அவர் இன்று, புதன்கிழமை இரவு, சிபிஐ அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார் .

சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

அதற்குமுன் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார்.

அவரது செய்தியாளர் சந்திப்புக்குப் பின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்ததாக செய்திகள் வெளியாகின.

பின்னர் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்திற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன், சிதம்பரத்தின் வீடு அமைந்துள்ள ஜோர் பாக் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த டெல்லி காவல் துறையினரும் வந்திருந்தனர்.

அதன்பின் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சிதம்பரம் நாளை, வியாழக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

‘சுதந்திரமா உயிரா என்றால் சுதந்திரத்தையே தேர்வு செய்வேன்’

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில், சுதந்திரமா உயிரா என்று கேட்டல் தாம் சுதந்திரம் வேண்டும் என்றுதான் தேர்வு செய்வேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தமது வழக்கறிஞர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், தாமோ தமது குடும்ப உறுப்பினர்களோ ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.

“சிபிஐ அல்லது அமலாக்கத் துறை தமக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தமது பெயர் குறிப்பிடப்படவில்லை,” என்றும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறாக இருக்க தாமும் தனது மகனும் தவறு செய்தது போன்ற பிம்பம், பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்களால் உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

1947க்கு முந்தைய காலகட்டம் சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படுவதன் காரணம் சுதந்திரத்துக்காக போராட வேண்டும் என்பதுதான் என்று செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார் சிதம்பரம்.

சிபிஐ தம்மை விசாரணைக்கு அழைத்ததால் தாம் கைதில் இருந்து இடைக்கால விலக்கு கோரியதாகவும், 13 முதல் 15 மாதங்கள் வரை தாம் கைது செய்யப்படவில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.

“டெல்லி உயர் நீதிமன்றம் தமக்கு முன் பிணை வழங்க நேற்று மறுத்தபின், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக ஆலோசனை தெரிவித்தனர். நேற்று இரவு முழுதும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கறிஞர்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்தேன். இன்றும் நான் சட்டத்திடம் இருந்து தப்ப முயல்வதாக என் மீது குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் நான் நீதி கோரிக் கொண்டிருக்கிறேன்,” என்றார் சிதம்பரம்.

வெள்ளியன்றுதான் தனது மனு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும், நீதிபதிகளின் சுதந்திரம் மற்றும் விவேகம் ஆகியவற்றில் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முற்பட்டபோது சிதம்பரம் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமலேயே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு வந்திருந்த சிபிஐ அதிகாரி ஒருவர் நுழைவாயில் கதவை குதித்து உள்ளே சென்றார்.

“இந்த அரசாங்கம் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு நடந்து கொள்கிறது. இதுவரை இருபது முறை எனக்கு சம்மன் வழங்கப்பட்டது. சிபிஐயின் விருந்தாளியாக நான் இருந்துள்ளேன்; குற்றப்பத்திரிகையும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.”

“இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திருப்பி, தொலைக்காட்சிகளுக்கு பரபரப்பான காட்சிகளை தருவதற்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.”

“இதுவரை 25 முறை சம்மன் கொடுத்தபோது என் தந்தை ஆஜராகியுள்ளார். நானும் அழைத்துபோது, ஆஜராகியுள்ளேன். ஒருமுறை உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் பேசவேண்டியிருப்பதால், ஆஜாராமுடியாது என அவர் தெரிவித்தபோது, சிபிஐ மறுத்தது. சிபிஐ சொன்னதற்கு ஏற்ப உச்சநீதிமன்றத்தில் வழக்குக்கு தரும் முக்கியத்துவத்தை விட சிபிஐ விசாரணைக்கு முக்கியத்துவம் அளித்து ஆஜரானார். இந்தமுறை தேவையற்ற வகையில் கைது செய்துள்ளார்கள்.”

“இது யாரையொ திருப்திப்படுத்தப்படுத்த நடத்தப்படுகிறது.” என சிதம்பரத்தின் கைதுக்கு பிறகு பேசிய கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: