வேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், ஆதி திராவிடர்களின் இடுகாட்டிற்கென அரை ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நாராயணபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த 55 வயதான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய அங்குள்ள ஆற்றங்கரையில் செய்யச் செல்லும்போது, தங்களது நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து ஆற்றின் மேல் உள்ள பாலத்தின் வழியாக குப்பனின் சடலத்தை எடுத்துச் சென்றவர்கள், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் சடலத்தை இறக்கினர். கீழே இருந்தவர்கள் சடலத்தைப் பெற்றுக் கொண்டு, மண்ணாற்றங் கரையில் குப்பனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
குப்பனின் சடலம் இறக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று புதன்கிழமையன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
நாராயணபுரம் கிராமம் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. அங்கே ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி ஆந்திர மாநிலப் பகுதியில் ஓர் இடுகாடு இருக்கிறது. பொதுவாக இறந்தவர்கள் அந்த இடுகாட்டில் புதைக்கப்படுவதுதான் வழக்கம்.
ஆனால், குப்பன் விபத்தில் இறந்ததால் அவரது உடலை எரிக்க முடிவுசெய்துள்ளனர். பொதுவாக ஆற்றங்கரையில்தான் உடல்கள் எரியூட்டப்படும் என்ற நிலையில், அந்த இடத்திற்கு பட்டா நிலத்தின் வழியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் பின்னணியில்தான் சடலம் பாலத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது.
ஆனால், வீடியோ வெளிவந்ததையடுத்து இந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்த நிலையில், இன்று வாணியம்பாடி வட்டாட்சியர் அந்தப் பகுதியில் இது தொடர்பாக ஆய்வு நடத்தினார்.
இதற்குப் பிறகு, நாராயணபுரம் ஊராட்சி பணதோப்பு பகுதியில் அரசுக்குச் சொந்தமாக உள்ள 3.16 ஏக்கர் நிலத்தில், 50 சென்ட் நிலம் ஆதி திராவிடர்களின் இடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. விரைவில், தகன மேடைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், ஊடகங்களில் வெளியான இது தொடர்பான செய்திகளை மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட துணை ஆட்சியர் பிரியங்காவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “சடலம் இறக்கப்பட்ட சனிக்கிழமையன்று எல்லோருமே அலுவலகத்தில்தான் இருந்தோம். இது தொடர்பாக யாருமே எங்களைத் தொடர்புகொள்ளவில்லை. ஏன், காவல் துறையைக்கூட தொடர்புகொள்ளவில்லை. விசாரித்தால், பட்டா நிலத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்கிறார்கள். ஆதிதிராவிடர் தரப்பில், யார் மறுப்புத் தெரிவித்தது என்பது குறித்து தெளிவாகச் சொல்ல மறுக்கிறார்கள். இதனால் சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்க முடியவில்லை. தற்போது இடுகாட்டிற்கென நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது” என பிபிசியிடம் கூறினார்.
சடலத்தை எரியூட்டும் சடங்கில் பங்கேற்க வந்தவர்கள், சடலம் எடுத்துச் செல்ல மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலத்தின் வழியாகத்தான் வந்திருக்கிறார்கள். தவிர, வழக்கமாக இம்மாதிரி சடலம் செல்லும்போது பிரச்சனை ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்வார்கள். இந்த முறை ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது தெரியவில்லை என்கிறார் துணை ஆட்சியர்.
அரசு ஒதுக்கிக்கொடுத்த நிலத்தில் தகன மேடைக்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்திற்குள் புறம்போக்கு நிலத்தை மயான நிலமாக மாற்றி உத்தரவிடப்படும் என துணை ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். -BBC_Tamil