இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பீ.ஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம். இந்த “ஐ.என்.எக்ஸ்” மீடியா நிறுவனம், 2007 மார்ச் மாதத்தில், அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதியைக் கேட்க, அந்த அனுமதி, 2007 மே மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இந்த அந்நிய முதலீடு வழங்குவது தொடர்பான ஊழல் வழக்கை, 15.5.2017 அன்று பதிவு செய்த சி.பீ.ஐ, அதற்கான அடுத்தகட்ட விசாரணைகளைத் தொடங்கியது. ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகான இந்த வழக்கு விசாரணையே, தற்போது சிதம்பரத்தை சிறையில் தள்ளியிருக்கிறது.
ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்புள்ள “அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் கன்ஸல்டன்ஸி பிரைவேட் நிறுவனம்” எனும் நிறுவனத்துக்கு, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அளித்த பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையைத்தான், இந்த வழக்குக்கான அடிப்படை ஆதாரமாக சி.பீ.ஐ எடுத்துக்கொண்டு இருக்கிறது. இந்தக் காசோலையை வைத்து விசாரித்த சி.பீ.ஐ அதிகாரிகளும் அமலாக்கப் பிரிவுகளின் அதிகாரிகளும், முதலில் கார்த்தி சிதம்பரத்தைக் கைதுசெய்தனர். பின்னர், அவரது ஒடிட்டர் பாஸ்கரராமனை, வழக்கில் சேர்த்துக்கொண்டனர். இவர்கள் தவிர, இந்திரா முகர்ஜி, பீற்றர் முகர்ஜி ஆகியோர், இந்த வழக்கில் ஏற்கெனவே பிணை பெற்றுள்ளனர்.
இந்த விசாரணையின் போது, சங்கிலித் தொடர்புபோல் பல நிறுவனங்களின் முதலீடுகள், பங்கு மாற்றங்கள், இயக்குநர் நியமனங்களை சி.பீ.ஐ விசாரித்து, வலுவான ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது. குறிப்பாக, “ஸ்பான் பைபர்”, “சத்யம் பைபர்”, “கிரியா எப்.எம்.சி.ஜி டிஸ்ரிபியூட்டர் பிரைவேட் லிமிடெட்”, “சி.பி.என் பிளேஸ்மென்ட் அன்ட் மேனேஜ்மென்ட் சென்டர்”, “வாசன் ஹெல்த் கேர்”, “ஸ்பார்க் கேப்பிட்டல்”, “நோர்த் ஸ்டார் சொஃப்ட்வேர் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட்”, “ஜி.ஐ.சி”, “கேஸ்டில் கார்டன் க்ளோபல் அட்வைசரி ப்ரமோட்டர்”, “அன்ஸ்பிரிட்ஜ் ஹோல்டிங் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்”, “ஐ.என்.எக்ஸ் மீடியா”, “ஏ.ஜி.எஸ் ஹெல்த்”, “ஆர்ட்டீவா டிஜிட்டல் லிமிடெட்” ஆகிய இந்த 13 கம்பெனிகளிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ, விவரங்களைச் சேகரித்ததென்பது குறிப்பிடத்தக்கது.
ப.சிதம்பரம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு இணை அமைச்சராக இருந்தவர். நிதி மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர். ஆகவே, இந்த வழக்கை மிகவும் கவனமுடன் விசாரிக்க வேண்டும் என்பதில், முதலில் இருந்தே சி.பீ.ஐ அதிகாரிகள், முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்திருந்ததை டெல்லி உயர் நீதிமன்றத்திலும் கைது செய்யப்பட்ட பிறகு டெல்லியில் உள்ள சி.பீ.ஐ. நீதிமன்றத்திலும் எடுத்து வைத்த வாதங்களில் இருந்து வெளியே வந்திருக்கிறது.
குறிப்பாக, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன், தன்னைக் கைது செய்யக்கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, 31.5.2018 அன்றே அந்தப் பாதுகாப்பைப் பெற்றார் சிதம்பரம். அதன் பிறகு, இந்த வழக்கில் ஒரு முறை மட்டும் சி.பி.ஐ முன்பு ஆஜரானாலும், அவரை முறையாக விசாரித்து, வழக்குக்கு தேவைப்பட்ட தகவல்களைப் பெற முடியவில்லையே என்ற முடிவுக்கு சி.பீ.ஐ வந்தது. அதனால்தான், டெல்லி உயர் நீதிமன்றத்தில், “சிதம்பரத்துக்கு முன் பிணை வழங்கக் கூடாது” என்று, மத்திய அரசு வழக்கறிஞர் துஷர் மேத்தா, ஆணித்தரமான வாதங்களை எடுத்துவைத்தார்.
பொதுத் தேர்தல் முடிந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க அரசு மத்தியில் அமைந்த பின்னர், சம்பந்தப்பட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, 23.8.2019 அன்று ஓய்வுபெற்ற நிலையில், அதற்கு மூன்று நாள்கள் முன்பாக, 20ஆம் திகதியன்று, ப.சிதம்பரத்தின் முன் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார். கைது செய்யப்படுவதிலிருந்து ப. சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு, 15 மாதங்களுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால், இந்த காலகட்டத்தில் சி.பீ.ஐ, அமலாக்கத்துறை, ப. சிதம்பரத்துக்கு எதிரான இந்த வழக்கில் போதிய ஆதாரங்களைத் திரட்டிவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தாலும், உடனடியாக அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. “அயோத்தி வழக்கு விசாரணையின்போது, வேறு எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டோம்” என்று ஏற்கெனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துவிட்டார். அதே போல் “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உத்தரவு இல்லாமல் நான் எப்படி இந்த வழக்கை விசாரிக்க முடியும்” என்று, விரைவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் போகும் நீதிபதி ரமணாவும் கைவிரித்து விட்டார்.
இந்தச் சூழ்நிலை, சிதம்பரத்துக்கு தலைவலியைக் கொடுத்தது. கைதாவதிலிருந்து அவரால் தப்பிக்கவும் முடியவில்லை. ஆனால், ஒரு நாள் சி.பீ.ஐ பிடியில் சிக்காமல் இருக்க சிதம்பரம் தலைமறைவானார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவரது வழக்கை உடனே விசாரிக்க மறுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு வந்த சிதம்பரம், “நான் தலைமறைவாகவில்லை. நீதி கிடைக்க சட்ட ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தேன்” என்று பத்திரிக்கையாளர் மத்தியில் பேசினார். பிறகு தனது இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் வீட்டின் நுழைவாயில் திறக்காத நிலையில், சி.பீ.ஐ அதிகாரிகள், சுவர் ஏறிக் குதித்துச் சென்று கைதுசெய்யும் சூழல் உருவானது.
சிதம்பரம் ஒரு நாள் தலைமறைவானதற்கு, அவர் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்போர் சதவீதம் குறைவாகவே இருக்கிறது. அதேபோல், சி.பீ.ஐ இரண்டு மணிநேரத்துக்குள் ஆஜராகுங்கள் என்று “சம்மன்” கொடுத்ததும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் ஆதாரம் இல்லாமல் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவரை, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருப்பவரை சி.பீ.ஐ கைதுசெய்யுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, வாதப் பிரதிவாதங்களில் யார் வெற்றிபெறப் போகிறார்கள்? சிதம்பரமா அல்லது சி.பீ.ஐயா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. இருந்தாலும், இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் புதிய போட்டி தொடங்கியிருக்கிறது.
“ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும், பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக பா.ஜ.க அரசை விமர்சித்துள்ளார். “சி.பீ.ஐ மற்றும் அமலாக்கத்துறை, பா.ஜ.க அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ, “சட்டம் தன் கடமையைச் செய்கிறது. அதில் பா.ஜ.க.வின் தலையீடு எதுவும் இல்லை” என்று கூறி, “நாட்டை ஆண்ட கட்சியான காங்கிரஸ் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டமா” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். “அரசியல் பழிவாங்கல்” என்று இந்தக் கைதை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கிறது. குறிப்பாக, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும், சிதம்பரத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், சோனியா காந்தி, இதுவரை நேரடியாகக் கருத்து எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார்.“அரசியல் பழி வாங்கல்” என்று காங்கிரஸ் கட்சி எடுக்கும் இந்தப் பிரசாரத்தை, “ஊழலில் புரட்சி செய்கிறது காங்கிரஸ் கட்சி” என்று, பாரதீய ஜனதா கட்சி தாக்குதல் தொடுத்துள்ளது.
இதுவரை காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே ஏற்பட்ட பிரசாரப் போரில், பாரதீய ஜனதா கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், பாரதீய ஜனதா கட்சிக்கு, வட மாநிலங்களில் செல்வாக்குத்தான் பெருகி வருகிறதே தவிர, காங்கிரஸ் கட்சிக்கு “நல்ல காலம் பிறக்கும்” என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இன்னும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் அயோத்தி வழக்கு முடிவுக்கு வந்து, உத்தர பிரதேசத்தில் இராமர் கோயில் கட்டப்படும் என்றால், “நல்ல காலம்” எப்போது திரும்பிவரும் என்று காங்கிரஸ் காத்திருக்க வேண்டிய சூழலே உருவாகும்.
இதுபோன்ற நிலையில் சிதம்பரம் கைது, அவருக்காக காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டுவது எல்லாவற்றையும் “ஊழலுக்கு காங்கிரஸ் ஆதரவு” என்ற முத்திரையைக் குத்தி, தேசிய அரசியலில் பா.ஜ.க மட்டுமே இனி எதிர்காலம் என்ற நிலையை நோக்கி பா.ஜ.க. தலைவர்கள் நகருகிறார்கள். இதை எதிர்கொள்ளும் பலம் காங்கிரஸுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
(எம். காசிநாதன்)
-tamilmirror.lk