நீர்ப் பங்கீடு: கேரள, தமிழ்நாடு முதலமைச்சர்கள் பேச்சு

தமிழ்நாடு – கேரளா இடையிலான நதி நீர்ப் பங்கீடு குறித்து இரண்டு மாநில முதலமைச்சர்களும் இம்மாதம் 26ஆம் திகதி நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு, கேரளாவிடையே, காவிரி, முல்லை பெரியாறு, சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு, நெய்யாறு, பாண்டியாறு நீர்ப் பங்கீடு பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளன.இந்தாண்டில், சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்பாக, புதிய பிரச்சினை ஒன்றை கேரளா உருவாக்கியுள்ளது. அணை நீர்மட்டம் 50 அடி மழைக் காலத்தில் அணை நிரம்பினால் கோவை மாநகரில் குடிநீர் விநியோகத்துக்கு சிக்கல் எழாது.

ஆனால், கொள்கை முடிவை காரணம் காட்டி, கேரள நீர்ப்பாசனத் துறையினர், சிறுவாணி அணை முழுவதுமாக நிரம்ப விடாமல் செய்து வருகின்றனர். சமீபத்தில் கன மழை பெய்தும் சிறுவாணி அணை நீர்மட்டம் 42 அடிக்கு மேல் அதிகரிக்காத நிலையே உள்ளது. இந்நிலையில், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி நேற்று முன்தினம் கோவை சென்றிருந்தார். அவரை, தமிழக துணை சபாநாயகர் ஜெயராமன் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் கிருஷ்ணன் குட்டி கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைக்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. தமிழகம், கேரளா இடையிலான நீர்ப் பங்கீடு பிரச்சினை குறித்து இம்மாதம் 26ஆம் திகதி, இரண்டு மாநில முதலமைச்சர்களும் பேசித் தீர்வு காண்பர். பரம்பிக்குளம் ஆழியாறு, பாண்டியாறு, சிறுவாணி, காவிரி, முல்லை பெரியாறு என இரண்டு மாநிலங்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்துக்கும் இரண்டு முதலமைச்சர்களும் தீர்வு ஏற்படுத்துவர்” என்று கூறினார்.

இதேவேளை, ஜெயராமன் கருத்துத் தெரிவிக்கையில், ”கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி சித்துார் தொகுதியைச் சேர்ந்தவர். என் தொகுதிக்கு பக்கத்து தொகுதி என்பதால் சந்திக்க வந்தேன். இம்மாதம் 26ஆம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழினிசாமி திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்கவுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

-http://tamilmirror.lk

TAGS: