லே(லடாக்): கில்கித்-பால்டிஸ்தானும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிரடியாக பேசியிருப்பது பாகிஸ்தானை பெரும் பீதியில் உறைய வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனை லடாக் யூனியன் பிரதேச மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் லடாக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவை நீக்க வேண்டும் என்பது எங்களது நீண்டநாள் கோரிக்கை. ஜனசங்கம் காலந்தொட்டே இதை வலியுறுத்தி வருகிறோம். அன்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியைத்தான் இன்று நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
370-வது பிரிவு நீக்கம் குறித்து பாகிஸ்தான் ஏன் கதற வேண்டும்? பாகிஸ்தான் கதறுவதற்கு பதிலாக தாம் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் மீறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமல்ல கில்கித்-பால்டிஸ்தானையும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. கில்கித்-பால்டிஸ்தானும் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசியுள்ளார்.