காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றி உச்சநீதிமன்றம் அக்டோபரில் விசாரிக்கும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது.

மேலும் இது குறித்த மனுக்களுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும் என்றும், ஐந்து பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு அக்டோபரில் இந்த மனுக்களை விசாரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீருக்கு சென்று அவரின் கட்சி தலைவரும், முன்னாள் எம்எல்ஏ யூசூஃப் தாரிகாமியை சந்திக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சீதாராம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுகுறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “நாங்கள் உங்களை அங்கு செல்ல அனுமதிக்கிறோம். நீங்கள் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். அதைத்தாண்டி எதற்காகவும் அங்கு செல்லக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சீதாராம் யெச்சூரி, யூசூஃப் தாரிகாமியை சந்தித்து அவரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 9.55 மணிக்கு இன்டிகோ விமானம் மூலம் ஸ்ரீநகர் புறப்படுகிறார் சீதாராம் யெச்சூரி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்ட மாணவருக்கு அனுமதி

மேலும் ஸ்ரீநகரில் உள்ள தனது பெற்றோரை சந்திக்க அனுமதி கோரி சட்ட மாணவர் சயீத் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளித்த உச்சநீதிமன்றம், அவர் ஜம்மு காஷ்மீருக்கு சென்று தனது பெற்றோரை பார்க்கலாம் என்றும் திரும்பி வந்தவுடன், பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு திடீரென நீக்கப்பட்டத்திலிருந்து காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு நிலைமையை சென்று பார்வையிட அரசியல் தலைவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

வார இறுதியில், காஷ்மீருக்கு செல்ல முற்பட்ட ராகுல் காந்தி, திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். -BBC_Tamil

TAGS: