“அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகம்” – நிர்மலா சீதாராமன்

சமீபத்தில் இந்தியாவின் சில பெருநிறுவனங்கள் அறிவித்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் உண்டான வேலை இழப்பு, உற்பத்தித் துறையில் உண்டாகியுள்ள சரிவு உள்ளிட்டவற்றால் இந்தியப் பொருளாதாரம் சவாலைச் சந்தித்து வரும் நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சர்வதேச அளவில் என்ன நடக்கிறது என்பதை முதலில் தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறிய நிர்மலா சீதாராமன், சர்வதேச பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ள 3.2% எனும் அளவைவிட குறைக்கபடலாம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாக இருப்பதாக கூறிய அவர், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பொருளாதார நுகர்வு குறைந்துள்ளதாகவும் கூறினார்.

வளரும் நாடுகள் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளும் பொருளாதார தேக்க நிலையை எதிர்கொண்டுள்ளதாவும் நிர்மலா தெரிவித்தார்.

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்றும் சீனா தனது நாணயத்தின் மதிப்பை குறைத்தது சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளதாவும், உலகின் மிகப்பெரிய 10 பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அப்பட்டியலில் இருக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇந்திய வாகன தயாரிப்பு துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக சில நிறுவனங்கள் வாகன தயாரிப்பை குறைத்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோதி கூறியதைப் போல வளங்களை உருவாக்குபவர்களை தாங்கள் மதிப்பதாகவும், கடந்த ஆட்சியில் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

விஜயதசமி நாளான அக்டோபர் 8 முதல் வருமான வரிக் கணக்கு, தாக்கல் செய்தவரின் அடையாளத்தை அறியாத அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

“மையப்படுத்தப்பட்ட சேவை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைசூரில் உள்ள ஒருவர் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கை கௌகாத்தியில் உள்ள அதிகாரி சரிபார்க்க முடியும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவருடன் அதிகாரி நேரில் தொடர்புகொள்ளும் தேவை இருக்காது, ” என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் மேலும் சில பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று நிர்மலா கூறினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர், வாகன உற்பத்தித் துறையினர், வங்கி மற்றும் பங்குச் சந்தைகள் தொடர்புடைய துறையினர் உள்ளிட்டோருடன் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தமது துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதிக்கான கடன் வழங்குதலை மேம்படுத்த தனி அமைப்பு உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: