இந்திய ரிசர்வ் வங்கி தமது உபரி நிதியில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டது, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், இந்தியப் பொருளாதாரத்தில் தற்போதுள்ள சிக்கல்களை இது தீர்க்குமா என்பது குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:
கே. ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது?
ப. உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு (reserve) பணத்திலிருந்து ஒரு தொகையை அரசுக்கு அளிக்கும்படி கேட்டார்கள். அதற்கு அவர் மறுத்தார். நம்முடைய ரிசர்வ் வங்கியில் இன்றைய தேதிக்கு 430 பில்லியன் டாலர் அளவுக்கு reserve இருக்கிறது. இந்த சொத்துகளின் அடிப்படையில்தான் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
இந்த reserve தங்கமாக இருக்கும், அன்னிய நாட்டு பணமாக இருக்கும், அரசு பத்திரங்களாக இருக்கும். இந்த 430 பில்லியன் டாலர் சொத்தின் மதிப்பு நிலையாக இருக்காது. மாறிக்கொண்டே இருக்கும். வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் உள்ளே வரும், வெளிநாட்டு நாணயங்களை வாங்குவோம், தங்கம் என எல்லாம் சேர்ந்ததுதான் இந்த சொத்து. இது மாறிக்கொண்டே இருக்கும்.
அப்படி மாறும்போது, ஓரளவுக்கு இந்த சொத்தின் மதிப்பு அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் மதிப்பு ஒரு reserve ஆக இருக்கும். இதுதான் முதன்மையான reserve. அது தற்போது 6.91 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இது கருத்து ரீதியான reserve. ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள சொத்தை வித்தால்தான் இந்த reserve கையில் கிடைக்கும். அதுவரை, கருத்து ரீதியான reserveதான் இது.
உதாரணமாக, நீங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீட்டை வாங்குகிறீர்கள். அதன் மதிப்பு சில வருடங்களில் 1.25 கோடி ரூபாயாக மாறுகிறதென வைத்துக்கொள்வோம். கூடுதலாக இருக்கும் 25 லட்ச ரூபாய் என்பது அந்த வீட்டை விற்றால்தான் உங்கள் கையில் கிடைக்கும். அதுவரை அது கருத்து ரீதியான லாபம்தான். அதுபோலத்தான் இதுவும்.
ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு இந்த கருத்து ரீதியான லாபத்தை தன்னிடம் கொடுக்க வேண்டுமெனக் கேட்டது. அப்போது ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் மறுத்துவிட்டார். ஏனென்றால், அதை அவரால் கொடுக்க முடியாது. ரிசர்வ் வங்கியிடம் உள்ள சொத்துகளை விற்காமல் அவரால் கொடுக்க முடியாது என்பதுதான் அதற்குக் காரணம்.
மேலும், நிதி ரீதியாக சவால்கள், பிரச்சனைகள் வந்தால் எதிர்கொள்வதற்காகவே அந்தப் பணத்தை ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கிக்கென சில பொறுப்புகள் இருக்கின்றன. முதலாவதாக நிதி ரீதியான ஸ்திரத்தன்மை, பண ரீதியான ஸ்திரத்தன்மை, செலாவணி தொடர்பான ஸ்திரத்தன்மை – இந்த மூன்றையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும். இதில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அரசுக்கு இதுபோன்ற பொறுப்புகள் இல்லை.
இந்த மூன்று பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் ரிசர்வ் வங்கிக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் ஏதோ வர்த்தக யுத்தம் நடந்தால்கூட, இந்தியாவில் இந்த மூன்றும் பாதிக்கப்படும். இதையெல்லாம் சந்திக்க மேலே சொன்ன reserve அவர்களுக்குத் தேவைப்படும்.
இது தவிர, நிஜமாகவே கையில் கிடைத்த லாபம் ஒரு reserveஆக இருக்கும். இந்த இரண்டு reserveகளும் சேர்ந்து மொத்தமாக சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இதில் கருத்து ரீதியான லாபத்தை கொடுக்க உர்ஜித் படேல் மறுத்துவிட்டார். அதற்குப் பிறகுதான் சக்திகாந்த தாஸ் புதிய ஆளுநராக வருகிறார்.
இவர் ஆளுநராக வந்த பிறகு, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு கமிட்டி நிறுவப்படுகிறது. ராகேஷ் மோகன் உள்ளிட்ட முன்பு ரிசர்வ் வங்கியில் இருந்தவர்கள் இந்தக் கமிட்டியில் இடம்பெற்றிருந்தார்கள்.
- இந்திய ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அரசுக்கு அளிப்பது ஏன்?
- நலமான பொருளாதாரத்தை சுட்டும் 5 அம்சங்கள் – இந்தியாவின் நிலை என்ன?
இந்த கமிட்டியானது, ரிசர்வ் வங்கியில் எவ்வளவு reserve இருக்க வேண்டும், எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். அதாவது ரிசர்வ் வங்கியின் பொருளாதார முதலீட்டுச் சட்டகம் (Economical Capital Framework) எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முடிவுசெய்ய வேண்டும். அதை இன்றைக்கு முடிவுசெய்துவிட்டார்கள்.
என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், கருத்தியல் ரீதியான லாபத்தைத் தொடக்கூடாது என்று கூறிவிட்டார்கள். அதாவது, உர்ஜித் படேல் என்ன சொன்னாரோ அதையேதான் இவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு, நிஜமாகவே கிடைத்த லாபத்தில் எவ்வளவு கொடுக்கலாம் என்பதை இந்த பிமல் ஜலான் கமிட்டி சொல்லியிருக்கிறது.
இந்த லாபம் தற்போது சுமார் 2.62 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இதில் எவ்வளவு பணத்தை ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பிமல் ஜலான் கமிட்டி முடிவுசெய்திருக்கிறது. ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5.5லிருந்து 6.5 சதவீதம் அளவுக்கான தொகையை ரிசர்வ் வங்கி தன் reserve ஆக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வழக்கமாக இந்த reserve எப்போதுமே 10-11 சதவீதம் இருக்கும். இந்த reserve சமீபகாலமாக குறைந்து வந்திருக்கிறது. காரணம், ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக இதிலிருந்து டிவிடென்டுகளை எடுத்து மத்திய அரசுக்கு வழங்கிவந்தது. இந்த நிலையில்தான் இப்போது அந்த அளவை 5.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறார்கள்.
தவிர, வழக்கமாக கருத்தியல் ரீதியான லாபத் தொகை சுமார் 31 சதவீதம் reserveஆக இருக்கும். அது தற்போது 20 சதவீதமாக இருந்தால் போதுமெனக் குறைக்கப்பட்டிருக்கிறது.
கே. மத்திய அரசுக்கு இந்தப் பணம் எதற்காகத் தேவைப்படுகிறது?
ப. மத்திய அரசின் நிதி நிலை மிக மோசமாகியிருப்பதுதான் இதற்குக் காரணம். அரசின் அன்றாடச் செலவுகளுக்கே பணம் இல்லை. இதைச் சமாளிக்க கடன் வாங்குகிறார்கள். அந்தக் கடன் ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியாகச் செல்கிறது. இந்த வருடம் அரசு வாங்கியிருக்கும் கடன் 7.3 லட்சம் கோடி ரூபாய். நாம் ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கான வட்டி, 6.6 லட்சம் கோடி ரூபாய்.
- இந்தியப் பொருளாதார மந்தநிலை: சிக்கல்கள், காரணங்கள், நம்பிக்கைகள்
- 7 லட்சம் கோடி கடன் வாங்கி அதில் 6.6 லட்சம் கோடி வட்டி கட்டும் நிலை
இது தவிர, பட்ஜெட்டிற்கு வெளியிலும் கடன் வாங்கியிருக்கிறார்கள். உதாரணமாக இந்திய உணவுக் கழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய மானியத்தை வழங்காமல், அவர்களை வெளியில் கடன் வாங்கச் சொல்கிறார்கள். இதையெல்லாம் சேர்த்தால் நம் உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கு வருகிறது. மாநில அரசுகளின் பற்றக்குறையையும் சேர்த்தால், கிட்டத்தட்ட 9 சதவீதம் வருகிறது. இது மிக மிக அதிகமான கடன் அளவு. இப்படியே பொருளாதாரம் எவ்வளவு நாளைக்குச் செல்ல முடியும்?
வாங்கும் கடனில் 3ல் இரண்டு பங்கை அன்றாடச் செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு மத்திய அரசு செய்யும் முதலீட்டுச் செலவே 3.28 லட்சம் கோடி ரூபாய்தான். பிரதமர் அடுத்த ஐந்தாண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடுசெய்யப்படும் என்கிறார். அப்படியானால் இந்த ஆண்டு 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே சுமார் 19 லட்சம் கோடிதான். இதில் எங்கிருந்து 20 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்?
முதலீட்டுச் செலவான 3.28 லட்சம் கோடி ரூபாயில் பெருமளவு ரயில்வேவுக்குச் சென்றுவிடும். ரயில்வேயைவிட்டுவிட்டால், அடிப்படைக் கட்டுமானத்தில் அரசு செலவழிக்கப்போவது மிகவும் சொற்பம்.
நம் பொருளாதாரம் மிகக் கடுமையானதாக மாறியிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது வரி விதித்து தவறு. பணம் இருக்கும் இடத்தில் வரி விதித்து வருவாயை அதிகரிக்கலாம் என நினைக்கிறார்கள். அது தவறு. நாம் நம் உள்நாட்டு உற்பத்தியின் அளவைப் பெரிதாக்கினால், வரியை அதிகரிக்காமல் வருமானம் பெறலாம். இன்று அரசின் வருவாய் குறைந்ததற்குக் காரணம், நம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக கீழே வீழ்ந்திருப்பதுதான். அதனால், வரி வருவாயும் குறைந்துவிட்டது.
அடுத்ததாக ஜி.எஸ்.டி. அதனை அவசர கோலத்தில் அமல்படுத்தியதால் அதில் பல பிரச்சனைகள். ஆகவே அதிலிருந்து எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் வரவில்லை. இதை சரிசெய்ய வேண்டுமானால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். வரிவிகிதத்தை அல்ல.
ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றில் எப்படி தவறு செய்தார்களோ, அதேபோன்ற தவறுதான் இப்படி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிவிதித்தது. இப்போது அதைத் திருத்த வேண்டிய கட்டாயம்.
வேறொரு விஷயமும் நடந்துவருகிறது. பொதுவாக ரிசர்வ் வங்கிக்கு நிஜமாகக் கிடைத்த லாபத்தில், அவசரகால நிதிக்கு ஒரு தொகை ஒதுக்கப்படும். மீதத் தொகை அரசுக்கு அளிக்கப்படும். குறைந்தபட்சம் 30 ஆயிரம் கோடி ரூபாயும் அதிகபட்சம் 60 ஆயிரம் கோடி ரூபாயும் இதுபோல வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், 2013-14க்குப் பிறகு அவசரகால நிதிக்கென எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை. எல்லா லாபமுமே அரசுக்கு வழங்கப்பட்டுவிடுகிறது. 2017-18ல் இப்படி 50 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு வருவாய் 1.23 லட்சம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஐம்பதாயிரம் கோடியாக இருந்த லாபம் எப்படி இந்த ஆண்டு 1.23 லட்சம் கோடியாக உயர்ந்தது என்பது தெரியவில்லை. ரிசர்வ் வங்கியின் கணக்கு – வழக்குப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரியும். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை.
பொதுவாக, ரூபாயின் மதிப்பு கீழே சரிகிறதென்றால் ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள டாலர்களை விற்பனை செய்யும். இதன் மூலம் ரூபாயின் சரிவு தடுக்கப்படும். அல்லது மேலே ஏற்றப்படும். அப்படி ஒரு சூழல் இல்லாத நிலையில், இவர்கள் வெளிச்சந்தையில் டாலர்களை விற்றிருக்கலாமோ என நினைக்கத்தோன்றுகிறது. அதிலிருந்துதான் இவ்வளவு பெரிய லாபம் கிடைத்திருக்கும் எனக் கருதுகிறேன். இதனால், என்ன நடக்கிறதென்றால் ரூபாயின் மதிப்பு கீழே செல்லும்போது டாலர்களை விற்று அந்தச் சரிவை நிறுத்தும் திறன் குறையும். இது மிகப் பெரிய ரிஸ்க்.
கே. இப்போது மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 1.76 லட்சம் கோடி ரூபாய், இந்திய அரசு சந்திக்கும் பொருளாதார பிரச்சனைகளைச் சந்திக்க ஓரளவுக்காவது உதவுமா?
ப. இல்லை. நம் பிரச்சனைகளைப் பார்க்கும்போது இது மிகக் குறைவான தொகை. இந்தத் தொகையை இரண்டு பகுதியாகப் பார்க்க வேண்டும். முதலாவதாக, reserveஐ 5.5 சதவீதமாகக் கிடைத்த உபரித் தொகை. இது ஐம்பத்து எட்டாயிரம் கோடி ரூபாய். வருவாயாகக் கிடைத்தது சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 90 ஆயிரம் கோடி ஏற்கனவே வருவாயாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுவிட்டது. 28 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்கனவே காலாண்டு டிவிடென்டாக பிப்ரவரியிலேயே கொடுக்கப்பட்டுவிட்டது. ஆக, சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் தற்போது கிடைக்கும்.
- இந்தியப் பொருளாதார மந்தநிலை: சிக்கல்கள், காரணங்கள், நம்பிக்கைகள்
- நலமான பொருளாதாரத்தை சுட்டும் 5 அம்சங்கள் – இந்தியாவின் நிலை என்ன?
ஆக, 1.76 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பகுதி பட்ஜெட்டிலேயே காட்டப்பட்டுவிட்டது. மீதம்தான் இப்போது கிடைக்கும். இது எப்படி என்றால், கூடுதலாக நோட்டுகளை அடுத்து பொருளாதாரத்தில் செலாவணிக்கு விடுவதைப்போல. இதற்கு எந்த அடிப்படையும் இருக்காது. இது பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
கே. கடந்த சில நாட்களில் இந்தியப் பொருளாதாரத்தில் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வாகன விற்பனை, நுகர்பொருள் விற்பனை சரிந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. பட்ஜெட்டில் கூறிய சில அம்சங்களை மாற்றி நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இப்போது ரிசர்வ் வங்கி பெருந்தொகையை மத்திய அரசுக்கு அளித்திருக்கிறது. அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் பொருளாதாரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
ப. ஏற்கனவே மிக மோசமான சூழலில்தான் இருக்கிறோம். அரசின் பணக் கொள்கை பொருளாதாரத்தை மேம்படுத்த பயனளிக்கவில்லை. ஆகவே இனி அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் ஜிஎஸ்டியைக் குறைக்கலாம். பெட்ரோல் மீதான வரிகளைக் குறைக்கலாம். விவசாயம் போன்ற கிராமம்சார்ந்த தொழில்துறைகளிலும் அடிப்படைக் கட்டுமானப் பணிகளிலும் செலவுசெய்யலாம். ஆனால், இதையெல்லாம் செய்ய அரசிடம் நிதி இல்லை.
தவிர, வளர்ச்சி விகிதம் கீழே விழுந்ததால் வரி வருவாய் கடுமையாகக் குறைந்திருக்கிறது. இது அரசு எதிர்பாராதது. இதையெல்லாம் சரிசெய்யத்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது வரிவிதித்தார்கள். ரிசர்வ் வங்கியிடமிருந்து பணத்தை வாங்கினார்கள். ஆனால், இந்தியப் பொருளாரத்தின் அளவை ஒப்பிடும்போது கிடைத்திருக்கும் தொகை மிகக் குறைவு.
கே. இந்தியப் பொருளாதாரம் இதற்கு முன்பாகவும் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போது இதுபோல, ரிசர்வ் வங்கியிடமிருந்து அதன் reserve தொகையை மத்திய அரசு வாங்கியிருக்கிறதா?
ப. இதுபோல எப்போதுமே நடந்ததில்லை. ரிசர்வ் வங்கி ஒரு சுயேச்சையான அமைப்பு. அதற்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத்தான் அதற்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதை சீர்குலைக்கும் வகையில் அரசு நடந்துகொள்ளக்கூடாது.
முந்தைய அரசுகளுக்கு இதுபோன்ற யோசனையே வந்ததில்லை. உர்ஜித் படேல் ஆளுநராக இருந்தபோதுதான் அரசுக்கு இப்படி ஒரு யோசனை வந்தது. அவர் அதற்கு மறுத்துவிட்டார். அதனால், அவர் பதவிவிலக வேண்டி வந்தது. அவர் சொன்னதைத்தான் பிமல் ஜலான் கமிட்டியும் சொல்லியிருக்கிறது. கருத்து ரீதியான லாபத்திலிருந்து பணம் எடுக்கக்கூடாது என கமிட்டி சொல்லியிருக்கிறது. ஆனால், அவர்கள் reserve வைத்துக்கொள்ள வேண்டிய பணத்தின் சதவீதத்தைக் குறைத்தார்கள். அதைவைத்துக்கொண்டு அரசு இந்தப் பணத்தை எடுத்திருக்கிறது.
ப. மத்திய அரசிடம் தற்போது நல்ல பொருளாதார அறிஞர் இல்லை. கடந்த எழுபதாண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்திற்கு பல மிகப் பெரிய அறிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். மொகல்நாபிஸ், கே.என். ராஜ், வி.கே.ஆர்.வி. ராவ், சுக்மாய் சக்கரவர்த்தி, மன்மோகன் சிங், கௌசிக் பாசு, ரகுராம் ராஜன் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த அரசில்கூட, அரவிந்த் சுப்பிரமணியன், உர்ஜித் படேல், பனகாரியா போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.
பொருளாதாரத்தை வழிநடத்த புரொஃபஷனல் நிபுணர்கள் தேவை. அவர்கள் ஆலோசனைகளின் பேரில்தான் முடிவுகளை எடுக்க வேண்டும். மேலே சொன்னதுபோல பெயர் சொல்லக்கூடிய அறிஞர்கள் தற்போது அரசில் இல்லை.
பணக் கொள்கை பலன் தரவில்லை. தனியார் முதலீடுகளைச் செய்ய தயாராக இல்லை. தேவைதான் பிரச்சனை. தேவை இல்லாததால்தான் பிரச்சனை. உற்பத்தி முடங்கிப்போயிருக்கிறது. அரசு இந்தச் சூழலில்தான் தலையிட வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.
இப்போது கிடைத்திருக்கும் பணத்தைக்கூட அவர்கள் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை. பற்றாக்குறை முன்பின்னாக இருந்தாலும், இந்தப் பணத்தை அவர்கள் முதலீடு செய்ய வேண்டும். கிராமப்புற முதலீடுகளைச் செய்ய வேண்டும். யார் நுகர்வார்களோ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தொழில்துறைக்குக் கொடுக்கக்கூடாது. அவர்களிடம் ஏற்கனவே பெருமளவில் பணம் இருக்கிறது. அவர்கள் பொருளாதாரம் சீரடையட்டும் என எதிர்பார்த்திருக்கிறார்கள். சாதாரண மக்கள்தான் பல ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோன்ற செலவுகளை இப்போது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். -BBC_Tamil