காஷ்மீர்: காதல், அன்பு, கவலைகளை பரிமாற கடிதங்களுக்கு மாறிய மக்கள்; தரைவழி தொலைபேசிகளால் பலன் உண்டா?

டெல்லியில் இருந்து ஒரு பெண்மணி இந்திய நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீர் பகுதியில் வாழும் தன் நண்பர்களுக்குக் கடந்த மாதம் அ ழகான கையெழுத்தில் ஒரு கடிதம் எழுதினார்.

ஜூலை மாதம் விடுமுறையின் போது அவர்களை அவர் சந்தித்துள்ளார். இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

“கடவுளே, அவ்வளவு கொடுமையான நேரங்கள்” என்று வலியை அந்த வரிகளில் வடித்திருக்கிறார்.

“விடியலுக்கு முந்தைய இரவு நீண்ட இரவாக, கார் இருளாக இருந்தது. இன்னும் விடியல் பிறக்கவில்லை” என “மிக மோசமாக மனம் உடைந்த நிலையில்” அவர் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த அளவு வேதனைக்கான காரணம் வெளிப்படையாகத் தெரிந்ததுதான்.

`கருப்பு இடைவெளி’

சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கும், இடையூறுக்கு ஆளாகியுள்ள அந்தப் பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதி முடக்கப்பட்ட நிலைக்கு கொண்டு வரப்பட்டது. மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஆளானார்கள்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், இந்தத் தனிமைப்படுத்தலின் தீவிரம் அதிகமானது. வீட்டு லேண்ட்லைன் தொலைபேசிகள், செல்போன்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. “தகவல் கருப்பு இடைவெளி” என்று உள்ளூர் பத்திரிகை ஆசிரியர் குறிப்பிடுவதைப் போன்ற, கடும் சூழலில் காஷ்மீர் மூழ்கிவிட்டது.

ஒரு மாத காலத்துக்குப் பிறகு – 80 சதவீத லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளுக்கு மீண்டும் சேவை தொடங்கிவிட்டதாக அரசு கூறியுள்ளதைத் தவிர – முடக்கப்பட்ட நிலை இன்னும் தொடர்கிறது.

டெல்லிக்கு சென்ற காஷ்மீரைச் சேர்ந்த தன்னார்வலர் பத்திரிகையாளரின் முகநூல் பதிவைப் பார்த்த பிறகு, இந்தப் பெண்மணி கடிதம் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

27 வயதான விகர் சயீத், புதிய தொழில் குறித்து சில சிந்தனைகளை ஆய்வு செய்வதற்கு இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்த தலைநகருக்கு விமானம் மூலம் சென்றுள்ளார்.

தெருவோர தொலைபேசி மையத்தில் இருந்து தன் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார் மன்சூர் அஹமது.படத்தின் காப்புரிமைABID BHAT

திடீர் உந்துதலில், தனது சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவை அவர் வெளியிட்டார். காஷ்மீரில் தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுடைய குடும்பத்தினர் பற்றிய முகவரியுடன் தனது இன்பாக்ஸ் மூலம் தகவல் கொடுக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். திரும்பி சென்றதும் “ஒவ்வொரு முகவரிக்கும் சென்று பார்க்க, தன்னால் இயன்றவரை முயற்சி செய்வதாக” அதில் அவர் கூறியிருந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து சயீத் உலகெங்கும் இருந்து இதுபோன்ற 17 தகவல்களுடன் ஸ்ரீநகருக்கு திரும்பிச் சென்றார். தெற்கு காஷ்மீரில் மூன்று மாவட்டங்களில் வாழும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு முகவரியிடப்பட்ட தகவல்கள் அவை. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் அவை.

பலர் டிஜிட்டல் தகவல்களை அனுப்பி இருந்தனர். மற்றவர்கள் காகிதத்தில் எழுதி, அதை புகைப்படம் எடுத்து முகநூல் மெசஞ்சர் மூலம் அவற்றை அனுப்பியிருந்தனர்.

டெல்லியைச் சேர்ந்த அந்தப் பெண்மணி – காஷ்மீரி அல்ல – அவர்களில் ஒருவர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உருவாகியிருந்த கவலை வெளிப்படையாகத் தெரிந்தது. காஷ்மீரில் உள்ள தொலைபேசி எண்களுக்கு டயல் செய்து தன் விரல்கள் எப்படி மரத்துப் போய்விட்டன'' என்பது பற்றியும், அப்போதும் வெற்றி கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இரவு நேரங்களில் பரபரப்பாக எழுந்து எனக்கு வந்திருக்கும் மெசேஜ்களைப் பார்ப்பேன், சில எண்களுக்கு டயல் செய்வேன், காஷ்மீருக்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பேன்” என்று அவர் எழுதியுள்ளார்.

காஷ்மீரில் சயீத் ஒவ்வொரு இடமாகச் சென்று, தன் மூலமாக வந்த தகவல்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் தபால்காரரைப் போல மாறியுள்ளார். முடக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று தகவல்களை ஒப்படைக்க அவர் ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டுச் சென்றார். உயிரற்ற, சிக்னல் இல்லாத அவருடைய செல்போன், மதிப்பு மிக்க செய்திகளைக் கொண்டு செல்லும் சாதனமாகிவிட்டது.

முகவரியில் உள்ள வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, கதவைத் தட்டி, என் செல்போனில் உள்ள அவர்களுக்கான தகவல்களைக் காண்பித்தேன். பெரும்பாலானவை நல்ல செய்திகள்'' என்று சயீத் கூறுகிறார்.
<figure class="media-landscape has-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/D4BF/production/_108736445_af88f83e-6fd1-4309-b696-0337c5e0a12c.jpg" alt="மாநிலத்துக்கு வெளியே வாழும் காஷ்மீரி மக்களின் விடியோ தகவல்களை ஒரு செய்தி நெட்வொர்க் நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது." width="976" height="549" data-highest-encountered-width="624" /><span class="off-screen">படத்தின் காப்புரிமை</span><span class="story-image-copyright">ABID BHAT</span></span><figcaption class="media-caption"><span class="off-screen">Image caption</span><span class="media-caption__text">மாநிலத்துக்கு வெளியே வாழும் காஷ்மீரி மக்களின் விடியோ தகவல்களை ஒரு செய்தி நெட்வொர்க் நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது.</span></figcaption></figure>
உணர்ச்சிகரமான தருணங்களும் இருந்தன. ஒரு வீட்டில், வட இந்தியாவில் சண்டீகரில் கல்லூரிக்குச் செல்லும் மகனை வைத்திருக்கும் பெற்றோர், தேர்வில் தங்கள் மகன் இரண்டாவது இடம் பிடித்த தகவலை இதன் மூலம் அறிந்து கொண்டனர்.
அவருடைய தாயார் என்னை கட்டிக் கொண்டு அழுதார்” என்று சய்யீத் தெரிவித்தார்.

“நீ என் மகனைப் போல இருக்கிறாய்” என்று அந்தத் தாயார் அவரிடம் கூறியுள்ளார்.

தகவல் தொடர்பை முடக்கி வைத்தால், மறந்து போன வழக்கங்களை மீளுருவாக்கம் செய்வதில் அது முடியும். காஷ்மீரில், அது கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் உருவாக்கிவிட்டது.

26 வயதாகும் இர்பான் அஹமது ஸ்ரீநகரில் தனது தெருவில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவியுடன் காதல் கொண்டிருக்கிறார். தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், சந்திப்புகள் குறித்து தெரிவிக்கவும் காகிதத்தில் எழுதி, “காகிதப் பந்துகளாக” தங்களுடைய வீடுகளுக்கு இடையில் வீசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இது காதல், ஏக்கம், ஆர்வம் ஆகியவற்றின் கசங்கிய கடிதங்களின் தொடர்பாக இருந்து வந்திருக்கிறது.

“முடக்கப்பட்ட நிலைக்குப் பிறகு, நாங்கள் தொலைபேசியில் பேசிக் கொள்ள முடியவில்லை, சந்திக்க முடியவில்லை. எனவே நாங்கள் கடிதங்கள் எழுதத் தொடங்கினோம்” என்கிறார் அஹமது. இவர் ஓர் அலுவலகத்தில் வரவேற்பு அலுவலராகப் பணியாற்றுகிறார்.

“ஒருவரைக் காணாமல் இன்னொருவர் எப்படி தவிப்புக்கு ஆளாகிறோம் என்பதையும், தகவல் தொடர்பு துண்டிப்பு எவ்வளவு கொடுமையானது என்பதையும் நாங்கள் பேசிக் கொள்வோம். எனவே, நான் ஒரு பதில் கடிதம் எழுதி, காகிதத்தைக் கசக்கி அந்தப் பெண்ணின் படுக்கை அறையில் வீசுவேன். அப்படி சில கடிதங்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம்” என்று சய்யீத் தெரிவித்தார்.

மக்கள் பெரும்பாலும் உபயோகத்தை நிறுத்திவிட்டிருந்த வீட்டு தரைவழி தொலைபேசி இணைப்புகள், இந்த சேவை முடக்கம் காரணமாக இப்போது புத்துயிர் பெற்றிருக்கின்றன.

காஷ்மீரிகளின் கடிதங்கள்படத்தின் காப்புரிமைABID BHAT

இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 56 கோடி இன்டர்நெட் சந்தாதாரர்கள் உள்ளனர். – உலகில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஒப்பீட்டளவில் பார்த்தால் 2.3 கோடி தரைவழி தொலைபேசி இணைப்புகள் மட்டுமே உள்ளன.

ஆனால் காஷ்மீரில் புதிய தரைவழி தொலைபேசி இணைப்புகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கிறார்கள் அல்லது உபயோகத்தில் இல்லாத இணைப்புகளை புதுப்பிக்க முயற்சிக்கிறார்கள். முடக்கநிலை இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், அதுபோன்ற பல தொலைபேசிகள் மீண்டும் உயிர் பெற்றிருக்கின்றன. ஆனால் “செயல்பாட்டு” இணைப்புகளை தங்களால் பெற முடியவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.

தெருக்களில் பாதுகாப்புப் படையினர் தற்காலிக தொலைபேசி பூத்களை அமைத்துள்ளனர் – ஒரு பிளாஸ்டிக் டேபிள், சில நாற்காலிகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள சீன தயாரிப்பு தொலைபேசி கருவி ஆகியவை அங்கே உள்ளன. சில காவல் நிலையங்களில் இலவச அழைப்புகளுக்கு அனுமதிக்கிறார்கள்.

ஒரு பூத்தில், இந்த முடக்கநிலை மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் எப்படி முடக்கிவிட்டது என்பதை மன்சூர் அஹமது மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

சால்வை விற்பனை செய்யும் 55 வயதான அவர், காஷ்மீருக்கு வெளியே உள்ள , தனக்குப் பணம் தர வேண்டிய வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிரு்தார். “அவர்கள் எனக்குக் காசோலைகள் அனுப்பியுள்ளனர். நான் வங்கிக்குச் சென்றேன். சில வங்கிகள் திறந்துள்ளன. ஆனால் இணையத் தொடர்பு இல்லாததால், பணம் தருவதற்கு முடியாது என்று கூறிவிட்டார்கள். எனவே என் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, வங்கிகளுக்கு இடையில் பணமாற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்வதற்காக தொலைபேசி இணைப்பைத் தேடி தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

காஷ்மீரில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்படுவது வழக்கமானது தான்.படத்தின் காப்புரிமைAFP

ஸ்ரீநகரில் ஒற்றை அறை கொண்ட டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் யாஸ்மீன் மஸ்ரத் அலுவலகம் உள்ள பகுதியில் சில தொலைபேசி இணைப்புகள் செயல்படத் தொடங்கிவிட்டன. தன்னால் முடிந்த வரை மக்கள் தொடர்பு கொள்ள உதவி செய்வது என அவர் முடிவு செய்திருக்கிறார். ஆகஸ்ட் மத்தியில் அவர் தைரியமாக தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து, தனது ஒரே தொலைபேசி மூலம் இலவசமாக அழைப்புகள் செய்து கொள்ள அனுமதி அளித்தார்.

“நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால், சுருக்கமாக, விஷயத்தை மட்டும் பேசுவதற்காக தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்” என்று மக்களை கேட்டுக் கொள்ளும் நோட்டீஸ்கள் சுவரில் ஒட்டப்பட்டுள்ளன. வெகு சீக்கிரத்தில் அவருடைய அலுவலகத்துக்கு 500க்கு மேற்பட்டோர் வந்து குவிந்துவிட்டனர். அவருடைய சேவை பற்றி, வாய்வழி தகவல் பரவியதால், தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச அழைப்புகளை அவர்கள் செய்கிறார்கள்.

அவர்களில் இந்திய நகரங்களில் உள்ள டாக்டர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு தொடர்பு கொண்ட புற்றுநோயாளிகளும் உண்டு. உள்ளூரில் கிடைக்காத மருந்துகள் மற்றும் மருந்துவப் பரிந்துரைகளைக் கேட்டுக் கொள்வதற்காக அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஒரு நாள், மிகுந்த கவலையில் இருந்த 8 வயதான ஒரு சிறுமி தனது பாட்டியுடன் வந்தார். புற்றுநோய்க்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது தாயாருடன் பேச வேண்டும் என்று அந்தச் சிறுமி கூறினாள். 20 நாட்களாக அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகு இணைப்பு கிடைத்தபோது, “குணமடைந்து சீக்கிரம் வாருங்கள்” என்று தாயிடம் அந்தச் சிறுமி திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தாள்.

அது மிகவும் உணர்ச்சிகரமான நேரமாக இருந்தது'' என்கிறார் மஸ்ரத்.அறையில் உள்ள அனைவருமே விசும்பி அழுதனர்” என்கிறார். மற்றொரு சமயம், ஒரு ஆண் வந்து தனது மகனை தொலைபேசியில் அழைத்து, அவனுடைய தாத்தா சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தார்.

தரைவழி தொலைபேசிகள் மூலம் காஷ்மீருக்கு தொடர்பு கொள்வதும் சிரமமாக இருப்பதால், இந்தியாவில் வேறு பகுதிகளில் வாழும் காஷ்மீரி மக்கள் தங்கள் குடும்பத்தினரைப் பற்றிய தகவல்களுடன் மாநில செய்தி சேனலுக்கு தகவல்களை குவித்து வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த குலிஸ்தான் நியூஸ் (Gulistan News) என்ற செயற்கைக்கோள் சேனல் மற்றும் கேபிள் செய்தி நெட்வொர்க் நிறுவனம், நிறைய தகவல்கள் மற்றும் விடியோக்களைப் பெற்று, செய்தி அறிக்கைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், அவற்றைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்கிறது. காஷ்மீரில் உள்ள மக்களின் தகவல்களையும் அது ஒளிபரப்பு செய்கிறது. நூறுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்தானது குறித்த தகவல்களை தாங்கள் ஒளிபரப்பு செய்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது காஷ்மீரில் அதிக திருமணங்கள் நடைபெறும் காலமாகும். ஆங்கிலம் மற்றும் உருது மொழி செய்தி அறிக்கைகளில் கூடுதல் அடிவரிச் செய்தியாக அளித்ததுடன், வெளியில் வசிக்கும் மக்களின் விடியோ தகவல்களையும் ஒளிபரப்பு செய்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

காணாமல் போன தனது தந்தையைப் பற்றி தகவல் தெரிவிக்க டி.வி. நிலையத்துக்கு வந்திருக்கிறார் ஷோயிப் மிர்.படத்தின் காப்புரிமைABID BHAT

கடந்த வாரம் ஒருநாள் காலையில், 26 வயதான ஷோயிப் மிர் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள தொலைக்காட்சி அலுவலகத்துக்கு, முக்கியமான ஒரு வேண்டுகோளுடன் சென்றார் : காணாமல் போய்விட்ட தனது தந்தையை கண்டுபிடிப்பதில் உதவி செய்ய முடியுமா? என்பது அவருடைய கோரிக்கை.

12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெமினா என்ற பகுதியைச் சேர்ந்த 75 வயதான அவர், முந்தைய வாரம் காலையில் நடைபயிற்சிக்கு வெளியில் சென்ற பிறகு, காணாமல் போய்விட்டார். அந்தப் பகுதியில் தீவிரமாக தேடிப் பார்த்துவிட்டு, காவல் நிலையத்தில் காணாமல் போனவர் குறித்த புகார் செய்ததாக மிர் தெரிவித்தார். “சாலைகளில் யாரையும் காணவில்லை. எல்லாமே மூடிக் கிடக்கின்றன. முடக்கப்பட்ட நிலையை அமல் செய்வதில் காவல் துறையினர் தீவிரமாக உள்ளனர். என் தந்தையின் புகைப்படத்துடன் நான் இருக்கும் ஒரு விடியோ மெசேஜ் போட்டால், அவரைக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கலாம்” என்கிறார் அவர்.

குடும்பங்களை இணைக்க இந்தச் சேனல் உதவிகள் செய்து வருகிற நிலையில், தனது பணிகளை ஆற்றுவதற்கு சிரமப்படுகிறது. முடக்க நிலை காரணமாக, உள்ளூர் ஊடகங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளன. செய்தி சேகரிப்பை அது சிரமமாக்கிவிட்டது. 16 ஜி.பி. அளவுள்ள மூன்று முதல் ஐந்து பென்டிரைவ்களைக் கொண்ட ஒரு கூரியர் இந்தச் சேனல் அலுவலகத்தில் இருந்து டெல்லிக்கு தினமும் சென்று கொண்டிருக்கிறது. காஷ்மீர் செய்திகள் மற்றும் காட்சி விடியோக்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் டெல்லி அலுவலகத்தில் எடிட் செய்து ஒளிபரப்பு செய்யப் படுகின்றன.

உள்ளூர் பத்திரிகைகள் வழக்கமான 16 முதல் 20 பக்கங்கள் என்ற அளவில் இருந்து ஆறு முதல் எட்டு பக்கங்கள் என்ற அளவுக்கு சுருங்கிவிட்டன. ஸ்ரீநகரில் அரசு ஊடக மையத்தில் வைக்கப்பட்டுள்ள இன்டர்நெட் வசதியுடன் கூடிய 10 தற்காலிக கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்த 200க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், பல வாரங்களாக மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து இமெயில் பார்க்கிறார்கள், செய்திகள், படங்கள், விடியோக்கள் அனுப்புகிறார்கள். தகவலாளர்கள் செய்தி மற்றும் தகவல்களை தங்கள் பென்டிரைவ்களில் காப்பி செய்து கொண்டு, செய்தித்தாள்களை நிரப்புவதற்காக அலுவலகங்களுக்கு ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.”

“இந்த இடம் எங்கள் பொறுமையைச் சோதிப்பதற்கானது. ஒரு நாள் சில படங்களை அனுப்ப எனக்கு ஏழு மணி நேரம் ஆகிவிட்டது” என்று புகைப்பட செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இணைய சேவை துண்டிக்கப்படுவது காஷ்மீரில் புதிதல்ல. internetshutdown.in, என்ற இணையதளத்தின் பதிவின்படி காஷ்மீரில் இந்த ஆண்டில் இன்டர்நெட் சேவை முடக்கப்படுவது இது 51வது முறை என்று தெரிய வருகிறது. 2011 ஆம் ஆண்டில் இருந்து 170க்கும் மேற்பட்ட முறைகள் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 2016-ல் ஆறு மாத காலம் தொடர்ச்சியாக அவ்வப்போது துண்டிக்கப்பட்டதும் இதில் அடங்கும்.

தகவல் முடக்கம் மற்றும் செய்தியாளர்கள் பணிகளுக்கு தடைகளுக்கு எதிராக காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் எக்ஸிகியூட்டிவ் ஆசிரியர் அனுராதா பாசின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது“மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படும் செயல்” என்று அவர் கூறியுள்ளார். இந்த முடக்கம் காரணமாக, காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி ஊடகங்கள் செய்தி அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளும் செய்திகளை, காஷ்மீரில் வசிப்பவர்கள் பெற முடியாமல் இதன் மூலம் தடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக தீவிரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்டிருந்த பகுதியில், வன்முறையைத் தடுக்க, தகவல் முடக்கம் அவசியமானதாகிறது என்று அரசு கூறியுள்ளது. தீவிரவாதிகளுக்கு ஊக்கம் கொடுத்து வன்முறையை தூண்டிவிடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டுகிறது – காஷ்மீரின் மற்றொரு பகுதியை நிர்வகிக்கும் பக்கத்து நாடான பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.

“தீவிரவாதிகளுக்கும் அவர்களுடைய மாஸ்டர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பை துண்டித்துவிட்டு, அதே சமயத்தில் மக்களுக்கு நான் எப்படி இணைய சேவையை அளிக்க முடியும்? அதை அறிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் கூறியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற முடக்க நிலைகள், அதிக வன்முறையில் தான் போய் முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தகவல் தொடர்பு முடக்கம் பற்றி ஆய்வு செய்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜன் ரிட்ஜாக் என்பவர், வன்முறை அல்லாதவர்களை ஒன்று சேர்ப்பதைவிட, வன்முறையாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் தொடர்புடையதாக இது இருந்திருக்கிறது என தெரிய வருகிறது'' என்று கூறியுள்ளார்.இந்தியாவில் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், அஹிம்சை அணுகுமுறைகளுக்குப் பதிலாக, வன்முறை வழிகளைத் தேர்வு செய்யும்” கட்டாய நிலையை இந்த தகவல் முடக்கநிலை ஏற்படுத்திவிடும் என்று அவருடைய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. “இதற்கு நல்ல தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை சார்ந்திருக்க வேண்டியதில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரின் எதிர்காலம் பற்றி நிச்சயமற்ற நிலை இருப்பதால், தகவல் முடக்கம் எப்போது வாபஸ் பெறப்படும் அல்லது தளர்த்தப்படும் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சிறிதளவு நம்பிக்கைகள் இருக்கின்றன. கடந்த வாரம் ஒரு நாள் காலையில், ஸ்ரீநகரில் ஒரு செய்திச் சேனல் அலுவலகத்தில் தனி லைன் (leased line) வசதி உள்ள தொலைபேசி ஆச்சர்யப்படும் வகையில் உயிர் பெறது. அதற்கு குறைந்த அளவிலன உற்சாகம் காணப்பட்டது. அநேகமாக இனிமேல் எல்லாம் நல்லதாக நடக்கலாம்'' என்று தலைமை நிருபர் சயீத் ராவ்ப் கூறினார்.அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் தினமும் இயங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: