காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு மாதம் – பிரச்சனை தீர்ந்துவிட்டதா?

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று சாமானிய இந்திய மக்கள் நம்புகிறார்கள்.

இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியானதில் இருந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரிய அளவில் வன்முறை ஏதும் நிகழவில்லை என்பதைக் கூறி இந்திய அரசும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது. இந்த மாற்றத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இதன் மூலம் ஒருவரால் கருதிக் கொள்ள முடியும்.

காஷ்மீர் விவகாரம் தங்களுடைய உள்நாட்டுப் பிரச்சினை என்று இந்தியா கருதுகிறது. இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் தீர்க்கப்படாத பிரச்சனையாக காஷ்மீர் உள்ளது என்றும், அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறுகிறது.

தங்களுடைய எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று பிரிவினைவாதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளாக, இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதம் நிகழ்ந்துவருகிறது. பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ஆதரவு சக்திகளும் இருக்கின்றன, ஆனால் அவை குறைவாகவே உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பது அவர்கள் கருத்து.

சர்வதேச அளவில் ஜம்மு காஷ்மீர் என்பது சர்ச்சைக்குரிய பகுதி.

காஷ்மீர்படத்தின் காப்புரிமைREUTERS

இந்திய சுதந்திரச் சட்டத்தின் கீழ் அளித்த பிரிவினை திட்டத்தின்படி, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் சேருவதற்கான விருப்பத் தேர்வு வாய்ப்பு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் மகாராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பாகிஸ்தானிய பழங்குடியினரின் ஊடுருவலுக்கு எதிராக இந்தியாவின் உதவியைப் பெறுவதற்காக 1947 அக்டோபரில் இந்தியாவுடன் சேருவதற்கு அவர் முடிவு செய்தார்.

அதன் பிறகு போர் மூண்டது. இதில் தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா கேட்டுக் கொண்டது. இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் சேருவது குறித்து பொது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று ஐ.நா. தீர்மானம் பரிந்துரை செய்தது. எல்லைக் கட்டுப்பாடு கோடு என்று கூறப்படும், போர் நிறுத்த எல்லையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்த யோசனையை ஏற்று 1949 ஜூலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1956ல் இந்தியா அரசியல் சட்டம் 370-ஐ உருவாக்கியது. அதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டன. இப்போது அந்த விதிகளை இந்தியா ரத்து செய்துவிட்டது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளது என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

காஷ்மீர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திய அரசின் முடிவு ஜம்முவில் பொதுவான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது உண்மை. இந்த முடிவு குறித்து லடாக்கில் லே நகரில் கொண்டாட்டங்கள் இருந்தன. கார்கில் பகுதி மக்கள் எப்போதும் இந்தியாவுடன் இருக்கவே விரும்பினர். ஆனால் 370வது பிரிவின் கீழ் தரப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துடன் இருக்க விரும்பினர். எனவே அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை.

ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஏழு மில்லியன் மக்களும், பெரும்பான்மை முஸ்லிம்கள், காஷ்மீர் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நம்புகிறார்களா? தடை உத்தரவு நீக்கப்பட்டு, பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து பாதுகாப்புப் படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு தான் இதை நாம் அறிந்து கொள்ள முடியும். இருந்தபோதிலும், இந்தியாவுக்கு எதிராக அளவற்ற கோபம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

களத்தில் இருந்து செய்தி சேகரித்த மூத்த பத்திரிகையாளர் நிருபமா சுப்பிரமணியன் ட்விட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்: “இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று இவ்வளவு பேர் நம்புகிறார்கள் என்பது ஆச்சர்யமானது. களத்தில் உள்ள நிலவரம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. கொண்டாட்டம் என்ற திரை விலகியதும் தான் சவால்கள் வெளிப்படையாகத் தெரிய வரும்” என்று கூறியுள்ளார்.

காஷ்மீரி பத்திரிகையாளர் ராகுல் பாண்டிடா சமீபத்தில் காஷ்மீரில் இருந்து திரும்பியுள்ளார். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முதலாவது உறுதியான நடவடிக்கை இது என்று அவர் நம்புகிறார். “இது காஷ்மீர் பிரச்சினையின் முடிவு அல்ல. ஆனால் முடிவை நோக்கி இந்திய அரசு எடுத்துள்ள முதலாவது உறுதியான நடவடிக்கை” என்று அவர் கூறுகிறார்.

காஷ்மீர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசு அறிவித்த முடிவு தொடர்பாக மக்களின் மனநிலை பற்றியும், அவர்களுடைய கருத்துகள் குறித்தும் பிபிசியில் நாங்கள் விரிவாக செய்திகள் அளித்து வருகிறோம். பள்ளத்தாக்குப் பகுதியில் சூழ்நிலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, அடக்கி வைக்கப்பட்டுள்ள தங்கள் கோபம் வெளிப்படும் என்று மக்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.

தங்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலான இந்த முடிவை எடுக்கும்போது இந்திய அரசு தங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்பது அவர்களுடைய குறையாக உள்ளது. அவர்கள் பள்ளத்தாக்குப் பகுதியில் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால் அரசின் முடிவால், நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.

இந்தியாவின் முடிவு பற்றி தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று பிரிவினைவாதிகள் கூறுகின்றனர். தாங்கள் சுதந்திரத்துக்காகப்'' போராடுவதாகவும், இந்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும், சுதந்திரத்தைப் பெறும் தங்கள் முயற்சியை அது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர். காஷ்மீர் பிரச்சினை இப்போது மேலும் சிக்கலாகிவிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
<ul class="story-body__unordered-list">
<li class="story-body__list-item"><a class="story-body__link" href="https://www.bbc.com/tamil/global-49313828">காஷ்மீர்: இந்தியா மீதான பாகிஸ்தானின் வர்த்தகத் தடை - யாருக்கு அதிக பாதிப்பு?</a></li>
<li class="story-body__list-item"><a class="story-body__link" href="https://www.bbc.com/tamil/global-49367545">இந்திய சுதந்திர தினம் - லண்டனில் ஒருபுறம் கொண்டாட்டம், மறுபுறம் போராட்டம்</a></li>
</ul>
கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவின் அடுத்தடுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும்,
எதுவுமே பயன் தரவில்லை” என்று காஷ்மீரி பத்திரிகையாளர் ராகுல் பாண்டிடா கூறுகிறார். “கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரி தலைவர்கள் டெல்லியில் ஒரு மாதிரியும், பள்ளத்தாக்கில் வேறு மாதிரியும் பேசி வந்தனர். அதனால் மக்கள் மத்தியில் குழப்பம் இருந்து வந்தது. இந்தக் குழப்பத்துக்குப் பாகிஸ்தானை குறை கூற முடியாது. அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் தான் இதற்குப் பொறுப்பு” என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தானில் தெரிவிக்கப்படும் தீவிரமான கருத்துகளைப் பார்த்தால், காஷ்மீர் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக அந்த நாடு கருதவில்லை என்று தெரிகிறது. காஷ்மீர் பிரச்சினை இப்போது மீண்டும் சர்வதேச அரங்கிற்கு வந்துவிட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் ஷம்ஷத் அஹமது பிபிசியிடம் கூறினார். “அதை இந்தியா தான் உருவாக்கிக் கொண்டது. காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா உண்மையில் அக்கறை கொண்டிருந்தால், பேச்சுவார்த்தைக்கு வந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சனைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

காஷ்மீரின் தூதராக உலகெங்கும் தாம் செயல்படப் போவதாகவும், அவர்களுக்காக இறுதிவரை போராடப் போவதாகவும், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதி மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதி அளித்துள்ளார்.

“பள்ளத்தாக்குப் பகுதியில் பிரச்சினைகளை உருவாக்கும் அளவுக்கு” பாகிஸ்தானின் பொருளாதாரம் வலுவாக இல்லை என்பதாலும், போதிய அளவுக்கு சர்வதேச ஆதரவு இல்லை என்பதாலும் பாகிஸ்தான் எதுவும் செய்ய முடியாது என்பது இந்தியாவில் இப்போது பொதுவான கருத்து நிலவுகிறது. தன்னுடைய அரசுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளதாக இம்ரான்கான் நம்புகிறார்.

பல்வேறு வாய்ப்புகள் பற்றி நாங்கள் ஏற்கெனவே ஆயத்தங்கள் செய்து வருகிறோம். காஷ்மீரிகளின் `சுய நிர்ணய உரிமைக்கு' மதிப்பு அளிக்கும் வகையில் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்கள் குறித்து ஆயத்தம் செய்து வருகிறோம்'' என்று அவர் கூறியுள்ளார்.காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா விலக்கிக் கொண்டு, ஊரடங்கை ரத்து செய்து, ராணுவத்தினரை ராணுவ முகாம்களுக்கு திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைகளைத் தொடங்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் அரசு எழுப்பியுள்ளது. ஐ.நா.வில் செப்டம்பர் 27ல் உரையாற்றும் இம்ரான்கான், காஷ்மீர் பிரச்சினையை வலுவாக எழுப்புவார் என்று ஷம்ஷத் அஹமது கூறுகிறார். இந்தியப் பிரதமரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவரும் காஷ்மீர் பிரச்சினை பற்றி தனது உரையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சர்வதேச சமூகமும், உலக வல்லரசு நாடுகளும் காஷ்மீர் பற்றி குறைந்த அளவுக்கே அக்கறை காட்டியுள்ளன. அதற்குப் பதிலாக காஷ்மீர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியாவையும் பாகிஸ்தானையும் அவை வலியுறுத்தியுள்ளன.

அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது பற்றி குறிப்பாக எந்தக் கருத்தையும் பிரிட்டன் கூறவில்லை. ஆனால் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படும் அனைத்து புகார்களையும், “விரிவாக, முறையாக, முழுக்க வெளிப்படைத் தன்மையுடன்” விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தபோது காஷ்மீர் விவகாரம் குறித்து தாம் கவலை தெரிவித்ததாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் தெரிவித்தார். காஷ்மீர் நிலவரத்தை பிரிட்டன் தொடர்ந்து கண்காகாணிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதுதவிர இலங்கையில் யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முயற்சி செய்தது. சீனா, மலேசியா, துருக்கி ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயகக் கட்சியில் விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் ஒருவரான பெர்னி சான்டர்ஸ், கூட காஷ்மீர் பிரச்சினை பற்றி கவலை தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை மீண்டும் சர்வதேச அரங்கிற்கு வந்துவிட்டது என்று கருத்தாளர்கள் கூறுகின்றனர். அதற்கு இந்தியாதான் பொறுப்பு என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவின் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், காஷ்மீர் பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. அரசியல் சட்டம் 370 குறித்த அதனுடைய முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தின் முடிவை தள்ளுபடி செய்வது சாத்தியமற்றது என்று ராகுல் பாண்டிடா கூறுகிறார்.

“காஷ்மீர் விஷயத்தில் இனிமேல் முடிவை மாற்றிக் கொள்ள முடியாது” என்கிறார் அவர். சட்டத்தின் பரிசீலனையிலும் தங்கள் அரசின் முடிவு செல்லத்தக்கதாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமித் ஷாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் இடம் பிடிக்க வேண்டும் என்பது இரண்டாவது சவாலாக இருக்கும். ஆனால் இந்தியாவுக்கு எதிராக அங்கு நிலவும் கோபத்தைப் பார்த்தால் அது கடினமான பணியாக இருக்கும் என்று தெரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் குறித்தும் முடிவு எட்டப்படாத வரையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் தான் இருக்கும். அதுவும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் என்று இந்தியா கூறி வருகிறது.

ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் நடைமுறை சாத்தியமாக செயல்பட வேண்டும் என்று ராகுல் பாண்டிடா கூறுகிறார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை சர்வதேச எல்லைகளாக இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர். இரு நாடுகளுக்கும் இடையில் ஒருகாலத்தில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

முன்பு இருந்ததைவிட காஷ்மீர் பிரச்சினை இப்போது மிகவும் தீவிரமாகிவிட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் ஷம்ஷத் அஹமது கூறியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரிகளுடன் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண்பதைத் தவிர இப்போது வேறு வழி எதுவும் கிடையாது என்று அவர் குறிப்பிடுகிறார். “அவ்வாறு செய்ய முடியும்” என்கிறார் அவர். இந்தக் கருத்தை இந்தியாவில் பலரும் ஏற்க மாட்டார்கள்.

-BBC_Tamil

TAGS: