மாலத்தீவுகளில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் சொற்போர், வாக்குவாதம் நடத்தப்பட்டது.
சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி பாகிஸ்தான் தரப்பை கூச்சலிட்டு அமரச் செய்தனர். சர்வதேச தளத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் முயற்சி செய்து வந்தாலும் இதுவரை அதற்கு தோல்வியே எஞ்சியுள்ளது.
மாலத்தீவுகளில் நேற்று நடைபெற்ற தெற்காசிய சபாநாயகர்களின் மாநாட்டில் இந்தியா,பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.இந்த மாநாட்டில் பாகிஸ்தான் மக்களவையின் துணை சபாநாயகர் காசிம் சூரி காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார்.
காஷ்மீர் மக்கள் ஒடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனை உலக நாடுகள் கண்மூடிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் எழுப்புவதற்கு பலத்த ஆட்சேபம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றும் காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை ஆதரிப்பதை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்த அவர், தீவிரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா பாகிஸ்தான் தரப்பில் வாதம் எதிர்வாதம் வலுத்து கடும் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து குறுக்கிட்ட மாலத்தீவுகள் அதிபர் இருதரப்பினரும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார்.
-athirvu.in