முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்

டெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.

கடிதம்

இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.

10-ஆம் தேதி

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி மூச்சுத்திணறலால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 10-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

உடல்நிலை

இதைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ஹர்ஷவர்தன், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் விசாரித்தனர்.

சிகிச்சை பலனின்றி

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது இதயமும் நுரையீரலும் செயல்பட வைப்பதற்கான உயிர் காக்கும் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டன. எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அருண் ஜேட்லி பதவி

அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்தார்.

19 மாதம் சிறைவாசம்

இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையால் மாணவரணி தலைவராக இருந்த ஜேட்லி கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் விடுதலையாகி பாஜகவில் பல்வேறு பதவிகளில் அலங்கரித்தார்

tamil.oneindia.com

TAGS: